Scripture Portion: Deuteronomy 21-23

உபாகமம் 21

1உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலை செய்யப்பட்டுக்கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால்,
2உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள் மட்டும் அளப்பார்களாக.
3கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து,
4உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள்.
5உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும்.
6கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர் எல்லாரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி:
7எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை;
8 கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு நிவிர்த்தியாகும்.
9இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய்.
10நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து,
11சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி,
12அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து,
13தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள்.
14அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம்.
15இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,
16தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.
17வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்க வேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.
18தன் தகப்பன் சொல்லையும், தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும்போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்.
19அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்:
20எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக.
21அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாரும் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.
22கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால்,
23இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது; அந்நாளிலேதானே அதை அடக்கம் பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

உபாகமம் 22

1உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல் இராமல், அதை உன் சகோதரனிடத்துக்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.
2உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவருமட்டும் உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.
3அப்படியே அவன் கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் வஸ்திரத்தைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன் போல் விட்டுப்போகலாகாது.
4உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.
5புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
6வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது.
7தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.
8நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும்.
9உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
10மாட்டையும், கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக.
11ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக.
12நீ தரித்துக்கொள்ளுகிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டுபண்ணுவாயாக.
13ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்த பின்பு அவளை வெறுத்து:
14நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள் மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;
15அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
16அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
17நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள்.
18அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
19அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
20அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால்,
21அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
22புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.
23கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே சயனித்தால்,
24அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய்.
25ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.
26பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது.
27வெளியிலே அவன் அவளைக் கண்டுபிடித்தான்; நியமிக்கப்பட்ட பெண் அப்பொழுது கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவார் இல்லாமற்போயிற்று.
28நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,
29அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது.
30ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியைச் சேரலாகாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தலாகாது.

உபாகமம் 23

1விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
2வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
3அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
4நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும், தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலி பேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும்.
5உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார்.
6நீ உன் ஆயுள் நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே.
7ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்; எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய்.
8மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாம்.
9நீ படையெடுத்து உன் சத்துருக்களுக்கு விரோதமாய்ப் புறப்படும்போது, தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக.
10இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல்,
11சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன்.
12நீ வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் பாளயத்திற்குப் புறம்பே இருக்க வேண்டும்.
13உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்து போனதை மூடிப்போடக்கடவாய்.
14உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னை விட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது.
15தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக.
16அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்குச் சம்மதியான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம்.
17இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.
18வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
19கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும், ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டிவாங்காயாக.
20அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.
21நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும்.
22நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை.
23உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக.
24நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திருப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது.
25பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *