Scripture Portion: Psalm 102-104

சங்கீதம் 102

(துயரப்படுகிறவன் துக்கத்தில் மூழ்கி, கர்த்தரிடத்தில் தன் வியாகுலத்தைத் தெரிவித்துச் செய்யும் விண்ணப்பம்)
1கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.
2என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும்.
3என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது.
4என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன்.
5என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது.
6வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன்.
7நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன்.
8நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்க வெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள்.
9நீர் என்னை உயரத்தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன்.
10ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன்.
11என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்து போகிறேன்.
12கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும்.
13தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயை செய்யுங்காலமும், அதற்காகக் குறித்த நேரமும் வந்தது.
14உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள்.
15கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார்.
16திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்.
17அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்.
18பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும்.
19கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
20தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
21கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
22சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
23வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.
24அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
25நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது.
26அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம்.
27நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை.
28உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

சங்கீதம் 103

(தாவீதின் சங்கீதம்)
1என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
2என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
3அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
4உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
5நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது.
6ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும், நியாயத்தையும் செய்கிறார்.
7அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
9அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங் கொண்டிரார்.
10அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
11பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
12மேற்குக்கும், கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
13தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
14நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
15மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.
16காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
17கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
18அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
19கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது.
20கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
21கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
22கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.

சங்கீதம் 104

1என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்து கொண்டிருக்கிறீர்.
2ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
3தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.
4தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினி ஜுவாலைகளாகவும் செய்கிறார்.
5பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார்.
6அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது.
7அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று.
8அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
9அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடிகடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
10அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
11அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும்.
12அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப்பறவைகள் சஞ்சரித்து, கிளைகள் மேலிருந்து பாடும்.
13தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது.
14பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார்.
15மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.
16 கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
17அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாரு விருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
18உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம்.
19சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும்.
20நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.
21பாலசிங்கங்கள் இரைக்காகக் கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித்தேடும்.
22சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும்.
23அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான்.
24 கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.
25பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது: அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு.
26அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
27ஏற்றவேளையில் ஆகாரத்தைத்தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
28நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக் கொள்ளும்; நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
29நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக் கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
30நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.
31 கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்.
32அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் பர்வதங்களைத் தொட, அவைகள் புகையும்.
33நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
34நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன்.
35பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *