Scripture Portion: Numbers 8-10

எண்ணாகமம் 8

1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார்.
3 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான்.
4இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்பட்டிருந்தது; மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான்.
5பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
6நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக.
7அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் ஜலத்தைத் தெளிப்பாயாக; பின்பு அவர்கள் சர்வாங்க சவரம்பண்ணி, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, தங்களைச் சுத்திகரிக்கக்கடவர்கள்.
8அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லியமாவாகிய போஜனபலியையும் கொண்டுவரக்கடவர்கள்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி,
9லேவியரை ஆசரிப்புக்கூடாரத்துக்கு முன் வரச்செய்து, இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரையும் கூடிவரப்பண்ணுவாயாக.
10நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்கள்.
11லேவியர் கர்த்தருக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் புத்திரரின் காணிக்கையாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாய் நிறுத்தக்கடவன்.
12அதன்பின் லேவியர் தங்கள் கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு நீ லேவியருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, கர்த்தருக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தி,
13லேவியரை ஆரோனுக்கும் அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி,
14இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்.
15இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கக்கடவாய்; அதன்பின்பு லேவியர் ஆசரிப்புக்கூடாரத்தில் பணிவிடை செய்யப் பிரவேசிக்கக்கடவர்கள்.
16இஸ்ரவேல் புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற சகல முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன்.
17இஸ்ரவேல் புத்திரரில் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் என்னுடையது; நான் எகிப்துதேசத்திலே முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளிலே அவைகளை எனக்கென்று பரிசுத்தப்படுத்தி,
18பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு,
19லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக்கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார்.
20அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியருக்குச் செய்தார்கள்.
21லேவியர் சுத்திகரிக்கப்பட்டு, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான்.
22அதற்குப்பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக்கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள்.
23பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
24லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக்கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும்.
25ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணி சேனையை விட்டு,
26ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக்காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடேகூட ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்.

எண்ணாகமம் 9

1அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி:
2குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள்.
3இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார்.
4அப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான்.
5அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.
6அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து:
7நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள்.
8மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.
9கர்த்தர் மோசேயை நோக்கி:
10நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும்.
11அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து,
12விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள்.
13ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான்.
14ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார்.
15வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது.
16இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது.
17மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள்.
18கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள்.
19மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள்.
20மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.
21மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள்.
22மேகமானது இரண்டு நாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள்.
23கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.

எண்ணாகமம் 10

1 கர்த்தர் மோசேயை நோக்கி:
2சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப்பூரிகைகளைச் செய்துகொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.
3அவைகளை ஊதும்போது, சபையார் எல்லாரும் ஆசரிப்புக்கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
4ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.
5நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது.
6அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும்.
7சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதவேண்டியதேயன்றி பெருந்தொனியாய் முழக்கவேண்டாம்.
8ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் பூரிகைகளை ஊதக்கடவர்கள்; உங்கள் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.
9உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.
10உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்கதகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார்.
11இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.
12அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.
13இப்படியே கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.
14யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
15இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.
16செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.
17அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
18அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.
19சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான்.
20காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.
21கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள்.
22அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.
23மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.
24பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.
25அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
26ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.
27நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான்.
28இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள்.
29அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம் போகிறோம்; நீயும் எங்களோடே கூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.
30அதற்கு அவன்: நான் வரக்கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான்.
31அப்பொழுது மோசே: நீ எங்களை விட்டுப் போகவேண்டாம்; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்.
32நீ எங்களோடேகூட வந்தால், கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம் என்றான்.
33அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம் போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள் முன் சென்றது.
34அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம் போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.
35பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.
36அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *