Scripture Portion: Psalm 56,120, 140-142

சங்கீதம் 56

(பெலிஸ்தர் தாவீதைக் காத்தூரில் பிடித்தபோது யோனாத் ஏலம் ரிக்கோகீம் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி தாவீது பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவித்த மிக்தாம் என்னும் சங்கீதம்)
1தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான், நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.
2என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.
3நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.
4தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்?
5நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது.
6அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.
7அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும்.
8என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?
9நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.
10தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.
11தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?
12தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.
13நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?

சங்கீதம் 120

(ஆரோகண சங்கீதம்)
1என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும்.
3கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
4பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.
5ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்!
6சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்!
7நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும் போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.

சங்கீதம் 140

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)
1கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்.
2அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள்.
3சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா)
4கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள்.
5அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)
6நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும்.
7ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர்.
8கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாகாதபடிச் செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா)
9என்னை வளைந்து கொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக.
10நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
11பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
12சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன்.
13நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்.

சங்கீதம் 141

(தாவீதின் சங்கீதம்)
1கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத் தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும்.
2என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.
3கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.
4அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.
5நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.
6அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.
7பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாள வாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
8ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும்.
9அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
10துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.

சங்கீதம் 142

(தாவீது கெபியிலிருக்கும்போது பண்ணின விண்ணப்பமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம்)
1 கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன்.
2அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.
3என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள்.
4வலதுபுறமாய்க் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.
5 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.
6என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.
7உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *