Scripture Portion: 1 Samuel 4-8

1 சாமுவேல் 4

1சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர்: பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.
2பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம்பேர் வெட்டுண்டுபோனார்கள்.
3ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி இரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள்.
4அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள்.
5 கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள்.
6அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள்.
7தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே.
8ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே.
9பெலிஸ்தரே, திடங்கொண்டு புருஷரைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து, யுத்தம்பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.
10அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள்.
11தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள்.
12பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின்மேல் புழுதியை வாரிப்போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான்.
13அவன் வந்தபோது: ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது, ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது, ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று.
14புலம்புகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனுஷன் தீவிரித்து வந்து, ஏலிக்கு அறிவித்தான்.
15ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது.
16அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்றுதான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான்.
17செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டுப்போயிற்று என்றான்.
18அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம் விசாரித்தான்.
19பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள்.
20அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை.
21தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள்.
22தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.

1 சாமுவேல் 5

1பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள்.
2பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள்.
3அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள்.
4அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து கிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது.
5ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை.
6அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார்.
7இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி;
8பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத் பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனார்கள்.
9அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர் துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார்.
10அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.
11அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.
12செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.

1 சாமுவேல் 6

1கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.
2பின்பு பெலிஸ்தர் பூஜாசாரிகளையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைப்பித்து: கர்த்தருடைய பெட்டியைப் பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.
3அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறதும் அல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள்.
4அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும்.
5ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள் மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களைவிட்டு விலகும்.
6எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?
7இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம்பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,
8பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரண காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.
9அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.
10அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டு வந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,
11கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள்.
12அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.
13பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.
14அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.
15லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.
16பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.
17பெலிஸ்தர் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று,.
18பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள் மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.
19ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
20இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,
21கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.

1 சாமுவேல் 7

1அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
2பெட்டி கீரியாத்யாரீமிலே அநேகநாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாரும் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள்.
3அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.
4அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்.
5பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்.
6அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
7இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு,
8சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.
9அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச்செய்தார்.
10சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள்.
11அப்பொழுது இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தரைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறிய அடித்தார்கள்.
12அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.
13இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது.
14பெலிஸ்தர் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவக்கிக் காத்மட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையில் இராதபடிக்கு, விடுவித்துக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
15சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
16அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தபின்பு,
17அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

1 சாமுவேல் 8

1சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
2அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பேர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.
3ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
4அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து:
5இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகலஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
6எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.
7அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.
8நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.
9இப்பொழுதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.
10அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
11உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரை வீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.
12ஆயிரம் பேருக்கும் ஐம்பது பேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
13உங்கள் குமாரத்திகளைப் பரிமளத்தைலம் செய்கிறவர்களாகவும், சமையல்பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
14உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புக்களிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
15உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான்.
16உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான்.
17உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
18நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்.
19ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும்.
20சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்.
21சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான்.
22 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *