Scripture Portion: Joshua 16-18

யோசுவா 16

1யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான தண்ணீருக்குப் போய், எரிகோ துவக்கிப் பெத்தேலின் மலைகள் மட்டுமுள்ள வனாந்தர வழியாகவும் சென்று,
2பெத்தேலிலிருந்து லூசுக்குப் போய், அர்கீயினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து,
3மேற்கே யப்லெத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள் மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும்.
4இதை யோசேப்பின் புத்திரராகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.
5எப்பிராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.
6மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,
7யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
8தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.
9பின்னும் எப்பிராயீம் புத்திரருக்குப் பிரத்தியேகமாய்க் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமெல்லாம் மனாசே புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.
10அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.

யோசுவா 17

1மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன்; மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும், பாசானும் அவனுக்குக் கிடைத்தது.
2அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயினுடைய மற்ற குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத் தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள்.
3மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்கு குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை; அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
4அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
5யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம்.
6மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்ற புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது.
7மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.
8தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வசமாயிற்று.
9அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும்.
10தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
11இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.
12மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.
13இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும், கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள்.
14யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்ததினால், நாங்கள் ஜனம் பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள்.
15அதற்கு யோசுவா: நீங்கள் ஜனம் பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டு தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான்.
16அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இரும்புரதங்கள் உண்டு என்றார்கள்.
17யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைதேசமும் உங்களுடையதாகும்.
18அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இரும்பு ரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

யோசுவா 18

1இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று.
2இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது.
3ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள்.
4கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்திற்குத்தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன்.
5அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும்.
6நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன்.
7லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான்.
8அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக் குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான்.
9அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழுபங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்.
10அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்கு தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான்.
11பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பு புத்திரருக்கும் நடுவே இருந்தது.
12அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும்.
13அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத்அதாருக்குத் தாழ்வான பெத்தொரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும்.
14அங்கேயிருந்து எல்லை மேற்குமூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை.
15தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,
16அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரொகேலுக்கும் இறங்கிவந்து,
17வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து,
18அராபாவுக்கு எதிரான வடபக்கமாய்ப் போய், அராபாவுக்கு இறங்கும்.
19அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடபக்கமாய்ப் போய், யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கான உப்புக்கடலின் வடமுனையிலே முடிந்துபோகும்; இது தென் எல்லை.
20கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம்.
21பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு,
22பெத்அரபா, செமராயிம், பெத்தேல்,
23ஆவீம், பாரா. ஓப்ரா,
24கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே.
25கிபியோன், ராமா, பேரோத்,
26மிஸ்பே, கெப்பிரா, மோத்சா,
27ரெக்கேம், இர்பெயெல், தாராலா,
28சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரேயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேவனுக்கு தூரமாகி விட்டேனா?

Am I away from God?

வாழும் சாட்சிகள்

Testimonies of God’s People

விடுதலை

ஆபாச பட அடிமைத்தனம்

இஸ்ரேல் – ஆய்வு கட்டுரை

(வேதாகம கால முதல் தற்போது வரை)

வேதாகம பண்டிகைகள்

(யூதர்களின் பண்டிகைகள்)

விசுவாச அறிக்கை

(தினமும் ஜெபிக்க சில அறிக்கைகள்)

நன்றியுடன் 21 நாட்கள்

December 2023

ஒரு வருட வேதாகம வாசிப்பு திட்டம்

2025 Chronological Bible Reading Plan