மொத்தம் 7 பண்டிகைகள் இஸ்ரவேலர் கொண்டாடும்படி தேவன் வேதத்தில் கொடுத்திருக்கிறார் என்று பார்த்த நாம், அவை ஒவ்வொன்றைப் பற்றியும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
பஸ்கா பண்டிகை நிசான் 14
புளிப்பில்லா அப்ப பண்டிகை நிசான் 15
முதற்கனி பண்டிகை நிசான் 16
பெந்தெகோஸ்தே சீவான் 6
எக்காள பண்டிகை திஷ்ரி 1
பாவ நிவிர்த்தி நாள் திஷ்ரி 10
கூடாரப் பண்டிகை திஷ்ரி 15-22
இந்த 7 பண்டிகைகளில், 3 பண்டிகைகளுக்கு, யூத ஆண்கள் எங்கிருந்தாலும், எருசலேமுக்கு கூடி வர வேண்டும் என்று தேவன் கூறியிருப்பார்.
வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
உபாகமம் 16-16
அந்த 3 பண்டிகைகள், பஸ்கா, பெந்தெகோஸ்தே, கூடாரப்பண்டிகை என்று வேதத்தில் பார்க்கிறோம். இதில், பஸ்கா என்பது, நாம் பாவ வாழ்விலிருந்து, இயேசுவின் இரத்தத்தின் மூலம் மீட்கப்பட்ட அனுபவத்தைக் குறிக்கிறது. பெந்தெகோஸ்தே என்பது, நாம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்ற அனுபவத்தைக் குறிக்கிறது. கூடாரப்பண்டிகை என்பது மூன்றாவது அபிஷேகத்தைக் குறிக்கிறது. இந்த மூன்றாவது அபிஷேகம் என்பது, கடைசி காலங்களில் வாழும் நமக்கான அபிஷேகம். அதைப் பற்றி வேறே தலைப்பில் படிக்கலாம். இந்த மூன்றாவது அனுபவத்தை, Third anointing, Joy anointing, Third Pentecost, Sukkot Experience என்று பல பெயர்களில் கூறுகிறார்கள். தமிழில் பார்த்தால், Pastor.Alwin Thomas மூன்றாம் பெந்தெகோஸ்தே என்று இந்த அனுபவத்தைக் கூறுகிறார்.
ஏழு பண்டிகைகளில், முதல் 4 பண்டிகைகள் Spring seasonல் வருவதாகவும், மீதமுள்ள 3 பண்டிகைகள் fall seasonல் வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால் உண்மையில், முதல் 3 பண்டிகைகள் Spring seasonலும், நான்காவது பண்டிகை springன் முடிவிலும், fallன் ஆரம்பத்திலும் இருக்கிறது. எனவே பெந்தெகோஸ்தே பண்டிகை என்பது, இரண்டு சீசனையும் connect பண்ணும் ஒன்றாக உள்ளது. பஸ்காவையும் சுக்கோத்தையும் இணைப்பது பெந்தெகோஸ்தே.
பஸ்காவின் காலத்தில், பார்லி அறுவடை நடக்கும். பெந்தெகோஸ்தே காலத்தில் கோதுமை அறுவடை நடக்கும். சுக்கோத் காலத்தில், ஒலிவ மற்றும் திராட்சைப் பழங்களின் அறுவடை நடக்கும். இந்த பெந்தெகோஸ்தே காலத்தில், தேவன் கோதுமையில் 2 புளித்த அப்பத்தை செய்து போஜனபலியாக கொண்டு வரச் சொல்கிறார். இதுவரையில், புளிப்பில்லா அப்பம் சாப்பிட வேண்டும் என்று தான் பார்த்தோம், ஆனால் இப்பொழுது புளித்த அப்பங்கள். அதனோடு 7 one year lamb(ஓரு வயது ஆட்டுக்குட்டி), 1 young bull(இளங்காளை), 2 rams (ஆட்டுக்கடா) பலியிட வேண்டும். (லேவி 23 : 15-22). Wave Offering (அசைவாட்டும் காணிக்கையாக), அப்பம், 2 ஆட்டுக்குட்டி கொண்டு வர வேண்டும் என்று தேவன் கூறுகிறார்.
இதன் ஆவிக்குரிய அர்த்தம் என்ன என்றால், 2 புளித்த அப்பம் என்பது, மேசியா(கிறிஸ்து) வந்து, யூதர் மற்றும் புறஜாதிகளை, அவருக்குள் ஒன்றாக்கி விடுவார் என்பதைக் குறிக்கிறது. 2 அப்பங்களில், ஒன்று நம்மைத் தான் குறிக்கிறது. வேதத்தில் புளிப்பு என்பது பாவத்தைக் குறிக்கும். எனவே இங்கு புளித்த அப்பம் நமக்கு சொல்வது, மேசியாவின் இரண்டாம் வருகை வரையில் பூமியில் பாவம் இருக்கும்.
நாம் ஏற்கனவே எகிப்து முதல் சீனாய் வனாந்திரம் வரை என்கிற பதிவில், எகிப்தில் புறப்பட்டது முதல், சீனாய் மலையில் தேவன் இறங்கி பேசியது வரை உள்ள காலம் சரியாக 50 நாட்கள் எனவும், அதே நாளைத் தான் தேவன் வாரங்களின் பண்டிகையாக கொண்டாடச்சொன்னார் எனவும், பார்த்தோம். எபிரேயத்தில் ஐம்பது என்பது Shavuot. அதம் கிரேக்க பதம், Pentecost. எனவே பெந்தெகோஸ்தே என்பது 50 என்கிற அர்த்தம் குறிக்கிறது. ஆண்டவர் கொண்டாடச் சொல்லிய அந்த நாளை கொண்டாடும்போது தான், அப்-2ல் பெந்தேகொஸ்தே அனுபவம் உருவானது.
யாத்19ம் அதிகாரத்தில் தேவன் சீனாய் மலையில், மோசேயோடு பேசிய அனுபவம் இருக்கிறது.
16 மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
17 அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள்.
18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது.
19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.
மோசே மலைக்கு ஏறிப் போகும்போது, தேவன் கற்பனைகளையும், கட்டளைகளையும் கொடுப்பார். வேதத்தில் 10 கற்பனையும், 613 கட்டளைகளும் உள்ளது. இதைத் தான் நியாயப்பிரமாணம் என்று கூறுவர். இந்த பெந்தேகோஸ்தே அனுபவமாகிய சீனாய் மலையில், மோசேயிடம் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.
இயேசு உயிர்தெழுந்த பின்னர் பெந்தெகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். அப்போஸ்தலர் 2ல் இந்த அனுபவம் உள்ளது.
1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது.
அப்போஸ்தலர் காலத்தில் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டார். இந்த பெந்தெகோஸ்தே அனுபவம், எருசலேமில் (சீயோன் மலையில்) நடந்தது. எனவே சீனாய் மலையில் நியாயப்பிரமாணமும், சீயோன் மலையில் ஆவியானவரும் கொடுக்கப்பட்டார்கள். இந்த இரண்டு அனுபவங்களுக்கும் ஒற்றுமைகள் உள்ளன.
இரண்டு அனுபவங்களும் மலையில் (Mountain)ல் நடைபெற்றது. ஒன்று சீனாய் மலையில், மற்றொன்று சீயோன் மலையில்.
புதிதாக இரட்சிக்கப்பட்டவர்கள் இந்த அனுபவத்தை பெற்றனர். எகிப்திலிருந்து மீட்கப்பட்டவர்கள், சீனாய் மலையிலும், கிறிஸ்துவின் மூலம் மீட்கப்பட்டவர்கள் சீயோன் மலையிலும் பெற்றார்கள். சீனாய் மலையில் இஸ்ரவேலர் என்கிற ஜனம் உருவானார்கள், சீயோன் மலையில், கிறிஸ்தவர்கள் உருவானார்கள்.
இரண்டு அனுபவத்திலும் தேவனுடைய ஜனங்கள் ஒரு பரிசை(Gift) பெற்றுக்கொண்டனர். சீனாய் மலையில் நியாயப்பிரமாணம் (Torah), சீயோன் மலையில் ஆவி (Spirit).
இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின், 40 நாட்கள் மோசே மலைக்கு ஏறிப்போய், தேவனிடம் கற்பனைகள் எழுதிய பலகை வாங்கி வருகிறார். ஆனால் ஜனங்கள் பொன் கன்றுக்குட்டியை செய்ததால், 3000 பேர் கொல்லப்பட்டனர். சீயோன் மலையிலோ, பேதுரு எழுந்து நாங்கள் குடித்து வெறிக்கவில்லை என்று பேசும்போது, ஏறக்குறைய 3000 பேர் இரட்சிக்கப்பட்டனர்.
எகிப்திலிருந்து வந்த 50ஆவது நாள், சீனாயில் மோசே மூலமாக தேவன் சில காரியங்களைக் கூறும்போது, மக்கள் அதை ஏற்றுக்கொண்டு, நீர் சொன்னபடியே செய்வோம் என்று உடன்படிக்கை செய்தார்கள். சீயோனிலோ, புதிய உடன்படிக்கை அருளப்பட்டது.
சீனாய் மலையில், Law (கற்பனைகள்) 2 கற்பலகைகளில் கொடுக்கப்பட்டது. சீயோனிலோ Law நம் இருதயத்தில் எழுதப்பட்டது.
சீனாய் மலையில் நெருப்பு எல்லாருடைய கண்களுக்கு முன்பாக மலையில் இறங்கியது. சீயோனிலோ நெருப்பு, ஒவ்வொருவர் தலையிலும் வந்து அமர்ந்தது. சீனாயில் நெருப்பை விட்டு ஜனங்கள் தள்ளி நின்றனர். சீயோனிலோ நெருப்பு ஜனங்களிடம் வந்தது.
சீனாய் மலையில், தேவ பிரசன்னம், மேகம் மற்றும் நெருப்பு மூலம் அடையாளப்படுத்தப்பட்டு, தேவன் ஆலயமாகிய ஆசரிப்பு கூடாரத்துக்குள் சென்றார். சீயோன் மலையில், தேவன் அவர் இருப்பிடமாகிய ஆலயத்திலிருந்து, புதிய இருப்பிடமாகிய நமக்குள் வந்து வாசம் பண்ண ஆரம்பித்தார்.
சீனாய் மலையில் தோரா (Torah) கொடுக்கப்பட்டது. சீயோன் மலையில், தோரா எழுத உதவிய பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்பட்டார்.
இப்படி பல ஒற்றுமைகள் சீனாய்க்கும், சீயோனுக்கும் உள்ளது. முக்கியமானது, அனேகம் பேர் பேசி கேட்டிருப்போம், நியாயப்பிரமாணம்- ஆவி. அல்லது நியாயப்பிரமாணம் – கிருபை என்று கேட்டு இருப்போம். நியாயப்பிரமாணத்தினால் மரணம் வந்தது என்று கேட்டிருப்போம். ஆனால் அவை எல்லாம், சரியாகப் புரிந்து இருக்கிறோமா என்றால், கேள்விக்குறி தான்.
ஏன் நியாயப் பிரமாணம் கொடுக்கப்பட்டது?
வேதத்தின் அடிப்படை வசனம் என்ன என்று நமக்குத் தெரியும்.
15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
ஆதியாகமம் 3 -1 5
இவ்வசனம் தான் வேதத்தின் ஆதார வசனம். இதை நோக்கி தான் வேதம் பயணப்பட்டிருக்கும். ஆதாமுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் சேத் குடும்ப வரலாறு தான் கொடுக்கப்பட்டிருக்கும். ஆதாமிலிருந்து இயேசு வரை உள்ள ஒரு குடும்பத்தின் வரலாறு தான் வேதபுத்தகம். நாமும் இன்று, இயேசுவின் மூலமாக தேவனுடைய பிள்ளைகள் ஆனதால், நாமும் அந்த குடும்பத்துக்குள் வந்து விட்டோம். ஆதாமை முதலாவது தேவன் ஏன் உருவாக்கினார்?
மல்கியா 2:15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே; பின்னை ஏன் ஒருவனைப்படைத்தார்? தேவபக்தியுள்ள, சந்ததியைப் பெறும்படிதானே.
அவர் ஆதாமை படைத்ததன் நோக்கம், தேவபக்தியுள்ள சந்ததியை பெறும்படியாக. ஆனால் பாவத்தினால் மனிதன் விழுந்து போனான். ஆதாம் செய்த பாவம் என்ன?
ஆதாம் செய்த தவறு, தேவனுக்கு கீழ்ப்படியவில்லை. தேவன் ஆதாமை மட்டும் தண்டித்து விட்டு, அவனை கொன்று போட்டு, வேறே மனிதர்களை உருவாக்கி, தேவனுக்கு கீழ்ப்படிகிறார்களா என்று சோதிக்கவில்லை. ஆதாம் மூலமாக, எல்லா மனிதனுக்கும் நியாயத்தீர்ப்பு வந்து விட்டது. ஆதாம் பாவம் செய்ததால் மரணம் வந்தது என்பது தெரியும். உடனே ஆதாம் செத்துப் போனாரா? இல்லையே! அப்படியானால் என்ன மரணம் வந்தது? ஆதாம் ஆவியில் மரித்தார், நித்திய ஜீவனை இழந்து போனார்.
லேவியராகமம் 18:5 ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
இப்பொழுது தேவன் மனிதனை மீட்க கொடுத்த ஒன்று தான், நியாயப்பிரமாணம். நியாயப்பிரமாணம் மூலமாக, மனிதன் இழந்த ஜீவனை ஆண்டவர் மீண்டும் கொடுக்க நினைத்தார். பாவம் கீழ்ப்படியாததால் வந்தது. நியாயப்பிரமாணத்துக்கு (Law) கீழ்ப்படிந்தால் ஜீவன் வரும் என்று தேவன் நியாயப்பிரமாணம் கொடுத்தார். அதாவது ஆதாம் இழந்து போன ஜீவனை, நியாயப்பிரமாணம் மூலமாக திரும்ப கொடுக்க நினைத்தார். ஒரு பொய் சொன்னாலே அது நியாயப்பிரமாணத்தை மீறுவது தான். அப்படியானால் எந்த மனிதனால் வெற்றி பெற முடியும்? எல்லாருமே சீக்கிரமாக பாவத்தில் விழுந்து விட்டனர்.
யாத்திரகாமம் 30- 10. வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறைதோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.
அப்படியும் தேவன் மனிதர்களைக் கைவிடவில்லை. மீண்டுமாக வாய்ப்பு கொடுத்தார். வருடத்துக்கு ஒரு முறை (பாவ நிவாரண நாள் என்று படித்தோம் அல்லவா!) பாவ நிவாரண பலி செலுத்தலாம். அப்படியானால், அந்த வருடத்தில் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அதற்கு பின்னர் மனிதன் பாவம் செய்யக்கூடாது. ஆனால் இதிலும் மனிதன் தோற்றுப் போனான். ஒவ்வொரு வருடமும் அவன் பாவ நிவாரண பலி செலுத்தவேண்டி இருந்து. ஆனால் ஒவ்வொரு முறையும் அவனால் நியாயப் பிரமாணத்துக்கு கீழ்ப்படிய முடியாமற் போயிற்று.
ரோமர் 8:7 எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது.
ஒரு மனிதன் எவ்வளவு துன்மார்க்கனாக இருந்தாலும், ஒருவேளை அவன் பாவ நிவாரண பலியிட்டு, பின்னர் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்து நடந்தால், அவனுக்கு ஜீவன் உண்டு. அப்படியானால் அவன் ஆதாம் இழந்த ஜீவனை பெற்றுக் கொள்வான் என்று வேதம் கூறுகிறது.
எசேக்கியேல் 33:15 துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக்கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
மனிதனால், பிரமாணத்துக்கு கீழ்ப்படிய முடியவில்லை. எனவே இயேசு, மனிதனாய் உலகத்துக்கு வந்து, முழுவதும் மனித தன்மையோடு வாழ்ந்து, பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்து, மரணத்தை ஜெயித்தார். ஜீவனை பெற்றுக் கொண்டார். இயேசு தேவகுமாரன் என்பதால் உயிர்த்தெழுந்தார் என்பது உண்மை தான். ஆனால் மற்றொரு காரியம், அவர் பிரமாணத்துக்கு கீழ்ப்படிந்து, மரணத்தை ஜெயித்ததால் உயிர்த்தெழுந்தார்.
பிலிப்பியர் 2:8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.
நம்மில் அனேகர், நியாயப்பிரமாணம் வேண்டாம் என்று, அதை அழிப்பதற்காக இயேசு வந்தார் என்று நினைக்கிறோம். ஆனால், இயேசுவோ, ஒரு கட்டளையும் விடாமல், எல்லாவற்றிற்கும் கீழ்ப்படிந்து, நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார். நியாயப்பிரமாணம் என்றாலே கீழ்ப்படிதல் தான். அதை இயேசு நிறைவேற்றினார்.
மத்தேயு 5:17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.
ஆக, இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார். மேலும் அவர் மீட்கும் பொருளாக வந்தார்.
மீட்கும் பொருள் என்பது, ஒரு பொருளை கொடுத்து, மற்றொரு பொருளை வாங்குவது. அதாவது, என்னிடம் உள்ள ஒரு காரைக் கொடுத்து, அதற்கு ஏற்ற காசை வாங்கினேன் என்றால், அந்த காசு என்னிடம் வருவதற்கு மீட்கும் பொருள், அந்த கார் தான். பழைய ஏற்பாட்டில், தேவன் கண்ணுக்கு கண், ஜீவனுக்கு ஜீவன் என்று பிரமாணத்தில் கூறியிருப்பார். உண்மையில் நம் தேவன் அப்படி சொல்பவரா? இல்லையே! இவ்வசனங்கள் இயேசுவுக்கு நிழலாக எழுதப்பட்டது. நம்முடைய ஜீவனுக்கான மீட்கும் பொருள், அவருடைய ஜீவன்.
I யோவான் 5:11 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். I யோவான் 5:12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். இப்பொழுது தேவன் நமக்கு ஏன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார் என்பது தெரிகிறது அல்லவா? சுலபமாக சொல்ல வேண்டுமானால், மனிதன் கீழ்ப்படியவில்லை என்பதால், மரணம் வந்தது, ஜீவனை இழந்தான். இந்த கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்தால், ஜீவன் பெற்றுக் கொள்ளலாம் என்பதற்காக தேவன் கொடுத்தது தான் நியாயப்பிரமாணம். அப்படியும் மனிதன் தோற்றுப் போன போது, இயேசு அவரே உலகத்துக்கு வந்து, மீட்கும் பொருளாக தன் ஜீவனை தந்து, நம்மை மீட்டுக் கொண்டார்.
யோவான் 5:40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
Leave a Reply