Scripture Portion: Ezekiel 9-12

எசேக்கியேல் 9

1பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்; நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டுவரக்கடவர்கள் என்று சொன்னார்.
2அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள்.
3அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு,
4கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.
5பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,
6முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்.
7அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள்.
8அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான் மாத்திரம் தனித்து, முகங்குப்புற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.
9அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
10ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை; அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார்.
11இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.

எசேக்கியேல் 10

1இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திர நீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது.
2அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின் கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண்காண உள்ளே பிரவேசித்தான்.
3அந்தப் புருஷன் உள்ளே பிரவேசிக்கையில், கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன; ஒரு மேகம் உட்பிராகாரத்தை நிரப்பிற்று.
4கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று.
5கேருபீன்களுடைய செட்டைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல வெளிப்பிராகாரமட்டும் கேட்கப்பட்டது.
6அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்து சக்கரங்களண்டையிலே நின்றான்.
7அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து சணல்நூல் அங்கிதரித்திருந்த புருஷனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான்.
8கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது.
9இதோ, கேருபீன்களண்டையில் நாலு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அண்டையில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை வருணம்போலிருந்தது.
10அவைகள் நாலுக்கும் ஒரே சாயலான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருக்குமாப்போல் காணப்பட்டது.
11அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை.
12அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன.
13அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன்.
14ஒவ்வொன்றுக்கும் நாலு முகங்கள் இருந்தன; முதலாம் முகம் கேருபீன் முகமும், இரண்டாம் முகம் மனுஷமுகமும், மூன்றாம் முகம் சிங்கமுகமும், நாலாம் முகம் கழுகுமுகமுமாயிருந்தது.
15கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன்.
16கேருபீன்கள் செல்லுகையில் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை.
17அவைகள் நிற்கையில் இவைகளும் நின்றன; அவைகள் எழும்புகையில் இவைகளும் எழும்பின; ஜீவனுடைய ஆவி இவைகளில் இருந்தது.
18கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது.
19அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து, என் கண் காண பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன; கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
20இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன் தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன்.
21அவைகளில் ஒவ்வொன்றுக்கு நாலு முகமும், ஒவ்வொன்றுக்கு நாலு செட்டைகளும் இருந்தன; அவைகளுடைய செட்டைகளின் கீழ் மனுஷகைகளின் சாயல் இருந்தது.
22அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.

எசேக்கியேல் 11

1பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசூரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன்.
2அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர்.
3இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள்.
4ஆகையால் அவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லு, மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லு என்றார்.
5அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன்.
6இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
8பட்டயத்துக்குப் பயப்பட்டீர்கள், பட்டயத்தையே உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
9நான் உங்களை அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்கி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன்.
10பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
11இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்.
12என் கட்டளையின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
13நான் இப்படித் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்.
14அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
15மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய்ப்போங்கள், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள்.
16ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களை தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சகாலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்.
17ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
18அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள்.
19அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக்கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன்.
20அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.
21ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
22அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது.
23கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது.
24பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய்விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று.
25கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

எசேக்கியேல் 12

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.
3இப்போதும் மனுபுத்திரனே, நீ பரதேசம் போகும்படி பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பிரயாணப்படு; உன் ஸ்தலத்தைவிட்டு வேறே ஸ்தலத்துக்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டாரானபோதிலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள்.
4சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக.
5அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாய் அவைகளை வெளியே கொண்டுபோவாயாக.
6அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார்.
7எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலைமயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன்.
8விடியற்காலத்திலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
9மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னைப் பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா?
10இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு.
11நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள்.
12அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான்.
13நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான்.
14அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.
15அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
16ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
17பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து,
19தேசத்திலுள்ள ஜனங்களை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் குடிகளைக் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரைத் திகிலோடே குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் குடிகளுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும்.
20குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.
21பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
22மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன?
23ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லி வராதபடிக்கு நான் அதை ஒழியப்பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு.
24இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச்சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும்.
25நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
26பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
27மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள்.
28ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *