Scripture Portion: Job 29-31

யோபு 29

1பின்னும் யோபு தன் பிரசங்க வாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது:
2சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
3அப்பொழுது அவர் தீபம் என்தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
4தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது.
5அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள்.
6என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும்.
7நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது,
8வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள்.
9பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள்.
10பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும்.
11என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது.
12முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன்.
13கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன்.
14நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது.
15நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.
16நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
17நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
18என் கூட்டிலே நான் ஜீவித்துப் போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
19என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுவதும் தங்கியிருந்தது.
20என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது.
21எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள்.
22என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது.
23மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின் மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள்.
24நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை.
25அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.

யோபு 30

1இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன்.
2விருத்தாப்பியத்தினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது.
3குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய்,
4செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுப்பூண்டுகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது.
5அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; கள்ளனைத் துரத்துகிறதுபோல்: கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
6அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள்.
7செடிகளுக்குள்ளிருந்து கதறி, காஞ்சொறிகளின்கீழ் ஒதுங்கினார்கள்.
8அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள்.
9ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன்.
10என்னை அருவருத்து, எனக்குத்தூரமாகி, என் முகத்துக்கு முன்பாகத் துப்பக் கூசாதிருக்கிறார்கள்.
11நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள்.
12வலதுபாரிசத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறிவிழப்பண்ணி, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள்.
13என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை.
14பெரிதான திறப்புண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டு வருகிறார்கள்.
15பயங்கரங்கள் என்மேல் திரும்பி வருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று.
16ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப்பிடித்துக்கொண்டது.
17இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
18நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
19சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
20உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
21என்மேல் கொடூரமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
22நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.
23சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாபரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
24ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,
25துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.
26நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
27என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
28வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
29நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.
30என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று.
31என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.

யோபு 31

1என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
2அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
3மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
4அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?
5நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
6சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
7என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,
8அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப்போகக்கடவது.
9என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால்,
10அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்று மனிதர் அவள்மேல் சாய்வார்களாக.
11அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே.
12அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும்.
13என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால்,
14தேவன் எழும்பும்போது, நான் என்ன செய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்.
15தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ?
16எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி,
17தாய்தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ?
18என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்து நடத்தினேன்.
19ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்துபோகிறதையும், ஏழைக்கு மூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது,
20அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும்,
21ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால்,
22என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக.
23தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது.
24நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
25என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
26சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும், நான் அதை நோக்கி:
27என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால்,
28இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே.
29என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ?
30அவன் ஜீவனுக்குச் சாபத்தைக் கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை.
31அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ?
32பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன்.
33நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ?
34திரளான என் கூட்டத்துக்கு நான் பயந்ததினாலாவது, இனத்தார் ஜனத்தார் பண்ணும் இகழ்ச்சி என்னைத் திடுக்கிடப்பண்ணினதினாலாவது, நான் பேசாதிருந்து, வாசற்படியை விட்டுப் புறப்படாதிருந்தேனோ?
35ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.
36அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாகத் தரித்துக்கொள்வேனே.
37அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன்.
38எனக்கு விரோதமாக என் காணி பூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும்,
39கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால்,
40அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *