Scripture Portion: Acts 11-12

அப்போஸ்தலர் 11

1புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள்.
2பேதுரு எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி:
3விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள்.
4அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி:
5நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக் கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது.
6அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன்.
7அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
8அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன்.
9இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி சொல்லிற்று.
10இப்படி மூன்றுதரம் சம்பவித்தபின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது.
11உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்குமுன்னே வந்துநின்றார்கள்.
12நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம்.
13அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு;
14நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான்.
15நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார்.
16யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன்.
17ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்கு தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான்.
18இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
19ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள்.
20அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள்.
21கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.
22எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள்.
23அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான்.
24அவன் நல்லவனும், பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
25பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
26அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
27அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
28அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று.
29அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ்சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள்.
30அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.

அப்போஸ்தலர் 12

1அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;
2யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
3அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.
4அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.
5அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
6ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
7அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
8தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
9அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.
10அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.
11பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.
12அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
13பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள்.
14அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.
15அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.
16பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.
17அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான்.
18பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
19ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.
20அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
21குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
22அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
24தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.
25பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *