Day – 11 (11- டிசம்பர், 2023)

நல்ல சபை தந்தீர் நன்றி

நாம் இன்று நன்றி சொல்லப்போவது, தேவன் நமக்கு கொடுத்த சபைக்காக. சபை என்பது வெறும் கட்டடம் அல்ல. இயேசுவின் சரீரம். இயேசு தலையாகவும், நாம் அவரது சரீரத்தின் அங்கமாகவும் இருப்பதுதான் சபை. நம் எல்லாருக்கும் ஒரே வேலை இருப்பது இல்லை. நம் உடலில், ஒவ்வொரு உறுப்புகளுக்கும் ஒரு வேலை இருப்பதுபோல, சபையில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வேலை இருக்கும். ஆனால் நம் எல்லாருக்கும் தலை இயேசு. இதுதான் சபையின் விளக்கம். உலகம் முழுவதிலும் உள்ள சபை எல்லாமே இயேசுவின் அங்கம் தான். ஆனால் நாம் தான் அதைப் புரிந்து கொள்ளாமல், என் சபை பெரிது, உன் சபை பெரிது என்று சண்டை இட்டுக் கொள்கிறோம்.

இன்று நாம் நமக்கு தேவன் கொடுத்த சபைக்காக நன்றி சொல்லப் போகிறோம். எத்தனையோ சபைகள் இருந்தாலும், தேவன் நமக்கென்று ஒரு நல்ல சபையைக் கொடுத்திருக்கிறார். அது பாரம்பரிய சபையாக இருக்கலாம், ஆவிக்குரிய சபையாக இருக்கலாம். ஆனால், அந்த இடம் நாம் இயேசுவுடன் உறவாட நம்மை வழி நடத்துகிறது அல்லவா. வேத விளக்கங்கள் அறிய உதவும் இடமாக நம் சபை இருக்கிறதல்லவா! அனேக ஆவிக்குரிய நண்பர்கள் இருக்கிறார்கள் அல்லவா! அதற்காக நன்றி சொல்வது அவசியம் அல்லவா!

நாம் சபையில் ஏராளமாக ஜெபிக்கிறோம். தேசத்துக்காக ஜெபிக்கிறோம். நம் தேவைகளுக்காக ஜெபிக்கிறோம். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக ஜெபிக்கிறோம். அனேக பாடல்கள் பாடுகிறோம். சாட்சிகள் கேட்கிறோம். விசுவாசம் தட்டி எழுப்பப்படுகிறது. சோர்ந்து போன நேரத்தில் எல்லாம், வார்த்தைகள் பேசுகிறது. அதற்காக நன்றி சொல்வோம்.

இப்போது யோசித்துப் பார்ப்போம். ஒருவேளை சபை என்ற கட்டடம் இல்லை. ஆதிகால அப்போஸ்தலர் போல, ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் இரட்சிக்கப்பட்டு விட்டோம். நம் கையில் வேதாகமம் உள்ளது. நாமே வேதத்தை படித்து கொள்ள வேண்டும், ஏனெனில், சபை கிடையாது. நாம் எந்த அளவு வேத அறிவில் இருப்போம் என்று யோசித்து பார்ப்போம். சின்ன வயதில், சண்டே கிளாஸ் போயிருக்க மாட்டோம். வேதாகம கதைகள் நமக்கு தெரிந்திருக்காது. வேதம் வாசித்தாயா? என்று கேட்க யாரும் இல்லை. எனவே வேதம் வாசிக்க தோணாது. எப்படித்தான் கர்த்தரிடம் நெருங்க முடியும்? ஆதிகால அப்போஸ்தலர்கள், அதனால் தான் அவர்கள் போகிற இடமெல்லாம் சபையை நிறுவினார்கள். இன்று நமக்கு சபை இருக்கிறது, நம்மை கண்காணிக்க போதகர் இருக்கிறார். அதற்காக தேவனுக்கு நன்றி சொல்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *