Scripture Portion: Deuteronomy 30-31

உபாகமம் 30

1நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து,
2உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால்,
3உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார்.
4உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக்கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து,
5உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார்.
6உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி,
7இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்களின்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார்.
8நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய்.
9அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார்.
10உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார்.
11நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.
12நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல;
13நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக்கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல;
14நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.
15இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன்.
16நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன்.
17நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால்,
18நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன்.
19நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சி வைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு,
20கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

உபாகமம் 31

1பின்னும் மோசே போய் இஸ்ரவேலர் யாவரையும் நோக்கி:
2இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார்.
3உன் தேவனாகிய கர்த்தர் தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தாரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான்.
4 கர்த்தர் அழித்த எமோரியரின் ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும், அவர்கள் தேசத்திற்கும் செய்ததுபோலவே அவர்களுக்கும் செய்வார்.
5நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.
6நீங்கள் பலங்கொண்டு திடமானதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.
7பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டு போய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படி செய்வாய்.
8 கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.
9மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவிபுத்திரரான ஆசாரியருக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர் எல்லாருக்கும் ஒப்புவித்து,
10அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில்,
11உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய்.
12புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும்,
13அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான்.
14பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி, அவனை அழைத்துக் கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள்.
15 கர்த்தர் கூடாரத்திலே மேகஸ்தம்பத்தில் தரிசனமானார்; மேகஸ்தம்பம் கூடார வாசல்மேல் நின்றது.
16 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப் போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள்.
17அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள்.
18அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளிலே என் முகத்தை மறைக்கவே மறைப்பேன்.
19இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்து, இந்தப் பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இருக்கும்படி இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள்.
20நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணின பின்பு, அவர்கள் புசித்துத் திருப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம் மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள்.
21அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்துபோகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும்; நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்.
22அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்தான்.
23அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமானதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார்.
24மோசே இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் முழுவதையும் ஒரு புஸ்தகத்தில் எழுதி முடித்த பின்பு,
25மோசே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரை நோக்கி:
26நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.
27நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்!
28உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள்.
29என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியை விட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசி நாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி,
30இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *