Scripture Portion: Matthew 17, Mark 9, Luke 9: 28-62

மத்தேயு 17

1ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,
2அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று.
3அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
4அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப்போடுவோம் என்றான்.
5அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
6சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
7அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார்.
8அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
9அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள்.
11இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்.
12ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார்.
13அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.
14அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
15ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.
16அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
17இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
18இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான்.
19அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள்.
20அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம்போகும்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
21இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
22அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
23அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.
24அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில்வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான்.
25அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.
26அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே.
27ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.

மாற்கு 9

1அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
2ஆறுநாளைக்குப்பின்பு, இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்.
3அவருடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது.
4அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள்.
5அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.
6அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான்.
7அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.
8உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
9அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.
10மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு:
11எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
12அவர் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார்.
13ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிற பிரகாரம் தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
14பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார்.
15ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள்.
16அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார்.
17அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.
18அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
19அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
20அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.
21அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது;
22இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
23இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
24உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.
25அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.
26அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான்.
27இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான்.
28வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள்.
29அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார்.
30பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார்.
31ஏனெனில் மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார்.
32அவர்களோ அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள்.
33அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.
34அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள்.
35அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி;
36ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு,
37இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார்.
38அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான்.
39அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.
40நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான்.
41நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களா யிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
42என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
43உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
44அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
45உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
46அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
47உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
48அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும்.
49எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான்.
50உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.

லூக்கா 9 (28-62)

28இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.
29அவர் ஜெபம்பண்ணுகையில் அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.
30அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி,
31அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
32பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள்.
33அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான்.
34இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள்.
35அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று.
36அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள்.
37மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
38அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருளவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான்.
39ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது. அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது.
40அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்.
41இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.
42அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்த ஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.
43அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி:
44நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.
45அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள்.
46பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று.
47இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி,
48அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார்.
49அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான்.
50அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார்.
51பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி,
52தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.
53அவர் எருசலேமுக்குப்போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
54அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
56மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
57அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
58அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
59வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
60அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார்.
61பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
62அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *