நித்திய ஜீவன் என்றால்?

அனைவருக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். “தேவனுக்கு தூரமாகி விட்டேனா?” என்று சில பதிவுகள் பார்த்து வந்தோம். அந்த பதிவுகளின் ஒரு சிறிய recap.

  • நாம் தடவியாகிலும் கண்டு பிடிக்கும் தூரத்தில் தான் அவர் இருக்கிறார். இயேசு முதலாவது எப்படி மனிதனாக வந்தாரோ, அதேபோல இப்போது ஒரு supernatural written formatல் பரிசுத்த வேதமாக நம் கைகளில் இருக்கிறார். இந்த உணர்வை நம் சிந்தையில் பதிக்க வேண்டும். எப்போது எல்லாம் வேதத்தை கையில் எடுக்கிறோமோ, அப்போதெல்லாம் இயேசுவை தொட்டு தூக்குகிறோம்.
  • அடுத்ததாக, ஜெபிக்க ஒரு இடம் ஒதுக்க வேண்டும். தொடர்ந்து இரண்டு நாட்கள், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் சென்று நாம் ஜெபித்தால், மூன்றாவது நாளிலிருந்து, நமக்காக அந்த இடத்தில், இயேசு காத்திருப்பார் என்று பார்த்தோம்.
  • எனக்கு ஜெபிக்க இஷ்டமே இல்லை. ஜெபிக்க தோன்றவே இல்லை என்றாலும், அந்த இடத்தில் அமர்ந்து சில பாடல்கள் பாடலாம். அவரைத் துதிக்கும் எந்த இடத்துக்கும் அவர் வருவார் என்று பார்த்தோம்.
  • இயேசு நம் நண்பர் தான். ஆனால் அவருக்குரிய கனத்தையும் நாம் கொடுக்க வேண்டும். நம் நண்பரான இயேசு, ஒரு வார்த்தை சொன்னால் போதும், கடுமையான புயல் அமைதியாகும். மரித்தவர் உயிரோடு எழும்புவர். அவரது ஒரு மூச்சுக்கு கடல் இரண்டாகப் பிரியும். அப்படிப்பட்ட இயேசு, பிதாவினுடைய ஒரே குமாரன், அவர் நம் நண்பர். இயேசுவுக்கு ஏற்ற கனத்தைக் கொடுக்க மறக்க கூடாது. அவர் நம் நண்பர் என்பதையும் மறக்க கூடாது.

அடுத்ததாக, உங்களிடம் ஒரு கேள்வி. “இயேசு கிறிஸ்து ஏன் இந்த உலகத்துக்கு வந்தார்?” நம் பதில் என்னவாக இருக்கும்? ‘நம்மை மீட்க உலகத்துக்கு வந்தார்’ என்று சொல்வோம்.

சரி, “இயேசு எப்படி நம்மை மீட்டார்?”. யாரிடம் கேட்டாலும் “இயேசு நம்மை மீட்டார்” என்று சொல்கிறார்கள். “எப்படி” என்று கேட்டால், ‘அவர் மரித்து, உயிர்த்தெழுந்து நம்மை மீட்டார்’ என்று சொல்கிறார்கள்.

இன்னும் விளக்கமாக சொல்பவர்கள், ‘நம் பாவங்களை அவர் சிலுவையில் சுமந்து தீர்த்து விட்டார். நம் பாவங்களுக்கான தண்டனையை அவர் 2000 வருடங்களுக்கு முன்பே சிலுவையில் சுமந்து விட்டார். இனி நமக்கு தண்டனை கிடையாது, நாம் தண்டனையிலிருந்து தப்பி பிழைத்து விட்டோம். இதற்காக தான் இயேசு சிலுவையில் மரித்தார். அவர் மரித்து உயிர்த்தெழுந்து நம்மை மீட்டு விட்டார்’ என்று சொல்கிறார்கள்.

ஆம், நம் பாவம், தரித்திரம், சாபம் என்ற எல்லா negative யும் இயேசு சிலுவையில் சுமந்து விட்டதால், இன்று நாம் மீட்கப்பட்டு (இரட்சிக்கப்பட்டு) விடுதலையாகி விட்டோம்.

ஆக, ‘இயேசு ஏன் உலகத்துக்கு வந்தார்?’ என்று கேட்டால், “நம் பாவங்களுக்காக மரிப்பதற்காக வந்தார், சாபத்திலிருந்து மீட்க வந்தார், வியாதியிலிருந்து விடுதலை தர வந்தார்” என்கிற ஒரு புரிதல் நமக்கு இருக்கிறது. இதைப்பற்றி, வேதம் என்ன சொல்கிறது?

யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

Tamil Easy Reading Version “ஆம்! தேவன் இவ்வுலகினைப் பெரிதும் நேசித்தார். எனவே தனது ஒரே குமாரனை இதற்குத் தந்தார். தேவன் தன் மகனைத் தந்ததால் அவரில் நம்பிக்கை வைக்கிற எவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறுவர்.

இங்கு வேதத்தில் “நாம் நித்திய ஜீவனைப் பெறும்படிக்கு அவரைத் தந்தருளினார்” என்று உள்ளது. இந்த “நித்திய ஜீவன்” என்றால் என்ன? சிறு வயதிலிருந்தே நமக்கு Sunday schoolல் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்… “நாம் மரித்த பின்னர், நித்திய நித்தியமாக வாழப்போகிறோம், அங்கு மரணமே கிடையாது. பாவம் செய்தால், நித்தியமாக நரகத்தில் வாழ்வோம். நல்லவர்களாக வாழ்ந்தால், பரலோகத்தில் நித்திய நித்தியமாக இயேசுவுடன் வாழ்வோம்” என்று கற்றுக்கொடுத்திருப்பார்கள்.

நித்திய நித்தியமாக பரலோகம் அல்லது நரகத்தில் வாழப்போவது தான் நித்திய ஜீவனா?

நித்திய ஜீவன் பற்றி வேதம் என்ன கூறுகிறது?

யோவான் 17:3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இயேசு தாம் மரிப்பதற்கு முந்தின நாளில், தன் சீஷர்களிடத்தில் இந்தக் காரியத்தைப் பேசுகிறார். “தேவனை அறிவது தான் நித்திய ஜீவன்” என்று கூறுகிறார்.

இது மிகவும் சுலபம் போல் இருக்கிறதல்லவா? ஒருவேளை “தேவன் எப்படிப்பட்டவர்?” என்று வேதத்தில் வாசிப்பது, அல்லது பல புத்தகங்களின் மூலமாகவோ, செய்திகளின் மூலமாகவோ அறிந்து கொள்வது தான் தேவனை அறிவதா? இல்லையே.

இந்த ‘அறிதல்’ என்பது எதைக் குறிக்கிறது?

ஆதியாகமம் 4:1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்றுகர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

இங்கு “அறிந்தான்” என்பது ‘ஏவாளைப் பற்றி தெரிந்து கொண்டான்’ என்பதையா குறிக்கிறது? இல்லை, ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இருந்த தனிப்பட்ட நெருக்கமான (intimacy) உறவைக் குறிக்கிறது.

அப்படியானால், “தேவனை அறிய வேண்டும்” என்பது, தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவைப் பற்றியது அல்லவா!

வெறுமனே, புத்தகத்தில் வாசிப்பதன் மூலம் தேவனை அறிய முடியாது. பல பெரிய ஊழியர்களின் ஆழமான போதனைகளை கேட்டு, தேவன் இப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்வதன் மூலம், அவரை அறிய (relationship) முடியாது. அறிய வேண்டுமென்றால், நெருக்கமான உறவு அவசியம்.

ஒருவரைப் பார்த்தவுடன், அவருடன் மிகவும் நெருக்கமாக பழக முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக, அவருடன் பழகினால் மட்டுமே, அவரைப் பற்றி அறிய முடியும். தேவனிடம் எப்படி பழக முடியும்?

இயேசு தான் வார்த்தை. ஒவ்வொரு முறை நாம் வேதத்தை கையில் எடுக்கும்போதும், இயேசுவை கையில் எடுக்கிறோம். வேதம் வாசிக்கும்போது, இயேசுவிடம் பேசுகிறோம். வார்த்தையின் மூலம் அவர் நம்முடன் பேசுகிறார்.

உலகப்பிரகாரமான கவலையிலும், வேலைப்பளுவிலும், நம்மால் கர்த்தருக்கு சரியான நேரம் கொடுக்க முடியாது தான். ஆனாலும் சிரமம் எடுத்து, நேரத்தை ஒதுக்கி வசனத்தை வாசியுங்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும், வேதத்தை வாசியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு அழகான உறவு மலரும்.

இந்த லெந்து நாட்களிலும், கர்த்தருக்கு சித்தமானால், 40 நாட்களில், புதிய ஏற்பாடு முழுவதையும் வாசியுங்கள். ஜெபியுங்கள். உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு பிறகு, நிச்சயமாக உங்களுக்கும் இயேசுவுக்கும் நல்ல உறவு ஏற்பட்டிருக்கும்.  அந்த அருமையான உறவின் மூலம், தேவனை அறிவோம். நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்வோம். நித்திய ஜீவன் பற்றி தொடர்ச்சியாக நாம் பார்க்கலாம்.

2 responses to “தேவனுக்கு தூரமாகி விட்டேனா? -5”

  1. Santra Santra Avatar
    Santra Santra

    Very good

    1. RhemaTamil Avatar

      நன்றி சகோதரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேவனுக்கு தூரமாகி விட்டேனா?

Am I away from God?

வாழும் சாட்சிகள்

Testimonies of God’s People

விடுதலை

ஆபாச பட அடிமைத்தனம்

இஸ்ரேல் – ஆய்வு கட்டுரை

(வேதாகம கால முதல் தற்போது வரை)

வேதாகம பண்டிகைகள்

(யூதர்களின் பண்டிகைகள்)

விசுவாச அறிக்கை

(தினமும் ஜெபிக்க சில அறிக்கைகள்)

நன்றியுடன் 21 நாட்கள்

December 2023

ஒரு வருட வேதாகம வாசிப்பு திட்டம்

2025 Chronological Bible Reading Plan