Scripture Portion: 2 kings 9-11
2 இராஜாக்கள் 9
1அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைகட்டிக்கொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ.2நீ அங்கே சேர்ந்தபோது, நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே உட்பிரவேசித்து, அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய்,3தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான்.4அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான்.5அவன் உட்பிரவேசித்தபோது, சேனாபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களெல்லாருக்குள்ளும் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாபதியாகிய உமக்குத்தான் என்றான்.6அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் வார்த்து, அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன்.7நான் என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், கர்த்தருடைய சகல ஊழியக்காரரின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படிக்கு நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடக்கடவாய்.8ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படிக்கு, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர் விடும் ஒரு நாய் முதலாய் இராதபடிக்கு, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் கருவறுத்து,9ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சரியாக்குவேன்.10யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்பண்ணுகிறவன் இல்லையென்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான்.11யெகூ தன் ஆண்டவனுடைய ஊழியக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்தில் வந்தது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனுஷனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான்.12அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான்.13அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தைப் படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள்.14அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் குமாரன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினான்; யோராமோ இஸ்ரவேலர் எல்லாரோடுங்கூட கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்துவைத்தான்.15ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணினயுத்தத்திலே, சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்; இது உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப்போகும்படி விடாதிருங்கள் என்றான்.16அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாய்க் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான்.17யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைப் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான்.18அந்தக் குதிரைவீரன்: அவனுக்கு எதிர்கொண்டுபோய், சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றான்.19ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான்.20அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.21அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன்தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள்.22யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லி சூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான்.23அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான்.24யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படத்தக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான்.25அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறிவருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள்.26நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான்.27இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப்போனான்.28அவனுடைய ஊழியக்காரர் அவனை இரதத்தின்மேல் எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவன் பிதாக்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.29இந்த அகசியா, ஆகாபுடைய குமாரனாகிய யோராமின் பதினோராம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.30யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல் வழியாய் எட்டிப்பார்த்து,31யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள்.32அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள்.33அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு,34உள்ளேபோய், புசித்துக் குடித்த பின்பு: நீங்கள் போய் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான்.35அவர்கள் அவளை அடக்கம்பண்ணப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையுமே அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை.36ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும்,37இன்னது யேசபேலென்று சொல்லக்கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.2 இராஜாக்கள் 10
1ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான்.2அதில்: உங்கள் ஆண்டவனுடைய குமாரர்கள் உங்களோடிருக்கிறார்களே; இரதங்களும், குதிரைகளும், அரணான பட்டணமும் ஆயுதங்களும் உங்களுக்கு உண்டே.3இப்போதும் இந்த நிருபம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய குமாரரில் உத்தமமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் ஆண்டவனுடைய குடும்பத்துக்காக யுத்தம்பண்ணுங்கள் என்று எழுதியிருந்தது.4அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள்.5ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள்.6அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரரின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள்.7இந்த நிருபம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் குமாரராகிய எழுபது பேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள்.8அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுகவாசலில் இரண்டு குவியலாகக் குவித்து வையுங்கள் என்றான்.9மறுநாள் காலமே அவன் வெளியே வந்து நின்று, சகல ஜனங்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் ஆண்டவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்?10ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான்.11யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச் சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு, யெகூ கொன்றுபோட்டான்.12பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது,13யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள்.14அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டுபேர்களாகிய அவர்களை ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.15அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி,16நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள்.17அவன் சமாரியாவுக்கு வந்தபோது, கர்த்தர் எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீருமளவும் சங்காரஞ்செய்தான்.18பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி.19இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான்.20பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே கூறினார்கள்.21யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினபடியினால், பாகாலின் பணிவிடைக்காரர் எல்லாரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததினால் பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருந்தது.22அப்பொழுது அவன், வஸ்திரசாலை விசாரிப்புக்காரனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவந்தான்.23பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து, பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி: பாகாலின் ஊழியக்காரரே அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான்.24அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பதுபேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான்.25சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளேபோய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும் போய்,26பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி,27பாகாலின் சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல மலஜலாதி இடமாக்கினார்கள்.28இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான்.29ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.30கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார்.31ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை.32அந்நாட்கள் முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து,33யோர்தான் துவக்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்குச் சமீபமான ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காதியர், ரூபேனியர், மனாசேயர் இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் முறிய அடித்தான்.34யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.35யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம் பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.36யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணின நாட்கள் இருபத்தெட்டு வருஷம்.2 இராஜாக்கள் 11
1அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்து போனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சத்தார் யாவரையும் சங்காரம்பண்ணினாள்.2யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளியறையில் ஒளித்துவைத்தார்கள்.3இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.4ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக்கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து,5அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும்.6மூன்றில் ஒரு பங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒரு பங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும்.7இப்படியே ஓய்வு நாளில் முறைப்படியே உங்களில் இரண்டு பங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும்.8நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்று கொண்டிருக்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலை செய்யப்படக்கடவன்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான்.9ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள்.10ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீது ராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.11காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம் தொடங்கி அதின் இடது பக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.12அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம் பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.13ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து,14இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள்.15ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறு பேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான்.16அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்று போட்டார்கள்.17அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கை பண்ணவும் செய்து,18பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான்.19நூறுபேருக்கு அதிபதிகளையும், தலைவரையும், காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான்.20தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள்.21யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.
Leave a Reply