நாம் ஏற்கனவே பார்த்தபடி, கிமு722ல் வடதேசமாகிய இஸ்ரவேலை, அசீரியர்கள் சிறைபிடித்து சென்றனர். அதன் பின்னர்,  கிமு586ல், தென்தேசமாகிய யூதேயாவை(எருசலேம்) பாபிலோனியர்கள்(கல்தேயர்) சிறைபிடித்து சென்றனர். அந்தக் கூட்டத்தில்தான் தானியேல், அவர் நண்பர்கள், எசேக்கியேல் தீர்க்கதரிசி என்பவர்களும் பாபிலோனுக்கு சென்றனர். பாபிலோனியர் வந்து, யூதேயாவை சிறைபிடிப்பதற்கு முன்பே, கிட்டத்தட்ட 40 வருடங்கள் எரேமியா தீர்க்கதரிசி, “எருசலேம் சிறைப்பட்டு போகும்” என தீர்க்கதரிசனம் உரைத்துக் கொண்டே இருப்பார். “எருசலேம் சிறைப்பட்டு போகும். 70 வருடங்கள் கழித்து யூதேயா மக்கள் திரும்ப  எருசலேமுக்கே வருவார்கள்” என தீர்க்கதரிசனம் உரைத்திருப்பார். இப்போது தானியேல் பாபிலோனில் இருக்கும்போது இந்த 9ம் அதிகாரத்திலுள்ள சம்பவங்கள் நடக்கிறது.

தானியல் ஒன்பதாம் அதிகாரத்தின் தீர்க்கதரிசன நிறைவேறுதல் பற்றி இன்று பார்க்க இருக்கிறோம். இரண்டாம் வசனத்தில் “எரேமியா தீர்க்கதரிசிக்கு கர்த்தர் சொன்ன 70 வருஷத்தை புத்தகங்களால் அறிந்து கொண்டேன்” என்று தானியேல் கூறுகிறார். நாம் இப்பொழுது இருக்கிற காலம் போல் அந்தக் காலம் கிடையாது. எனவே எல்லா தகவல்களும் எளிதாக எல்லா மக்களுக்கும் கிடைப்பதும் இல்லை. அக்கால கட்டத்தில் ஒரு தோல்சுருள் செய்வது மிகவும் விலை உயர்ந்தது(costly). எனவே நேபுகாத்நேச்சார் இஸ்ரேலை கொள்ளையிடும்போது, பல தோல் சுருள்களையும் கொண்டு வந்து, தனது அரண்மனையின் நூலகத்தில் வைத்திருந்தார். அரண்மனையின் முக்கிய அதிகாரியாக தானியேல் இருந்ததால், 70 வருடம் கழித்து, அவருக்கு அந்த தோல் சுருள் கையில் கிடைத்திருக்கும். அதை வைத்து எரேமியாவின் தரிசனத்தை அறிந்து, இப்பொழுது ஒரு அழகான ஜெபத்தை ஏறெடுக்கிறார் தானியேல். தன்னுடைய ஜனங்களுக்காக விண்ணப்பம் செய்கிறார்.

தானியலின் தீர்க்கதரிசனம் நிறைவேறுதலை வரிசையாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சில வேதவல்லுனர்கள் கூறுவது என்னவெனில், தானியேல் ஏற்கனவே, மேசியா பிறக்கும் பொழுது ஒரு நட்சத்திரம் உதிக்கும் என்று எழுதி வைத்திருந்ததாகவும், அதை அறிந்திருந்த சாஸ்திரிகள், அவரைத்(இயேசுவை) தேடி வந்து பணிந்ததாகவும் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு, வானியல் பற்றியும் தெரிந்து வைத்திருந்தவர் தானியேல். அறிவியல் பற்றியும் தெரிந்து வைத்திருந்தவர் தானியேல். மிக மிக ஞானமுள்ளவர் தானியேல். அதனால்தான் அடிமையாகச் சென்ற நாட்டில், அரசனுக்கு இணையாக இருந்தார்.

21 ஆம் அதிகாரத்தில் வசனத்தில் காபிரியேல் தூதன் தானியேலிடம் வந்து, ‘உனக்கு அறிவை உணர்த்த நான் வந்து இருக்கிறேன்’ என்று கூறுகிறார். இவ்வளவு அறிவாளியான தானியேலுக்கு எதை உணர்த்துவதற்கு அவர் வந்தார் என்பதை, அதன் கீழே உள்ள தரிசனம் விளக்குகிறது. நீ இப்பொழுது கணக்கிட்ட 70 வருடம்(அதாவது எருசலேம் மக்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டு சென்று, 70 வருடங்கள் கழித்து மீண்டும் எருசலேமுக்கு வந்தது), வெறும் டீசர் மட்டுமே. ஆனால் மெயின்பிக்சரான ஒரு 70 வருட காலம் வரப்போகிறது. அந்த 70 வருடத்தைப் பற்றி நீ அறிந்து கொள் என்று, காபிரியேல் கூறுகிறார். நமது பதிவில் ஆரம்பத்திலிருந்து ஒரு காரியம் குறிப்பிட்டு இருப்போம், இஸ்ரவேலர்கள் அவர்களே அறியாமல் அவர்களது தொழில் என்னவாக இருந்தது என்றால் அது, தீர்க்கதரிசனம் உரைத்தது. அதேபோல்தான் இப்பொழுதும் அவர்கள் எழுபது வருடம் அடிமையாக இருப்பதும் ஒரு தீர்க்கதரிசனமே. இது மற்றொரு 70 என்ற கணக்கைக் குறிக்கிறது.

இதுவரை எவ்வளவோ காரியங்கள் தேவன் ஒவ்வொரு தீர்க்கதரிசியிடமும் பேசி இருப்பார். ஆனால் யாருக்குமே ஒரு நேர அட்டவணை(timeline) கொடுத்தது கிடையாது. இப்பொழுது தானியலுக்கு அந்த அட்டவணை கொடுக்கிறார். 70 வாரங்கள் என்று ஒரு திட்டத்தை அறிவிக்கிறார். இஸ்ரவேலர்கள் எல்லாரும் பாபிலோனில் அடிமையாக இருக்கிறார்கள்.

இப்பொழுது அவர்களுக்கு வந்த தீர்க்கதரிசனம் என்னவெனில், இஸ்ரவேலர் எருசலேமுக்குப் போய், அதன் அலங்கத்தை கட்டுவதற்கு ஒரு கட்டளை பிறக்கும் நேரம், சரியாக இந்த நேர அட்டவணை(timeline ) தொடங்கும். முதல் ஏழு வாரத்தில் வீதியும் அலங்கமும் கட்டப்பட்டு விடும். அதன் பின் 62 வாரங்கள் கழித்து, மேசியா சங்கரிக்கப்படுவார். மீதம் இருப்பது ஒரு வாரம். அந்த ஒரு வாரத்தில், பாதி சென்றபோது, அதாவது மூன்றரை நாட்கள் சென்ற பின்பு, பலியும் காணிக்கையும் ஓயப்பண்ணுவார். இதுதான் அவர்களுக்கு தானியேல் உரைத்த தீர்க்கதரிசனம்.

தரிசனத்தில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது, அலங்கம் கட்ட கட்டளை வெளிப்படும் போது என்று. பாபிலோனில் இருந்து எருசலேமுக்கு சென்றவர்கள், முதலில் உள்ளே போனவர்கள், சுற்றிலும் இருந்த எதிரிகளின் மிரட்டல்களால், தனக்குத்தானே வீடு கட்டிக் கொண்டு அவர்களே வாழ ஆரம்பித்து விட்டார்கள். அதன் பின்பு செருபாபேல் தலைமையில் உள்ளே சென்றவர்கள், இரண்டாவது ஆலயத்தைக் கட்டினார்கள். இப்படியாக 150 வருடம் கடந்துவிட்டது. அதன் பின்னர் தான் நெகேமியா காலத்தில், கி.மு 444ல் அலங்கம் கட்டுவதற்கு கட்டளை வெளிப்பட்டது. அதை 53 நாட்களில் கட்டி முடித்துவிட்டு, பிரதிஷ்டை செய்தார்கள். இந்த நேர அட்டவணை timeline என்பது பிரதிஷ்டை செய்த நாளில் ஆரம்பிக்கப்படவில்லை. அலங்கம் கட்ட கட்டளை கொடுக்கும் போதே ஆரம்பிக்கப்பட்டது.

šāḇûaʿ – seven, period of seven (days or years), heptad, week

வாரம் அல்லது வருடம் இரண்டையுமே ( שָׁבוּעַ ) shâbûwaʻ, shaw-boo’-ah என சொல்லுவார்கள்.

Shabuwa என்றால் ஏழு.

70 வாரம் (70 Shabuwa) = 70×7 = 490 வருடங்கள்.

69 வாரம் (69 Shabuwa) = 69×7 = 483 வருடங்கள்

ஆனால் இங்கு ஒரு நாள் என்பது ஒரு வருடம் என்ற கணக்கில் உள்ளது. எனவே 490 நாட்கள் என்பது 490 வருடத்தைக் குறிக்கிறது.

யூதர்களுக்கு ஒரு மாதத்திற்கு 30 நாட்கள் எனவே 490 வருடத்திற்கு 1,73,880 நாட்கள்.

அலங்கம் கட்ட கட்டளை பிறப்பிக்கப்பட்ட நாள் முதல், ஏழு வாரம் கடந்தால், எருசலேம் அலங்கமும் வீதியும் கட்டப்பட்டு முடிந்தது. அதன்பின் 62 வாரங்கள். சரியாக அந்த நாட்கள் முடியும் போது, மேசியா சங்கரிக்கப்பட்டார். இயேசு நம்மெல்லாருக்காகவும் ஜீவனைத் தரும் ‌காலத்தையும் தானியேல் முதலாவதாகவே தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறார்.

வசனத்தின் படி, ஏழு வாரமும் 62 வாரமும் செல்லும்(7+62=69). அதாவது 69 வாரங்கள். 483 வருடங்கள் பற்றிய தரிசனம் கூறப்பட்டிருக்கிறது. நாம் இதற்கு முன்பாக பார்த்த, தானியல் இரண்டாம் அதிகாரம் மற்றும் ஏழாம் அதிகாரத்தில், பாபிலோன் சாம்ராஜ்யம், மேதிய பெர்சிய சாம்ராஜ்யம், கிரேக்க சாம்ராஜ்யம், மற்றும் ரோம சாம்ராஜ்யம் பற்றி கூறி, அதற்கு அடுத்து உடனே, இயேசுவின் ஆயிரம் வருட அரசாட்சி பற்றி கூறியிருக்கும். இங்கேயும் அதேபோல் 483 வருடங்கள்(69 வாரங்கள்) இந்த சாம்ராஜ்யங்களின் காலத்தைக் குறிப்பிட்டு, அதற்கு அடுத்து ஏழு வருடங்கள்(70வது வாரம்) உபத்திரவ காலத்தை பற்றி கூறியிருக்கும்.

ஆனால் இந்த நேர அட்டவணையானது timeline, மேசியா சங்கரிக்கப்பட்டவுடன் நின்று விட்டது. அதாவது 483 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அடுத்த ஏழு வருடங்கள் உடனடியாக இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்கு பதிலாக இடையில் சபையின் காலம் வந்துவிட்டது. அதாவது கிருபையின் காலம் வந்துவிட்டது. யூதர்களுக்கு புறஜாதிகளாயிருந்த நாம், இப்போது தேவனுடைய அதிகாரப்பூர்வமான பிள்ளை ஆகிவிட்டோம். நாம் எல்லாரும் கிருபையின் காலத்தில் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 483 வருடங்கள் முடிந்தவுடன், திருச்சபை உள்ளே வந்துவிட்டது. எப்பொழுது திருச்சபை மேலே எடுத்துக் கொள்ளப்படுகிறதோ, அப்பொழுது இந்த ஏழு வருடங்கள் ஆரம்பிக்கும். இரண்டாம் வருகைக்கான அடையாளங்கள் என்று இயேசு கூறியிருப்பது, அந்த ஏழு வருடத்தில் நடக்கப் போகிற நிகழ்வுகள் தான். இரண்டாம் வருகைக்கு அடையாளங்கள் உள்ளன. ஆனால் இரகசிய வருகைக்கு அடையாளம் கிடையாது. இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாரம் பாதி சென்றபோது, பலியையும் காணிக்கையும் ஒழியப் பண்ணுவார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அதாவது இந்த ஏழு வருடத்தை இரண்டாகப் பிரித்து, உபத்திரவ காலம் என்றும், மகாஉபத்திரவ காலம் என்றும் கூறுகிறார்கள். அந்த கிறிஸ்து வந்ததும், முதல் மூன்றரை வருடங்கள் யூதர்களுக்கு சாதகமாக இருந்து, அவர்களுக்கு தேவாலயம் கட்டித்தருவான். ஆனால் கட்டி முடித்துவிட்டு, தன்னை வணங்கும் படி யூதரைக் கட்டாயப்படுத்துவான். அப்போது தான் அவர்களுக்கு மகா உபத்திரவ காலம் ஆரம்பிக்கும்.

இரகசிய வருகையைப் பற்றி மூன்று கருத்துகள் கூறுகிறார்கள்.

1.வரப்போகும் ஏழு வருடத்திற்கு முன், இரகசிய வருகை இருக்கும்.

2. ஏழு வருடத்தில், முதல் மூன்றரை ஆண்டுகள் முடிந்த பிறகு, இரகசிய வருகை இருக்கும்.

3. ஏழு வருட உபத்திரவ காலம் முடிந்த பிறகு தான் ஆண்டவரின் வருகை. இரகசிய வருகை கிடையாது.

இந்த மூன்றில் எது உண்மை என்பது பற்றி விவாதிக்க விரும்பவில்லை. இதுவரை 483 வருடங்கள் அந்த தீர்க்கதரிசனம் இஸ்ரவேலருக்கு என்றால், மீதமுள்ள 7 வருடமும் இஸ்ரவேலருக்கு மட்டுமே.

பிதாவானவர், யூதனையும் நம்மையும் தனித்தனியாக பார்த்தால், நாம் உபத்திரவ காலத்துக்கு தப்பி விடுவோம். பிதா, எல்லாரையும் ஒரே மாதிரி பார்த்தால், நாம் உபத்திரவ காலத்துக்கு தப்பமுடியாது. பிதா இப்படித்தான் நினைப்பார் என்று யாராலும் நிதானிக்க முடியாது. உபத்திரவ காலங்களில் மகா பெரிய எழுப்புதல் காத்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஆயத்தமாக காத்திருக்க வேண்டும் என்பதே ஆவியானவர் நமக்குக் கொடுக்கும் ஆலோசனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *