Scripture Portion: Ezra 7-10

எஸ்றா 7

1இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன்,
2இவன் சல்லூமின் குமாரன், இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூபின் குமாரன்,
3இவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மெராயோதின் குமாரன்,
4இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன்.
5இவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன்.
6இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
7அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள்.
8ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது.
9முதலாம் மாதம் முதல் தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான்.
10கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
11கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னதின் நகலாவது:
12ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:
13நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும், லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது.
14நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும்,
15ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,
16பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.
17ஆகையால் அந்தத் திரவியத்தினால் நீ தாமதமின்றி காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த போஜனபலிகளையும், பானபலிகளையும் வாங்கி, அவைகளை எருசலேமிலுள்ள உங்கள் தேவனுடைய ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் செலுத்துவாயாக.
18மீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு செய்யவேண்டியதின்னதென்று உனக்கும் உன் சகோதரருக்கும் நலமாய்த் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படியே செய்யுங்கள்.
19உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்.
20பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக.
21நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறு தாலந்து வெள்ளி, நூறுகலக்கோதுமை, நூறுகலத் திராட்சரசம், நூறுகலம் எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும்,
22வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும்,
23பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்.
24பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.
25பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களையும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்.
26உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது.
27எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப்பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
28அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடேகூட வரும்படி சேர்த்துக்கொண்டேன்.

எஸ்றா 8

1அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடேகூட வந்த தங்கள் பிதாக்கள் வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன:
2பினெகாசின் புத்திரரில் கெர்சோம், இத்தாமாரின் புத்திரரில் தானியேல், தாவீதின் புத்திரரில் அத்தூஸ்,
3பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும், அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும்,
4பாகாத்மோவாபின் புத்திரரில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்மக்களும்,
5செக்கனியாவின் புத்திரரில் யகசியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும்,
6ஆதினின் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும்,
7ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும்,
8செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,
9யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,
10செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும்,
11பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும்,
12அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும்,
13அதோனிகாமின் கடைசிப் புத்திரரான எலிபேலேத், ஏயெல், செமாயா என்னும் நாமங்களுள்ளவர்களும், அவர்களோடேகூட அறுபது ஆண்மக்களும்,
14பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும், சபூதும், அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே.
15இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்று நாள் தங்கியிருந்தோம்; நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை.
16ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து,
17கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவிடத்திற்குச் செய்தி கொண்டுபோக அவர்களுக்குக் கற்பித்து, நமது தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை எங்களிடத்திற்கு அழைத்துவரும்படி, அவர்கள் கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தங்கள் சகோதரனாகிய இத்தோவுக்கும், நிதனீமியருக்கும் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன்.
18அவர்கள் எங்கள் மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே, இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் குமாரனாகிய மகேலியின் புத்திரரில் புத்தியுள்ள மனுஷனாகிய செரெபியாவும் அவன் குமாரரும் சகோதரருமான பதினெட்டுப்பேரையும்,
19மெராரியரின் புத்திரரில் அஷபியாவும் அவனோடே எஷாயாவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும்,
20தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபது பேரையும், எங்களிடத்தில் அழைத்துக் கொண்டு வந்தார்கள்; அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன.
21அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன்.
22வழியிலே சத்துருவை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம்.
23அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
24பின்பு நான் ஆசாரியரின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷ்பியாவையும், அவர்கள் சகோதரரிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து,
25ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன்.
26அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறு தாலந்து நிறையான வெள்ளிப் பணிமுட்டுகளையும், நூறுதாலந்து பொன்னையும்,
27ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப்பாத்திரங்களையும் நிறுத்துக்கொடுத்து,
28அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள்; இந்தப் பணிமுட்டுகளும், உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு மனஉற்சாகமாய்ச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்தப் பொன்னும் பரிசுத்தமானவைகள்.
29நீங்கள் அதை எருசலேமிலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் ஆசாரியர் லேவியருடைய பிரபுக்களுக்கும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவர்களுக்கும் முன்பாக நிறுத்து ஒப்புவிக்குமட்டும் விழிப்பாயிருந்து, அதைக் காத்துக்கொள்ளுங்கள் என்றேன்.
30அப்படியே அந்த ஆசாரியரும் லேவியரும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படிக்கு, நிறுத்து வாங்கிக்கொண்டார்கள்.
31நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது.
32நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,
33நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமோத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படியேயும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதியா என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள்.
34அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது.
35சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும், தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.
36பின்பு ராஜாவின் சன்னதுகளை நதிக்கு இப்புறத்திலிருக்கிற ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் ஜனங்களுக்கும் தேவனுடைய ஆலயத்துக்கும் உதவியாயிருந்தார்கள்,

எஸ்றா 9

1இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை.
2எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வித்து தேசங்களின் ஜனங்களோடே கலந்து போயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.
3இந்த வர்த்தமானத்தை நான் கேட்டபொழுது, என் வஸ்திரத்தையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தேன்.
4அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும் என்னோடே கூடிக்கொண்டார்கள்; நானோ அந்திப்பலி செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.
5அந்திப்பலி நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என் கைகளை என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக விரித்து:
6என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்கு மேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.
7எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாயிருக்கிறோம்; எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்துக்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம்.
8இப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும், தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசிப்பித்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபை கிடைத்தது.
9நாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல், எங்களுக்கு உயிர்கொடுக்கவும்; நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தை எடுப்பித்து, பாழாய்ப்போன அதைப் புதுப்பிக்கும்படிக்கும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ராஜாக்கள் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச் செய்தார்.
10இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம்; தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம்.
11நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது; தேசாதேசங்களுடைய ஜனங்களின் அசங்கியத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் நிறையப்பண்ணின அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தினாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது.
12ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைப் புசித்து, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக்கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே.
13இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செய்கைகளினாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கையில்,
14நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரல்லவோ?
15இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்.

எஸ்றா 10

1எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள்.
2அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
3இப்பொழுதும் அந்த ஸ்திரீகள் எல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கை பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக.
4எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
5அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச்சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.
6அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.
7அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,
8மூன்று நாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்தி செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.
9அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லாரும் மூன்று நாளைக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந்தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக்காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
10அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.
11இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.
12அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.
13ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
14ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும்; இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள்.
15ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
16சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து,
17அந்நியஜாதியான ஸ்திரீகளைக்கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
18ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
19இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
20இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும்,
21ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
22பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
23லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
24பாடகரில் எலியாசியும், வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
25மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
26ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்வர்களும்;
27சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;
28பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
29பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்,
30பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;
31ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,
32பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;
33ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்;
34பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
35பெனாயா, பெதியா, கெல்லூ,
36வனியா, மெரெமோத், எலெயாசீப்,
37மத்தனியா, மதனாய், யாசாய்,
38பானி, பின்னூயி, சிமெயி,
39செலேமியா, நாத்தான், அதாயா,
40மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
41அசரெயேல், செலேமியா, செமரியா,
42சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
43நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
44இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள்; இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *