Scripture Portion: Job 24-28

யோபு  24

1சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?
2சிலர் எல்லைக்குறிப்புகளை ஒற்றி, மந்தைகளைப் பலாத்காரமாய்ச் சாய்த்துக்கொண்டுபோய்ப் பட்சிக்கிறார்கள்.
3தாய் தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள்.
4தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் ஏகமாய் ஒளித்துக்கொள்ளத்தக்கதாக, எளிமையானவர்களை வழியை விட்டு விலக்குகிறார்கள்.
5இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; வனாந்தரவெளிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும்.
6துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுப்பு அறுத்து, அவனுடைய திராட்சத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.
7குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், வஸ்திரமில்லாமல் இராத்தங்கி,
8மலைகளிலிருந்துவரும் மழைகளிலே நனைந்து, ஒதுக்கிடமில்லாததினால் கன்மலையிலே அண்டிக்கொள்ளுகிறார்கள்.
9அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப்பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகுவாங்குகிறார்கள்.
10அவனை வஸ்திரமில்லாமல் நடக்கவும், பட்டினியாய் அரிக்கட்டுகளைச் சுமக்கவும்,
11தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகத்தவனமாய் ஆலையாட்டவும்பண்ணுகிறார்கள்.
12ஊரில் மனுஷர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க்கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும், தேவன் அதைக் குற்றமாக அவர்கள்மேல் சுமத்துகிறதில்லை.
13அவர்கள் வெளிச்சத்துக்கு விரோதமாய் நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தரிக்காமலும் இருக்கிறார்கள்.
14கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று, இராக்காலத்திலே திருடனைப்போல் திரிகிறான்.
15விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற வேளைக்குக் காத்திருந்து: என்னை ஒரு கண்ணும் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான்.
16அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இருட்டிலே கன்னமிடுகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தை அறியார்கள்.
17விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்தோடு பழகியிருக்கிறான்.
18நீரோட்டத்தைப்போல் தீவிரமாய்ப் போவான்; தேசத்தில் அவன் பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், அவன் திராட்சத்தோட்டங்களின் வழியை இனிக்காண்பதில்லை.
19வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும்.
20அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; புழு திருப்திகரமாய் அவனைத் தின்னும்; அவன் அப்புறம் நினைக்கப்படுவதில்லை; அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும்.
21பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாதேபோகிறான்.
22தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை.
23தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது.
24அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, காணாமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள்.
25அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளை வியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.

யோபு 25

1அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக:
2அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார்.
3அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
4இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
5சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல.
6புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.

யோபு 26

1யோபு மறுமொழியாக:
2திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?
3நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்?
4யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?
5ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.
6அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.
7அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.
8அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.
9அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.
10அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.
11அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
12அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
13தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.
14இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.

யோபு 27

1யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
2என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும்,
3என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,
4என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
5நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்.
6என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன்; நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது.
7என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக.
8மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன?
9ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ?
10அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ?
11தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன்.
12இதோ, நீங்கள் எல்லாரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன?
13பொல்லாத மனுஷனுக்கு தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில்,
14அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை.
15அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை.
16அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும்,
17அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான்.
18அவனுடைய வீடு பொட்டுப்பூச்சிகட்டின வீட்டைப்போலும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப் போலுமாகும்.
19அவன் ஐசுவரியவானாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதே போனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும்.
20வெள்ளத்தைப்போல திகில்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இராக்காலத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும்.
21கொண்டல்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும்.
22அவர் இவைகளை அவன்மேல் வரப்பண்ணி அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான்.
23ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தை விட்டு வெருட்டிவிடுவார்கள்.

யோபு 28

1வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு.
2இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்.
3மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடையாந்தரமட்டும் ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான்.
4கடக்கக்கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான்.
5பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினது போலிருக்கும்.
6அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும்.
7ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை;
8துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை.
9அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான்.
10கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும்.
11ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான்.
12ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது?
13அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை.
14ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது.
15அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது.
16ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல.
17பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது.
18பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துகளைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது.
19எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல.
20இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே?
21அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப்பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது.
22நாசமும், மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது.
23தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும்.
24அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார்.
25அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
26மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார்.
27அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி,
28மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *