Scripture Portion: Joshua 5-8

யோசுவா 5

1இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.
2அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார்.
3அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்பண்ணினான்.
4யோசுவா இப்படி விருத்தசேதனம்பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்த புருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.
5எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம் பண்ணப்பட்டிருந்தார்கள்; அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே பிறந்த சகல ஜனங்களும் விருத்தசேதனம் பண்ணப்படாதிருந்தார்கள்.
6கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பதுவருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார்.
7அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.
8ஜனங்களெல்லாரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் குணமாகுமட்டும் தங்கள்தங்கள் இடத்திலே பாளயத்தில் தரித்திருந்தார்கள்.
9கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.
10இஸ்ரவேல் புத்திரர் கில்காலில் பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்.
11பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள்.
12அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது; அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான்தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள்.
13பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.
14அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.
15அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

யோசுவா 6

1எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.
2கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும், யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.
3யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றி வாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள்.
4ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும்.
5அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காள சத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார்.
6அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி;
7ஜனங்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான்.
8யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்குப் பின் சென்றது.
9எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின் சென்றது.
10யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான்.
11அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்திலே வந்து, பாளயத்தில் இராத்தங்கினார்கள்.
12யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள்.
13தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது.
14இரண்டாம் நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள்.
15ஏழாம் நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்; அன்றையதினத்தில் மாத்திரம் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்.
16ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.
17ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவரும் மாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள்.
18சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.
19சகல வெள்ளியும், பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான்.
20எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்து விழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து,
21பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணினார்கள்.
22யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான்.
23அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய், ராகாபையும் அவள் தகப்பனையும், அவள் தாயையும், சகோதரர்களையும், அவளுக்குள்ள யாவையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள்.
24பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பாத்திரங்களையும் மாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள்.
25எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள்.
26அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான்.
27இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.

யோசுவா 7

1இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
2யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய், ஆயியை வேவுபார்த்து,
3யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்.
4அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
5ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளிதுவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.
6அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள்.
7யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திருப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும்.
8ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன்.
9கானானியரும் தேசத்துக் குடிகள் யாவரும் இதைக்கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரை பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான்.
10அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன?
11இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே.
12ஆதலால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன்.
13எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
14காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல்.
15அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார்.
16யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது.
17அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி குறிக்கப்பட்டான்.
18அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப்பண்ணினபோது, யூதா கோத்திரத்துச் சேராகின் குமாரனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்.
19அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான்.
20அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன்.
21கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என்கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான்.
22உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைத்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது.
23அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து, யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள்.
24அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூட சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும், சால்வையையும், பொன்பாளத்தையும், அவன் குமாரரையும், குமாரத்திகளையும், அவன் மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள்.
25அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி;
26அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.

யோசுவா 8

1அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும். அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
2நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்ட பொருள்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வை என்றார்.
3அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்தஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம்பேரைத் தெரிந்தெடுத்து, இராத்திரியிலே அவர்களை அனுப்பி,
4அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் பட்டணத்தின் பின்னாலே பதிவிருக்கவேண்டும்; பட்டணத்துக்கு வெகுதூரமாய்ப் போகாமல், எல்லாரும் ஆயத்தமாயிருங்கள்.
5நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
6அப்பொழுது அவர்கள்; முன்போல நமக்கு முன்னாக முறிந்து ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு இப்பாலே வரப்பண்ணுமட்டும், அவர்களுக்கு முன்னாக ஓடுவோம்.
7அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
8நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி,
9அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.
10அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின் மேல் போனான்.
11அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்துசேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
12அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான்.
13பட்டணத்திற்கு வடக்கே இருந்த சகல சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே பதிவிருக்கிறவர்களையும் திட்டம் பண்ணினபின்பு, யோசுவா அன்று இராத்திரி பள்ளத்தாக்கிலே போயிருந்தான்.
14ஆயியின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளையில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான்.
15யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
16அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தை விட்டு அப்புறப்பட்டார்கள்.
17ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலரைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
18அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான்.
19அவன் தன் கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்துக்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடே பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.
20ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ, பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த் திரும்பினார்கள்.
21பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.
22பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலும் இருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவரும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,
23ஆயியின் ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
24இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.
25அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனுஷர் எல்லாரும் பன்னீராயிரம்பேர் விழுந்தார்கள்.
26ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
27 கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும் மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள்.
28யோசுவா ஆயியைச் சுட்டெரித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி,
29ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.
30அப்பொழுது யோசுவா: கர்த்தரின் தாசனாகிய மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
31அதின்மேல் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் இட்டார்கள்.
32இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.
33இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.
34அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.
35மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும், பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையும் விடாமல் வாசித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *