இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். ஒரு புதிய ஆய்வுக்குள்ளாக நாம் செல்லலாம். இதை வாசிக்கும் எல்லாருமே, இயேசுவைப் பற்றி அறிந்தவர்கள். இரட்சிக்கப்பட்டவர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் தான். ஆனால் நம்மில் நிறைய பேருக்கு உள்ள சந்தேகம் இதுதான்.
- நான் தேவனிடமிருந்து தூரமாகி விட்டேனா?
- தேவனிடம் செல்வதற்கு எனக்கு தகுதி இல்லை
- நான் பாவி, என்னால் தேவனிடம் நெருங்கவே முடியாது
- பிசாசு என்னை வேறொரு உலகுக்கு இழுத்து விட்டான். இனி என்னால் தேவன் பக்கம் வரவே முடியாது
- நான் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டு, சோர்ந்து விட்டேன். என்னால் ஜெயம் பெறவே முடியாது
- கர்த்தர் என்னை வெறுத்து இருப்பாரா?
இப்படி அநேக காரியங்கள் நம் சிந்தையில் அனுதினமும் வரும். நான் தேவனுக்கு அருகில் இருக்கிறேனா? அல்லது தூரமாகி விட்டேனா? என்ற கேள்வி வந்து நம் மனதில் போராடுகிறது. இதற்கு காரணம் என்ன? ஏன் தேவனிடமிருந்து தூரமான உணர்வு நமக்கு ஏற்படுகிறது?
- பாரம்பரியமான பிரசங்கங்கள், நீ தவறு செய்தால் தேவன் உன்னை வெறுத்து விடுவார். உன் பாவம் தேவனிடமிருந்து உன்னை பிரிக்கிறது. நீ ஒரு பாவி. தேவனிடம் இருந்து நீ தூரமாகி விட்டாய். நரகம் உனக்காகக் காத்திருக்கிறது என்று சொல்கிறது.
- கிருபையின் பிரசங்கங்கள், நீ செய்த தவறுக்கு, இனி மேல் செய்யப்போகும் தவறுக்கான தண்டனைகள் ஏற்கனவே சிலுவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. நீ உன் பரிகாரத்தை(பரிகாரியான இயேசுவை) ஏற்றுக் கொண்டால் போதும். தேவனிடம் நெருங்கி விடுவாய் என்று சொல்கிறது.
- சில இக்கால பிரசங்கங்கள், நீ என்ன செய்தாலும் பரவாயில்லை. இயேசு என்ற ஒருவரை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதும். உனக்காக பரலோகம் காத்திருக்கிறது என்று சொல்கிறது.
பாரம்பரியமான பிரசங்கம், எனக்கு பாவி என்ற தாழ்வு மனப்பான்மையை கொடுக்கிறது. கிருபையின் பிரசங்கம் என்ன என்பதை நான் முழுவதும் புரிந்து கொள்ளாமல் இருப்பதால், நான் என்ன பாவம் செய்தாலும் எனக்கு மன்னிக்கப்படும் என்ற உணர்வை மட்டும் அது தருகிறது. ஆனால் அதில் தேவனுக்கும் எனக்கும் ஏதேனும் உறவு இருக்கிறதா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை. மூன்றாவதாக உள்ள இக்கால பிரசங்கம் என்னை உலகப்பிரகாரமாக வாழ சுலபமாக அழைத்து செல்கிறது.
ஆனால் எது என்னை தேவனை நோக்கி அழைத்துச் செல்கிறது? தேவனோடு உள்ள உறவு என்றால் என்ன? வெறும் ஜெபிப்பதும், வேதம் வாசிப்பதும் மாத்திரம்தான் கிறிஸ்தவ வாழ்க்கையா? நான் தினமும் ஜெபித்தால், தேவனோடு உறவில் இருக்கிறேன் என்று அர்த்தமா?
ஒரு தொலைபேசியில் பேச வேண்டுமானால், இரு பக்கமும் பேசினால் தான் அது உரையாடல். அதைத்தான் நாம் விரும்புவோம். ஆனால் அநேக நேரங்களில், தேவனோடு பேசுவதற்கு, நாம் மட்டுமே பேசுகிறோம். தேவனுடைய பேச்சை கேட்பதற்கு நம்மால் முடியவில்லை. ஆனாலும், தினமும் தவறாமல் தேவனோடு பேசுவதால், அவருடன் உறவில் இருக்கிறேன் என்று சொல்லி விடுகிறோம். இவ்வளவு தானா? இதைத்தாண்டி ஏதேனும் இருக்கிறதா?
பல சமயங்களில் குற்ற உணர்வு, சோர்வு, சோதனைகள், பாவப்போராட்டம், அல்லது சாத்தானின் குரல்கள் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டவர்கள் போல உணரச் செய்கின்றன.
ஆனால், உண்மையில் தேவனுடைய வார்த்தை என்ன சொல்கிறது?
தேவன் நம்மை விட்டு விலகுகிறாரா, அல்லது நம்மை என்றும் தன் பக்கம் இழுத்துக் கொண்டே இருக்கிறாரா?இந்த ஆய்வில், அந்த சந்தேகங்களின் அடிப்படை காரணத்தை ஆராய்ந்து, தேவனுடைய வார்த்தையின் ஒளியில் நமக்கு கிடைக்கும் நம்பிக்கை மற்றும் உறுதியை தொடர்ச்ச்சியாக காணப்போகிறோம்.
பரிசுத்த ஆவியானவர் தாமே நம்மை சரியான வழியில் நடத்துவாராக. ஆமென்
Leave a Reply