Scripture Portion: Job 14-16

யோபு 14

1ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.
2அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான்.
3ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ?
4அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை.
5அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர்.
6அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.
7ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்;
8அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,
9தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும்.
10மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?
11தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல,
12மனுஷன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
13நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.
14மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
15என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக.
16இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர்.
17என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர்.
18மலைமுதலாய் விழுந்து கரைந்துபோகும்; கன்மலை தன் இடத்தைவிட்டுப்பேர்ந்துபோகும்.
19தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர்.
20நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய்விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர்.
21அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான்.
22அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.

யோபு 15

1அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
2ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி,
3பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ?
4நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர்.
5உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர்.
6நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது.
7மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
8நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ?
9நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ?
10உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே.
11தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ?
12உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?
13தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர்.
14மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
15இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
16அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்?
17உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன் என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன்.
18ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன்.
19அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை.
20துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது.
21பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான்.
22இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான்.
23அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான்.
24இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும்.
25அவன் தேவனுக்கு விரோதமாகக் கைநீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான்.
26கடினக்கழுத்தோடும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான்.
27அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
28ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான்.
29அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை.
30இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினி ஜூவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான்.
31வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும்.
32அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்பு பச்சைகொள்வதில்லை.
33பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்து போகிற ஒலிவமரத்தைப் போலவும் அவன் இருப்பான்.
34மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப்போகும்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும்.
35அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.

யோபு 16

1அதற்கு யோபு பிரதியுத்தரமாக:
2இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்.
3காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
4உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும்.
5ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன்சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
6நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
7இப்போது அவர் என்னை இளைத்துப்போகச் செய்தார்; என் கூட்டத்தையெல்லாம் பாழாக்கினீர்.
8நீர் என்னைச் சுருங்கிப்போகப்பண்ணினது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்துக்கு முன்பாக உத்தரவு சொல்லும்.
9என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என் பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான்.
10எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள்; நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள்.
11தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து, துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார்.
12நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நெருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார்.
13அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார்.
14நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார்.
15நான் இரட்டுச்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன்.
16அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது.
17என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று.
18பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக.
19இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார்.
20என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
21ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும்.
22குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராதவழியே போவேன்.

யோபு 17

1என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
2பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
3தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைபடுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
4நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
5எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
6ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.
7இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
8சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
9நீதிமான் தன்வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
10இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.
11என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
12அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.
13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
15என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *