Scripture Portion: Ezekiel 1-4

எசேக்கியேல் 1

1முப்பதாம் வருஷம் நாலாம் மாதம் ஐந்தாம்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.
2அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது.
3அந்த ஐந்தாம்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
4இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது.
5அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷசாயலாயிருந்தது.
6அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன.
7அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன.
8அவைகளுடைய செட்டைகளின்கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷகைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன.
9அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.
10அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடது பக்கத்தில் நாலும் எருதுமுகமும் கழுகுமுகமுமாயிருந்தன.
11அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.
12அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.
13ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது.
14அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன.
15நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன்.
16சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாப்போல் இருந்தது.
17அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.
18அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன.
19அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின.
20ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
21அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது.
22ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
23மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.
24அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல் போலவும், சர்வவல்லவருடைய சத்தம் போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம் போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன.
25அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
26அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.
27அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன்.
28மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

எசேக்கியேல் 2

1அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.
2இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக்கேட்டேன்.
3அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள்.
4அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
5கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும்.
6மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார்.
7கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு.
8மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார்.
9அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச்சுருள் இருந்தது.
10அவர் அதை எனக்கு முன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.

எசேக்கியேல் 3

1பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.
2அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து:
3மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது.
4பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்திலே சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு.
5விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய்.
6விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ?
7இஸ்ரவேல் வீட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்.
8இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன்.
9உன் நெற்றியை வச்சிரக்கல்லைப் போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார்.
10பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு,
11நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.
12அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.
13ஒன்றோடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன்.
14ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது.
15கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன்.
16ஏழுநாள் முடிந்தபின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
17மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக,
18சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
19நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
20அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
21நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார்.
22அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.
23அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே கர்த்தருடைய மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன்.
24உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு.
25இதோ, மனுபுத்திரனே, உன் மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம்.
26நான் உன் நாவை உன் மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.
27நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.

எசேக்கியேல் 4

1மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,
2அதற்கு விரோதமாக முற்றிக்கைபோட்டு, அதற்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோட்டு, அதற்கு விரோதமாக இராணுவங்களை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்கும் இயந்திரங்களை வை.
3மேலும் நீ ஒரு இரும்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்துக்கும் நடுவாக இரும்புச்சுவராக்கி, அது முற்றிக்கையாய்க் கிடக்கும்படிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிக்கை போட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக்கு அடையாளம்.
4நீ உன் இடதுபக்கமாய் ஒருக்களித்துப்படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாய் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.
5அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.
6நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப் பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.
7நீ எருசலேமின் முற்றிக்கைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த புயமுமாக இருந்து, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு.
8இதோ, நீ அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக்கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.
9நீ கோதுமையையும் வாற்கோதுமையையும், பெரும்பயற்றையும், சிறுபயற்றையும், தினையையும், கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்து சாப்பிடுவாயாக.
10நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும்; அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக.
11தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.
12அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக.
13அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.
14அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன்.
15அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன் அப்பத்தைச் சுடுவாயாக என்றார்.
16பின்னும் அவர்: மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,
17நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *