Scripture Portion: Job 21-23

யோபு 21

1யோபு பிரதியுத்தரமாக:
2என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும்.
3நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள்.
4நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா?
5என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
6இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.
7துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?
8அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.
9அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.
10அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது.
11அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
12அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.
13அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
14அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;
15சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்.
16ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிராது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
17எத்தனை சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோம்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.
18அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.
19தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.
20அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.
21அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
22உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
23ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.
24அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.
25வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல், மனக்கிலேசத்தோடே சாகிறான்.
26இருவரும் சமமாய் மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும்.
27இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.
28பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறார்கள்?
29வழிநடந்துபோகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?
30துன்மார்க்கன் ஆபத்து நாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
31அவன் வழியை அவன் முகத்துக்கு முன்பாகத் தூண்டிக் காண்பிக்கிறவன் யார்? அவன் செய்கைக்குத் தக்க பலனை அவனுக்குச் சரிக்கட்டுகிறவன் யார்?
32அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.
33பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக எண்ணிறந்த ஜனங்கள் போனதுபோல, அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்துக்குச் செல்லுவார்கள்.
34நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான்.

யோபு 22

1அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரமாக:
2ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
3நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
4அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?
5உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
6முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
7விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்கு போஜனம் கொடாமலும் போனீர்.
8பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
9விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.
10ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.
11நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.
12தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
13நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
14அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
15அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?
16காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
17தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
18ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
19எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
20குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.
21நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.
22அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
23நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
24அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்துவைப்பீர்.
25அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார்.
26அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
27நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
28நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
29மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் இரட்சிக்கப்படுவார்கள்.
30குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.
யோபு 23
1யோபு பிரதியுத்தரமாக:
2இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.
3நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,
4என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
5அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன்.
6அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார்.
7அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக்கொள்வேன்.
8இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.
9இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலது புறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.
10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
11என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.
12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.
13அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
14எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
15ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
16தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.
17அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *