Scripture Portion: Matthew 4, Luke 4-5, John 1:15-51

மத்தேயு 4

1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
2அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று.
3அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.
4அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின்மேல் அவரை நிறுத்தி,
6நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
7அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார்.
8மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.
10அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
11அப்பொழுது பிசாசானவன் அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடைசெய்தார்கள்.
12யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய்,
13நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார்.
14கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே,
15இருளில் இருக்கும் ஜனங்கள் பெரியவெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,
16ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக் கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு:
19என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
20உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
21அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருக்கிறபோது, அவர்களைக்கண்டு, அவர்களையும் அழைத்தார்.
22உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
23பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்.
24அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
25கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

லூக்கா 4

1இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு,
2நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று.
3அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
4அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
5பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
9அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
13பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
14பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
15அவர்களுடைய ஜெப ஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.
16தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
17அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
18கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
20வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெப ஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
21அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
22எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
23அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
24ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள்.
26ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.
27அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
28ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு,
29எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டு போனார்கள்.
30அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார்.
31பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வு நாட்களில் ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
32அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
33ஜெப ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான்.
34அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான்.
35அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது.
36எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.
38பின்பு அவர் ஜெப ஆலயத்தை விட்டுப்புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.
39அவர் அவளிடத்தில் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
40சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
41பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார்.
42உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.
43அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
44அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.

லூக்கா 5

1பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.
2அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.
3அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.
4அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
5அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
6அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
7அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
8சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்.
9அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.
10சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.
11அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
12பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
13அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.
14அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.
15அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்
16அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
17பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று.
18அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள்.
19ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.
20அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
22இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?
23உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?
24பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டுமென்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
25உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான்.
26அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.
27இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.
28அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.
29அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள்.
30வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிற தென்னவென்று கேட்டார்கள்.
31இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
32நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
33பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் பண்ணிக்கொண்டுவருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
34அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
35மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.
36அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய வஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது.
37ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும்.
38புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும்.
39அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

யோவான் 1 (15-51)

15யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான்.
16அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.
17எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.
18தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
19எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது,
20அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
21அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான்.
22அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
23அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைப்பண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
25அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங்கொடுக்கிறீர் என்று கேட்டார்கள்.
26யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார்.
27அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான்.
28இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன.
29மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
30எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.
31நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கவந்தேன் என்றான்.
32பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.
33நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார்.
34அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சிகொடுத்துவருகிறேன் என்றான்.
35மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது,
36இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான்.
37அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள்.
38இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
39அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையதினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.
40யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
41அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
42பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.
43மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார்.
44பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான்.
45பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
46அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.
47இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
48அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார்.
49அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.
50இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.
51பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *