Scripture Portion: 1 Samuel 28-31 Psalm 18

1 சாமுவேல் 28

1அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்.
2தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான்.
3சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டான்.
4பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.
5சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.
6சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.
7அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.
8அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம் பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான்.
9அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நீர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
10அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான்.
11அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான்.
12அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள்.
13ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
14அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.
15சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறு உத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்ய வேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான்.
16அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்?
17கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்துமுடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.
18நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
19கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.
20அந்தக்ஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுவதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.
21அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
22இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.
23அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின் மேல் உட்கார்ந்தான்.
24அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,
25சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப் போனார்கள்.

1 சாமுவேல் 29

1பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள்.
2அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள்.
3அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான்.
4அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடே கூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா?
5சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள்.
6அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல.
7ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான்.
8தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான்.
9ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள்.
10இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான்.
11அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

1 சாமுவேல் 30

1தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,
2அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள்.
3தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
4அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.
5தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
6தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
7தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
8தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.
9அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.
10தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்து போனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள்.
11ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,
12அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்று நாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.
13தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்.
14நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான்.
15தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.
16இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
17அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.
18அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
19அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
20எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.
21விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.
22அப்பொழுது தாவீதோடே நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரும்: அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள்.
23அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
24இந்தக் காரியத்தில் உங்கள் சொற் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
25அப்படியே அந்நாள் முதற்கொண்டு நடந்து வருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள் வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான்.
26தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதபாகம் என்று சொல்லச் சொன்னான்.
27யார் யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
28ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,
29ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,
30ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,
31எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.

1 சாமுவேல் 31

1பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள்.
2பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள்.
3சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு,
4தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான்.
5சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்.
6அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்.
7இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப் போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள்.
8வெட்டுண்டவர்களை உரிந்துகொள்ள, பெலிஸ்தர் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவன் மூன்று குமாரரும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டு,
9அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி,
10அவன் ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவன் உடலைப் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள்.
11பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத் தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது,
12அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுவதும் நடந்துபோய், பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்பண்ணி,
13அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.

சங்கீதம் 18

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். கர்த்தருடைய தாசனாகிய தாவீது இந்தப் பாட்டின் வார்த்தைகளைக் கர்த்தர் தன்னைத் தன்னுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் சவுலின் கைக்கும் நீங்கலாக்கி விடுவித்த நாளிலே பாடினது)
1என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
3துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன்.
4மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக் கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
5பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
6எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
7அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
8அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.
9வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது.
10கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார்.
11இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச்சூழக் கூடாரமாக்கினார்.
12அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும், நெருப்புத்தழலும் விழுந்தது.
13 கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும், நெருப்புத்தழலும் விழுந்தது.
14தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
15அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும், தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
16உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
17என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும், என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.
18என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
19அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார்.
20 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
21 கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணினதில்லை.
22அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை.
23அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக் கொண்டேன்.
24ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
25தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்;
26புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
27தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.
28தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார்.
29உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
30தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
31 கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்?
32என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே.
33அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
34வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
35உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
36என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
37என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன்.
38அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
39யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர்.
40நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
41அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
42நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன்.
43ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
44அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள்.
45அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
46 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக.
47அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
48அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர்.
49இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
50தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *