Scripture Portion: Acts 4-6

அப்போஸ்தலர் 4

1அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து,
2அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு,
3அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள்.
4வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
5மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும்,
6பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி,
7அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.
8அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே;
9பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால்,
10உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
11வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.
12அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
13பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.
14சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.
15அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:
16இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது.
17ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு,
18அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
19பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள்.
20நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள்.
21நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள்.
22அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான்.
23அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள்.
24அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.
25புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும்,
26கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே.
27அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,
28ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள்.
29இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து,
30உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள்.
31அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.
32விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது.
33கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரணகிருபை உண்டாயிருந்தது.
34நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து,
35அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை.
36சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன்,
37தனக்கு உண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தைக் கொண்டு வந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

அப்போஸ்தலர் 5

1அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
2தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.
3பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
4அதை விற்குமுன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
5அனனியா இந்த வார்த்தைகளைக்கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று.
6வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம் பண்ணினார்கள்.
7ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
8பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள்.
9பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.
10உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
11சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.
12அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள்.
13மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள்.
14திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
15பிணியாளிகளைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
16சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள்.
17அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,
18அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
19கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:
20நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
21அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள்.
22சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:
23சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.
24இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள்.
25அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
26உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப்போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.
27அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:
28நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.
29அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.
30நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,
31இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்,
32இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.
33அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனை பண்ணினார்கள்.
34அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி,
35சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
36ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள்.
37அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள்.
38இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால் இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்;
39தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
40அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.
41அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
42தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.

அப்போஸ்தலர் 6

1அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள்.
2அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணை செய்வது தகுதியல்ல.
3ஆதலால் சகோதரரே, பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம்.
4நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள்.
5இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்த ஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு,
6அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள்.
7தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
8ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
9அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள்.
10அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று.
11அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி;
12ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்;
13பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷணவார்த்தைகளை ஓயாமற்பேசுகிறான்;
14எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள்.
15ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *