Scripture Portion: I kings 12-14
1 இராஜாக்கள் 12
1ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.2ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதைக் கேள்விப்பட்டான்.3அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி:4உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்; அப்பொழுது உம்மை சேவிப்போம் என்றார்கள்.5அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்று நாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள்.6அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.7அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.8முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி,9அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை இலகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுமொழி கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.10அப்பொழுது அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு இலகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும்.11இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள்.12மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள்.13ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி:14என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.15ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது.16ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.17ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான்.18பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான்.19அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டு கலகம்பண்ணிப் பிரிந்து போயிருக்கிறார்கள்.20யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதா கோத்திரம் மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை.21ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம் பேரைக் கூட்டினான்.22தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது:23நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும் யூதா வம்சத்தார் அனைவரையும், பென்யமீனரையும், மற்ற ஜனங்களையும் நோக்கி:24நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள்.25யெரொபெயாம் எப்பிராயீம் மலைதேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான்.26யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்ச வசமாய்த் திரும்புகிறதாயிருக்கும்.27இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய் விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான்.28ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,29ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான்.30இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள்.31அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தின் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான்.32யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,33தன் மனதிலே தானே நியமித்துக் கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.1 இராஜாக்கள் 13
1யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து,2அந்தப் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி;3அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோகும்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான்.4பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று.5தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.6அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம்செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது.7அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்.8தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை.9ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி,10அவன் பெத்தேலுக்கு வந்த வழியாய்த் திரும்பாமல், வேறு வழியாய்ப் போய்விட்டான்.11கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள்.12அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால்,13அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி,14தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான்.15அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான்.16அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன்.17ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான்.18அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய் சொன்னான்.19அப்பொழுது அவன் இவனோடே திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான்.20அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால்,21அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி,22அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.23அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டு வந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக்கொடுத்தான்.24அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது.25அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடந்த பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள்.26அவனை வழியிலிருந்து திரும்பப்பண்ணின தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் கர்த்தருடைய வாக்கை மீறின தேவனுடைய மனுஷன்தான், கர்த்தர் அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, கர்த்தர் அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனை முறித்துக் கொன்றுபோட்டது என்று சொல்லி,27தன் குமாரரை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம்வைத்துக் கொடுத்தார்கள்.28அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவன் பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே கழுதையும் சிங்கமும் நிற்கிறதையும் கண்டான்; அந்தச் சிங்கம் பிரேதத்தைத் தின்னவுமில்லை, கழுதையை முறித்துப் போடவுமில்லை.29அப்பொழுது கிழவனான அந்தத் தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷனின் பிரேதத்தை எடுத்து, அதைக் கழுதையின்மேல் வைத்து, அதற்காகத் துக்கங்கொண்டாடவும் அதை அடக்கம்பண்ணவும், அதைத் தன் பட்டணத்திற்குக் கொண்டுவந்து,30அவன் பிரேதத்தைத் தன்னுடைய கல்லறையிலே வைத்தான். அவனுக்காக: ஐயோ, என் சகோதரனே என்று புலம்பி, துக்கங்கொண்டாடினார்கள்.31அவனை அடக்கம்பண்ணினபின்பு, அவன் தன் குமாரரை நோக்கி: நான் மரிக்கும்போது, தேவனுடைய மனுஷன் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்பண்ணி, அவன் எலும்புகளண்டையிலே என் எலும்புகளையும் வையுங்கள்.32அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் விரோதமாகக் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும் என்றான்.33இந்த நடபடிக்குப்பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன்மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள்.34யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று.
1 இராஜாக்கள் 14
1அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான்.2அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான்.3நீ உன் கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடத்துக்குப் போ; பிள்ளைக்குச் சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான்.4அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான்.5 கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம் கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.6ஆகையால் வாசற்படிக்குள் பிரவேசிக்கும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிக்கிறதென்ன? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன்.7நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன்.8நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப்போல நீ இராமல்,9உனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய்.10ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறதுபோல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப்போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார்.11யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார்.12ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப்போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.13அவனுக்காக இஸ்ரவேலரெல்லாரும் துக்கங்கொண்டாடி அவனை அடக்கம்பண்ணுவார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்.14ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான்; இப்போதே இது நடந்தேறும்.15தண்ணீரிலே நாணல் அசைகிறதுபோல, கர்த்தர் இஸ்ரவேலை முறிந்தசையப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதறடித்து,16யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான்.17அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான்.18 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள்.19யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.20யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.21சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம்பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின் பேர் நாமாள்.22யூதா ஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்து வருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள்.23அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின் கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்புவிக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.24தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள்,25ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து,26 கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.27அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.28ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச்சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.29ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.30ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.31ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம் பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Leave a Reply