September 24,2023 Evening 6லிருந்து, September 25 Evening வரை பாவ நிவிர்த்தி நாள் என்கிற ஆறாம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆம், இன்று எபிரேய காலண்டரில் ஏழாவது மாதம் 10ம் தேதி. கர்த்தர் கொண்டாடச் சொல்லிய ஏழு பண்டிகைகளில், ஆறாவது பண்டிகை இன்று. எபிரேய ஏழாம் மாதத்தில் முதல் நாள் Rosh Hashannah என்று, முதல் பதிவாகப் படித்தோம். ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், எபிரேய ஏழாம் மாதம் முதல் தேதியிலிருந்து, எபிரேய ஏழாம் மாதம் பத்தாம் தேதி வரை, இந்த 10 நாட்களை பரவசத்தின் நாட்கள் (Days of Awe) என்று கூறுகிறார்கள். 10 days of Fasting என்று இந்த நாட்களை நியமித்து, பத்தாவது நாளுக்காக காத்திருப்பார்கள். இந்த நாளானது இஸ்ரேலருக்கு அவ்வளவு முக்கியமான நாள். இந்த 10 நாட்களும் பரலோகத்தின் தேவனிடம் மன்றாடி, தங்கள் பெயரை ஜீவபுஸ்தகத்தில் எழுத வைக்கும் நாட்களாக கருதுகின்றனர். கடந்த ஒரு வருடம் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு பெறும் நாட்களாக கருதுகின்றனர். இன்றைய நாளின் முடிவில் ஒரு எக்காளம் ஊதுவார்கள். அதோடு பரலோகத்தின் கதவுகள் மூடப்படுவதாக கருதுகின்றனர் இஸ்ரவேலர்கள்.
ஏன் அப்படி நினைக்கிறார்கள்? அதற்கு லேவியராகமம் 16ம் அதிகாரத்துக்கு செல்ல வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை பிரதானஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்வார் என்று அடிக்கடி கேட்டிருக்கிறோம் அல்லவா… அந்த நாள் இன்றைக்குத்தான். இந்த நாளில்.
லேவி 16ல் பாவ நிவாரண பலி, சர்வாங்க தகன பலிக்கான செய்முறை குறித்து ஆண்டவர் பேசி இருப்பார். ஆரோன் தனக்காக பாவ நிவாரண பலி செலுத்தி விட்டு, பின்னர் இஸ்ரவேலர் எல்லோருக்காகவும் செலுத்த வேண்டும். இரண்டு வெள்ளாட்டுக்கடா எடுத்துக் கொண்டு, சீட்டு போட்டு பார்த்து விட்டு, சீட்டில் வந்த வெள்ளாட்டுக்கடாவை கர்த்தருக்கென்று, பிரித்து வைக்க வேண்டும். முதலில் ஆரோன், தனக்காக காளையை பலியிட்டு, அதன் இரத்தத்தை ஏழு தரம் தெளிக்க வேண்டும். பின்பு ஜனங்களின் பாவத்துக்காக சீட்டில் விழுந்த வெள்ளாட்டுக்கடாவை எடுத்து பலியிட்டு, அதன் இரத்த்த்தையும் தெளிக்க வேண்டும். மற்றொரு கடாவை, பிரதான ஆசாரியன், அதன் தலையின் மீது கை வைத்து, இஸ்ரவேலர் எல்லோருடைய பாவத்தையும் அதன் தலையில் சுமத்தி, அதை வனாந்திரத்தில் போக்காடாக விட வேண்டும்.
31. உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை.
லேவி 16-31
ஆண்டவர் கொடுத்த கட்டளை, அது விசேஷித்த ஓய்வு நாள். அதில் ஆத்துமாவை தாழ்த்த வேண்டும். இது தான் ஆண்டவர் கொடுத்த கட்டளை.
பிரதான ஆசாரியன் அந்த நாளில் தெளித்த இரத்தம், மிக குறைந்த நேரம் மட்டுமே கர்த்தருடைய சன்னிதியில், பிரதான ஆசாரியனை நிற்க வைத்தது. ஆனால் இன்று நமக்கான பலி, இயேசு கிறிஸ்து. அவருடைய இரத்ததின் பரிசுத்தம், நம்மை எப்பொழுதும், எந்நேரமும் அவருடைய சன்னிதியில் நிற்க வைத்திருக்கிறது. இப்பொழுது இஸ்ரவேலர் இந்த பண்டிகையில் என்ன செய்கிறார்கள் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
மன்னிப்பு கேளுங்கள்
இந்த நாட்களில், தேவனிடம் மட்டுமல்ல, பிற மனிதர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரிந்தாலும், நாம் அவர்களிடம் உண்மையான மனதுடன் மன்னிப்பு கேட்க வேண்டியது அவசியம்.
2. பிறரை மன்னியுங்கள்
மன்னிப்பு கேட்பது கூட சில சமயங்களில் எளிது. ஆனால் பூரணமாக மன்னிப்பது மிகவும் கடினம். இயேசு தான் நமது எடுத்துக்காட்டு. இந்த உலகை, உலகிலுள்ள ஒவ்வொரு பொருள், இடம் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து ரசித்து படைத்த நம் இயேசுவை, அவரின் படைப்பான மனிதனே, சிலுவையில் தொங்க விட்டு, அதுவும் நிர்வாணமாய் தொங்க விட்டான். அவர்களையும் மன்னித்தார் இயேசு.
பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே ஜெபத்தில், பிறருடைய குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் என்று போதித்தார். அதனுடைய இன்னொரு அர்த்தம், பிறருடைய குற்றங்களை நாம் மன்னிக்கவில்லை என்றால், நம் குற்றங்களை அவர் மன்னிக்க மாட்டார்
3. விசேஷித்த ஓய்வு நாள்
இந்த நாளினை ஓய்வு நாளாக கொண்டாடி, எந்த ஒரு வேலையும் செய்ய மாட்டார்கள். இந்த நாளில் அவர்கள் செய்வது எல்லாம், தேவனை நோக்கி அமர்ந்திருப்பது மட்டும் தான்.
4. உபவாசம்
தோராயமாக 25 மணி நேரம் உபவாசம் இருப்பார்கள். இன்று சூரிய மறைவு முதல், நாளை சூரிய மறைவு வரை உபவாசம் இருப்பார்கள். லேவி 16- 31ல் ஆத்துமாவை தாழ்மைப்படுத்த வேண்டும் என்று தேவன் கூறி இருப்பார். “உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப் படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை”.
ஆனால், தாவீது, “நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்” என்று சங்கீதம் 35-13ல் கூறி இருப்பார். இந்த உபவாசம் அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்காக, மற்றும் மனந்திரும்புதலுக்காக.
ஆத்துமாவின் ஒடுக்கம் என்பதால், வெறும் உபவாசம் மட்டும் அல்ல, அன்றைய தினம் விலை கூடிய உடைகள், லெதர் ஷூ அணிவது என்று சில வெளி அடையாளங்களையும் காட்டுவார்கள்.
5. வெள்ளை உடை
இந்த நாளில், பெரும்பாலான யூதர்கள் வெள்ளை உடை அணிந்து இருப்பார்கள். தூய்மை மற்றும் மனத்தாழ்மைக்கு அடையாளமாக, தேவன் நம் பாவத்தை மன்னித்ததற்கு அடையாளமாக வெள்ளை உடை போடுவர்.
6. கதவு அடைக்கப்படும்
யூத பாரம்பரிய நம்பிக்கையின்படி, Gates of Heaven எனப்படும் பரலோகத்தின் கதவு அடைக்கப்படும் நாள் இன்றுதான். இதுவரை திறந்து இருக்கிற புத்தகங்கள், எக்காளம் ஊதியவுடன் மூடப்படும், இந்த வருடத்துக்கான நியாயத்தீர்ப்புக்கு முத்திரை போடப்படும் என்று நம்புகிறார்கள். இந்த நாள் தான் மனம் திரும்புதலுக்கான கடைசி நாள். இதை விட்டு விட்டால், அடுத்த வருடம் எபிரேய ஏழாம் மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதற்கு இடையில் மரணம் வந்து விட்டால், கொடுத்த தருணத்தை இழந்து விட்டோம் என்று கருதுகிறார்கள்.
நமக்கு இயேசுவின் இரத்தம் மூலம், எப்பொழுது வேண்டுமானாலும் மன்னிப்பு பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நம் கடைசி நாள் என்ன என்பது நாம் அறியாததே… எனவே ஒருவேளை ஏதேனும் ஒரு காரியத்துக்காக மனம் திரும்ப வேண்டுமானால், இன்றே திரும்புவோம். பாவ நிவிர்த்தி நாளை சந்தோஷமாக கொண்டாடலாம்.
Leave a Reply