Scripture Portion: Ezekiel 28-31

எசேக்கியேல் 28

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
2மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.
3இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல.
4நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய்.
5உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று.
6ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்,
7இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள்.
8உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய்.
9உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே.
10மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் சாவதுபோல் சாவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
11பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
12மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.
13நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது.
14நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய்.
15நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.
16உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
17உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப்பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.
18உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.
19ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.
20பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
21மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் சீதோனுக்கு எதிராகத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
22 கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
23நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
24இஸ்ரவேல் வம்சத்தாரை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனித் தைக்கிற முள்ளும் நோவுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இராது; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள்.
25 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை, அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.
26அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாய்க் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சத்தோட்டங்களை நாட்டி, சுகமாய் வாழ்ந்து, நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 29

1பத்தாம் வருஷம் பத்தாம் மாதம் பன்னிரண்டாம் தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
3கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
4உன் வாயிலே துறடுகளை மாட்டி, உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
5உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.
6அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.
7அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப் போகப்பண்ணுவாய்.
8ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தை வரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.
9எகிப்துதேசம் பாழும் வனாந்தரமுமாகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்: நதி என்னுடையது, நான் அதை உண்டாக்கினேன் என்று சொன்னானே.
10ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.
11மனுஷனுடைய கால் அதைக் கடப்பதுமில்லை, மிருகஜீவனுடைய கால் அதை மிதிப்பதுமில்லை; அது நாற்பது வருஷம் குடியற்றிருக்கும்.
12எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க் கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்.
13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,
14எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜனன தேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பி வரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.
15அது இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்யங்களிலும் அற்பமானதாயிருக்கும்; அவர்கள் இனி ஜாதிகளை ஆளாதபடிக்கு அவர்களைக் குறுகிப்போகப்பண்ணுவேன்.
16அவர்களின் பிறகேபோய், அவர்களை நோக்கிக்கொண்டிருக்கிறதினால் இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குத் தங்கள் அக்கிரமத்தை நினைப்பூட்டாதபடிக்கு, இனி அவர்கள் இவர்களுடைய நம்பிக்கையாயிராமற்போவார்கள்; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
17இருபத்தேழாம்வருஷம் முதலாம் மாதம் முதலாம் தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
18மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினால் அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை.
19ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைப்பிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி, அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும்.
20அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
21அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் 30

1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள்.
3நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம்.
4பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகாவேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும்.
5எத்தியோப்பியரும், பூத்தியரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள்.
6எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோகும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிக்தோல் முதல் செவெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
7பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும்.
8நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
9நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது.
10கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக் கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன்.
11இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள்.
12அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நிய தேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி,
14பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து,
15எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன்.
16எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும்.
17ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள்.
18எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள்.
19இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
20பதினோராம்வருஷம் முதலாம் மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
21மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாகத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை.
22ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி,
23எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிவிடுவேன்.
24பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான்.
25பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோகும்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்து தேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
26நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 31

1பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
2மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?
3இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது.
4தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது.
5ஆகையால் வெளியின் சகலவிருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கொப்புகள் நீளமாயின.
6அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகலஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள்.
7அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.
8தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக்கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல.
9அதின் கிளைகளின் திரளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின்பேரில் பொறாமைகொண்டன.
10ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டபடியினாலும், அதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்துபோனபடியினாலும்,
11நான் அதை ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன்.
12ஜாதிகளில் வல்லவராகிய அந்நிய தேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆறுகளினருகே முறிந்தன; பூமியிலுள்ள ஜனங்களெல்லாரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்து போனார்கள்.
13விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தாபரித்தன; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின.
14தண்ணீரின் ஓரமாய் வளருகிற எந்த விருட்சங்களும் தங்கள் உயரத்தினாலே மேட்டிமை கொள்ளாமலும், தங்கள் கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும், தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கைவைக்காமலும் இருக்கும்பொருட்டு இப்படிச் செய்வேன்; மனுபுத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள்.
15 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அவனிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின.
16நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும். லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன.
17அவனோடேகூட இவர்களும், ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள்.
18இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடேகூட நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *