Scripture Portion: Ezra 1-3

எஸ்றா 1

1எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:
2பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
3அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்; எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்.
4அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவி செய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.
5அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்.
6அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்.
7நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.
8அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான்.
9அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது.
10பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக் கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்ற பணிமுட்டுகள் ஆயிரம்.
11பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக் கொண்டுபோனான்.

எஸ்றா 2

1பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
2செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
3பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
4செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
5ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
6யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
7ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
8சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
9சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
10பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
11பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
12அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர்.
13அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
14பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
15ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.
16எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
17பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
18யோராகின் புத்திரர் நூற்றுப் பன்னிரண்டுபேர்.
19ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
20கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
21பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர்.
22நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
23ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
24அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
25கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
26ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
27மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
28பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
29நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
30மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
31மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
32ஆரீமின் புத்திரர் முந்நூற்றுஇருபதுபேர்.
33லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
34எரிகோவின் புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர்.
35சேனாகின் புத்திரர் மூவாயிரத்து அறுநூற்று முப்பதுபேர்.
36ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
37இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
38பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர்.
39ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
40லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர்.
41பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
42வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
43நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
44கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
45லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர்,
46ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர்,
47கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,
48ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,
49ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,
50அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,
51பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,
52பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
53பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர் தாமாவின் புத்திரர்,
54நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே,
55சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
56யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர்,
57செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே.
58நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
59தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
60தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
61ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்சநாமம் தரிக்கப்பட்ட பர்சிலாயின் புத்திரரே.
62இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
63ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத் தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
64சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
65அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
66அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து,
67அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
68வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்கான மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
69அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
70ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

எஸ்றா 3

1இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள்.
2அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்கதகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.
3அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள்.
4எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமத்தின்படியும் அன்றாடகக்கணக்கின்படியும் ஒவ்வொரு நாளிலும் பலியிட்டார்கள்.
5அதற்குப்பின்பு நித்தமும், மாதப்பிறப்புகளிலும், கர்த்தருடைய சகல பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்கதகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள்.
6ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத்தொடங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை.
7அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்தரவின்படியே அவர்கள் கல்தச்சருக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைச் சமுத்திரவழியாய் யோபாமட்டும் கொண்டுவரச் சீதோனியருக்கும் தீரியருக்கும் போஜனபானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.
8அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள்.
9அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலும் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதரராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள்.
10சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம்போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள்.
11 கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.
12முந்தின ஆலயத்தைக்கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள்.
13ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *