குல்ஷான் எஸ்தர் – Gulshan Esther
கிழியுண்ட திரை என்ற புத்தகத்திலிருந்து சில வரிகள்
குல்ஷான் ஃபாத்திமா என்ற பெயருடன், செல்வ செழிப்புள்ள வைராக்கியமான முகம்மதிய குடும்பத்தில் பிறந்தவர், குல்ஷான் எஸ்தராக மாறி,வல்லமையான ஊழியக்காரி ஆனார். அவரைப்பற்றி சில காரியங்களை இந்த பதிவில் காணலாம்.
குல்ஷான் ஃபாத்திமா என்ற நான், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் பிறந்தேன். ஆறு மாத குழந்தையாக இருந்தபோது வந்த டைஃபாய்டு காய்ச்சலால், என் உடலின் இடதுபக்கம் பாதிக்கப்பட்டு, இடது கையும் இடது காலும்மரத்து முடமாகிவிட்டன. என் 14 வயதில் இங்கிலாந்துக்கு வந்தபோது, பெரிய மருத்துவரான டேவிட் என்பவர், “இதற்கு எந்த மருந்தும் இல்லை, ஜெபம் மட்டுமே மருந்து” என கூறி விட்டார்.
சோர்ந்து போன என்னை தட்டிக்கொடுத்த என் தந்தை, “நாம் மெக்காவுக்கு செல்லலாம். அங்கு தேவனுடைய வீட்டில்,அல்லது ஜம்ஜமின் குணமாக்கும் ஊற்றில் நீ சுகமடைவாய்” என எனக்கு நம்பிக்கை கொடுத்தார். மெக்காவுக்கு சென்று ஒரு மாதம் புண்ணிய யாத்திரை செய்தோம். “தயவுசெய்து என்னை குணமாக்கும்” என்று நான் கெஞ்சி வேண்டிக் கொண்டேன். ஒன்றுமே நிகழவில்லை. ஆகாரின் குழந்தையாகிய இஸ்மவேலுக்கு தேவன் கொடுத்த ஜம்ஜம் நீரூற்றுக்கு வந்து, தண்ணீர் வாங்கி சென்றோம். வாங்கி சென்ற தண்ணீரில் பெரும்பகுதி எனக்கு குளிப்பதற்காகவும், கொஞ்சம் மட்டும் பாகிஸ்தானுக்கும் என திட்டமிட்டோம்.
எங்களது அறையை அடைந்தவுடன், என் தாதிமார் என்னைக் குளிப்பாட்ட ஆரம்பித்தனர். நான் மிகவும் நம்பிக்கையுடன் என் வேண்டுதல்களை உரக்க சொல்லிக் கொண்டிருந்தேன். எனது மரத்துப்போன அங்கங்கள் ஒரே கணத்தில் சுகமாகிவிடும் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். இன்னும் என் உடல் கல்லைப்போன்று கனமாகவே இருந்தது.
சோர்ந்து போன என்னைப் பார்த்து, கலங்கிய விழிகளுடன் என் தந்தை வந்தார். “குல்ஷான், சோர்ந்து போகாதே அம்மா. இன்று அல்லாவின் சித்தமில்லை போலும். நாம் நம்முடைய நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. இறைவன் எல்லாவற்றிலும் பெரியவர்” என கூறினார்.இரண்டு வருடங்கள் கழித்து, தந்தைக்கு சுகவீனம் ஏற்பட்டு, அவர் இறந்து போனார். “கண்ணே, உனக்கு ஏராளமான சொத்தை வைத்து செல்கிறேன். நீ 100 வேலைஆட்கள் வைத்துக்கொண்டாலும், உனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உனக்கு பரலோகம் நிச்சயமாய் உண்டு. எனவே தற்கொலை மட்டும் செய்து கொள்ளாதே. அப்படிச் செய்தால் நீ நரகத்துக்கு போவாய். ஒருநாள் இறைவன் உன்னை நிச்சயமாய் சுகப்படுத்துவார்” எனக்கூறி என்னை, சித்தப்பா சித்தி, அண்ணன் அண்ணி, பொறுப்பில் விட்டு, அவர் மரித்து விட்டார்.
என் தந்தை மரித்து சோகத்தில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நான், காலை 3 மணிக்கு எழுந்தேன். “இறைவா, இன்னும் 30 ஆண்டுகள் நான் வாழ இருக்குமானால், ஐயோ என்னால் முடியவே முடியாது. தயவுசெய்து என்னையும் எடுத்துக்கொள்ளும்” என்று அழுதேன்.
என் வேதனையை என்னால் தாங்க முடியவில்லை. மனதினுள் இறைவனை நோக்கி கதற ஆரம்பித்தேன். “நான் இப்படி முடமாக வாழும்படி நீர் செய்ய, நான் என்ன தவறு செய்தேன்? நான் இனி ஏன் வாழ வேண்டும்? நான் பிறந்ததும் என் தாய் மரித்து விட்டார். அதன்பின் நான் முடமாகி விட்டேன். இப்போது என் தந்தையும் இறந்து விட்டார். இனி நான் யாருக்காக வாழ வேண்டும்? என்னை நீர் இவ்வளவு கடினமாக தண்டிப்பதன் நோக்கம் என்ன? என்னை உயிரோடு காப்பதனால் என்ன உபயோகம்? வாழ்வதற்கு எந்த குறிக்கோளும் அற்றவளாகிப் போகும்படி செய்துவிட்டீரே” என்று என் அங்கலாய்ப்பை ஜெபத்தில் ஊற்றினேன்.
“நீ மரிக்க உன்னை நான் விட மாட்டேன். உன்னை நான் உயிருடன் காத்துக் கொள்வேன்” என்ற மெல்லிய குரல், என் மொழியிலேயே எனக்குக் கேட்டது. இறைவன் எவ்வளவு கரிசனமானவர் என்பதை அக்குரல் எனக்கு உணர்த்தியது.
“குருடருக்கு பார்வையைக் கொடுத்தது யார்? பிணியாளியை சுகப்படுத்தியது யார்? மரித்தோரை உயிரோடு எழுப்பியது யார்? நானே அந்த இயேசு. மரியாளின் மகன். என்னைக் குறித்து, குரானிலே, சூரா மரியாமில் வாசித்துப்பார்” என்று குரல் கேட்டது. இது ஒரு கனவுதான் என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டேன்.
அந்த அதிகாலையில் நடந்த விந்தையான காரியத்தை மறப்பதற்காக, குர்ஆனை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். குர்ஆனை மனப்பாடம் செய்ய அரபு மொழியின் இனிய இசை உதவுகிறதுதான். ஆனால், அர்த்தம் எனக்கு முற்றிலுமாகப் புரியவில்லை. எனவே என் தாய்மொழியான உருது மொழியில், குர்ஆனை வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.
என்னுடன் பேசிய அந்த குரல், மீண்டும் பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்க ஆரம்பித்தேன். அக்குரலைக் கேட்க வேண்டுமானால், அக்குரல் எனக்கு கொடுத்த கட்டளையை நான் நிறைவேற்ற வேண்டும் அல்லவா? மிகுந்த ஆவலோடு, அப்புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.
“மரியாளைப் பார்த்து தேவதூதன் உரைத்ததாவது: அல்லாஹ் அனுப்பும் இத்தூதில் நீ களிகூறுவாயாக. அவரது பெயர் மேசியா. அவர் மரியாளின் குமாரனாகிய இயேசு. அவர் இவ்வுலகில் மட்டுமல்ல. வரும் உலகிலும் உன்னதமானவர். அவர் தமது தொட்டிலிலும், வாலிபப் பருவத்திலும், மக்களுக்குப் போதிப்பார். அவர் பக்தியான வாழ்க்கையை வாழுவார்”
உருது குர்ஆனை திறந்து, சூரா இம்ரானில் உள்ள அந்த முக்கிய பகுதியை, பெருங்கவனத்துடன் படித்தேன். “அல்லாஹ்வின் அருளால், குருடருக்கு பார்வையைக் கொடுப்பேன். குஷ்டரோகியைக் குணமாக்குவேன். மரித்தோரை மறுபடியும் உயிரோடு எழுப்புவேன்”நான் உருது மொழியில் குர்ஆனை வாசிப்பதைக் கண்ட என் சித்தி, என் அண்ணனிடம் சொல்ல, “உன் மதத்துக்கு நீ உண்மையாய் இருக்கிறாய் என்று நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் ஏன் அரபு மொழியில் வாசிப்பதை நிறுத்தி விட்டாய்?” என அண்ணன் கேட்டார்.
“நான் காலையில் அரபு மொழியிலும், இரவில் உருதிலும் படிக்கிறேன். சரியான அர்த்தத்தை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்ற என் பதிலில் மகிழ்ச்சி அடைந்தவர், “இரு மொழிகளில் படிப்பது நல்லதுதான். ஆனால் அரபு மொழியில் படிப்பதை விட்டு விடாதே” என்று கூறினார்.
எனக்கே விந்தையாக இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக, நான் சுகமடைவேன் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்த நான், இப்போது புதிய ஜெபத்தை செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். என் நம்பிக்கை வலுப்பெற்றுக்கொண்டே வந்தது. “ஓ, மரியாளின் மகனாகிய இயேசுவே, நீர் அனேக அற்புதங்களைச் செய்தீர். ஆகவே என்னை சுகப்படுத்தும்.” இதுதான் என் புதிய ஜெபம். எந்த அளவுக்கு இந்த புதிய ஜெபத்தை செய்தேனோ, அந்த அளவுக்கு இந்த மர்ம நபராகிய இயேசுவின் பக்கமாக நான் இழுக்கப்பட்டேன்.
முதலாவது மெக்காவிலிருந்து நான் கொண்டுவந்த மணிகளை உருட்டி, என் வழக்கமான முஸ்லிம் தொழுகையைச் செய்து, அதன்பின் பிஸ்மில்லா ஓதிவிட்டு, ஒவ்வொரு தொழுகையோடும்கூட, “ஓ, மரியாளின் மகனாகிய இயேசுவே, என்னைச் சுகப்படுத்தும்” என்று கூட்டிச் சொன்னேன்.
ஒருநாள் அதிகாலை 3 மணி, வழக்கம்போல நான் எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்து, என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, “ஓ இயேசுவே! மரியாளின் மகனே, என்னை சுகப்படுத்தும்” என்ற ஜெபம் செய்தேன். ஆனால் திடீரென நிறுத்தினேன். ஒரு எண்ணம் என் மனதை ஆழமாக வாதித்தது. “நீண்ட நாட்களாக நான் இந்த ஜெபத்தை செய்து வந்தாலும், இன்னும் நான் ஏன் முடமாகவே இருக்கிறேன்?” மூன்று ஆண்டுகளாக நான் ஜெபித்தும், இன்னும் சுகமாகவில்லையே.
“நீர் பரலோகத்தில் உயிரோடு இருக்கிறவர் அல்லவா? நீர் நோயாளிகளைக் குணப்படுத்தினீர் என்று திருக்குரான் கூறுகிறதே. ஆம்… உம்மால் என்னை நிச்சயமாய் குணப்படுத்த முடியும். ஆனால் நான் ஏன் இன்னும் முடமாக இருக்கிறேன்? ஏன் எந்த ஒரு பதிலும் இல்லை? உம் அமைதி மட்டும் பதிலா? நீர் என்னை சுகப்படுத்தக் கூடுமானால் என்னைச் சுகமாக்கும். இல்லாவிடில், காரணம் என்னவென்று எனக்குச் சொல்லமாட்டீரா?” என் இதய வேதனையில் கதறி அழுதேன்.
ஆ… என்ன அற்புதம்! இது என்ன காட்சி! என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் சம்பவம் நடைபெற்றது. திடீரென எனது அறை முழுவதும் வெளிச்சத்தால் நிரம்பியது. ஒருவேளை விடிந்து விட்டதோ? இல்லையே. அவ்வொளி மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நான் பயந்து நடுங்கினேன். துப்பட்டியால் நான் என்னை இறுகப் போர்த்துக்கொண்டேன்.
என் துப்பட்டியை மெதுவாக நீக்கி, வெளியே பார்த்தேன். கதவுகள், ஜன்னல்கள் யாவும் மூடப்பட்டேயிருந்தன. மறைப்பு திரைகளும், அடைப்புக் கதவுகளும் நன்றாக மூடிய நிலையிலேயே இருந்தன. இது என்ன அற்புதம்! நீண்ட அங்கிகளை அணிந்த உருவங்கள் அப்பேரொளியின் மத்தியில், என் கட்டிலுக்கு அருகில் சில அடிகள் தூரத்தில் நிற்கிறதைக் கண்டேன். 12 உருவங்கள் ஒரே வரிசையில் நிற்கிறதைக் கண்டேன். பதின்மூன்றாவது உருவம், மற்ற உருவங்களைக் காட்டிலும், பெரியதாகவும், பிரகாசமானதாகவும் காணப்பட்டது.
“ஐயோ, இம்மக்கள் யார்? எல்லா கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டிருக்க, இவர்கள் எப்படி என் அறைக்குள் வந்தனர்?” என அழ ஆரம்பித்தேன்.
“நீ எழுந்திரு. இதைத்தானே நீ இவ்வளவு காலம் வாஞ்சித்து தேடினாய்? நானே இயேசு. மரியாளின் மகன். நானே உனக்கு முன்பாக இருக்கிறேன். நீ எழுந்து என்னண்டையில் வா”
நான் அழ ஆரம்பித்தேன். “ஓ இயேசுவே.. நான் முடமானவள். என்னால் எழும்ப முடியாதே”
அவர் இரண்டாம் முறையும், “நீ எழுந்து நில், என்னண்டை வா. நானே இயேசு” என்றார்.
நான் பயம் மற்றும் சந்தேகத்தால், இன்னும் தாமதித்தேன். அவர் மூன்றாம் முறையும் “எழுந்து நில்” என்றார்.
19 ஆண்டுகளாக படுக்கையில் முடமாகக் கிடந்த குல்ஷான் ஃபாத்திமாவாகிய நான், புதியதொரு வல்லமை, என் கால்களுக்குள்ளும் கைகளுக்குள்ளும் பீறிட்டு பாய்கிறதை உணர்ந்தேன். என் பாதங்களை தரையில் வைத்தேன். எழுந்து நின்றேன். சில அடிகள் எடுத்து வைத்தேன். ஓடிச்சென்று இயேசுவின் பாதங்களில் விழுந்தேன்.
இயேசு தமது கரத்தை உயர்த்தி என் சிரசின்மேல் வைத்தார். அவரது கரத்திலுள்ள துவாரத்தில் இருந்து வெளிவந்த ஒளிக்கதிர், என் பச்சை நிற ஆடைகளை வெண்மையாய்த் தோன்றச்செய்தது. இயேசு என்னிடம் நிறைய காரியங்களைப் பேசினார். மறுபடியும் உலகத்திற்கு சீக்கிரம் வரப்போவதாக கூறினார்.
டைஃபாய்டு காய்ச்சலால் முடமாகி, சுருங்கி, வலுவிழந்து, மோசமாக இருந்த என் கையையும் காலையும் உற்று நோக்கினேன். போதுமான தசை புதிதாக வந்திருப்பதைக் கண்டேன். எனது கை இன்னும் முழுமையைப் பெறாமல் இருந்தாலும், போதுமான பலம் பெற்றிருந்தது. “இதனையும் முழுமையாக சுகப்படுத்த மாட்டீரா?” என்று கேட்டேன். “நீ எனக்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்ற பதில் அன்போடு வந்தது. எனது அறையிலிருந்த உருவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறைய ஆரம்பித்தது. இயேசு மட்டுமாவது இன்னும் கொஞ்ச நேரம் இருக்க மாட்டாரா என்று நான் யோசிக்கும்போதே, அவரும் மறைந்து, அவ்வொளி முற்றிலும் நீங்கியது. நான் என் அறையின் நடுவில் தனியாக நின்று கொண்டிருந்தேன். ஓரிரு அடிகள் எடுத்து வைத்தேன். ஆகா… நான் நடக்கிறேன். சுவருக்கு சுவர், அங்கும் இங்குமாக, பலமுறை நடந்து பார்த்தேன். நான் முழு சுகம் அடைந்து விட்டேன்.
ஒரு பாகிஸ்தானிய முஸ்லிம் பெண்ணுக்கு, தேவன் கொடுத்த அற்புத சுகத்தை பார்த்தோம் அல்லவா! இது 2000 ஆண்டுகள் முன்பு நடந்த சாட்சி அல்ல. 1951ல் பிறந்து, 2022ல் தான் மரித்தார் குல்ஷான். நாம் வாழும் நாட்களில், அவரும் உயிருள்ள சாட்சியாக வாழ்ந்து இருக்கிறார். குல்ஷானுக்கு இயேசுவைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்றாலும், தினமும் இடைவிடாமல் 2 வருடங்கள் சுகத்துக்காக ஜெபித்து இருக்கிறார். நம் பிரச்சனை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, இடைவிடாமல் நம்பிக்கையோடு ஜெபித்து, ஜெயத்தை பெற்றுக்கொள்வோம்.
“என் வாழ்க்கைக்கான அர்த்தம் என்ன?” என்று தேவனிடம் கேட்காதீர்கள். உங்கள் வாழ்க்கைக்கான அர்த்தத்தை நீங்களே உருவாக்குங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் அல்லது என்ன உங்களிடம் இருக்கிறது என்பது முக்கியமல்ல. “உங்களுடன் யார் இருக்கிறார்?” என்பதே முக்கியமானது. கிறிஸ்துவுடன் நாம் நெருங்கி வாழும்போது, நமது ஒவ்வொரு நொடி வாழ்வும் அர்த்தமுள்ளதாக இருக்கும். தேவனுடைய நாமம் மட்டுமே மகிமைப்படுவதாக!
Leave a Reply