Scripture Portion: 2 Samuel 1-4

2 சாமுவேல் 1

1சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டு நாள் அங்கே இருந்த பிற்பாடு,
2மூன்றாம் நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, தாவீதினிடத்தில் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான்.
3தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான்.
4தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம் பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான்.
5சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவிக்கிற வாலிபனிடத்தில் கேட்டதற்கு,
6அந்த வாலிபன்: நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார்; இரதங்களும் குதிரை வீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள்.
7அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன்.
8அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன்.
9அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார்.
10அப்பொழுது நான், அவர் விழுந்த பின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக் கொண்டுவந்தேன் என்றான்.
11அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு,
12சவுலும், அவன் குமாரனாகிய யோனத்தானும், கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள்.
13தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான்.
14தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைக் கொன்றுபோடும்படி நீ உன் கையை நீட்டப் பயப்படாமற்போனது என்ன என்று சொல்லி,
15வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து, அவனை வெட்டு என்றான்; அவன் அவனை வெட்டினான்; அவன் செத்தான்.
16தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம் பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன்வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான்.
17தாவீது சவுலின்பேரிலும், அவன் குமாரனாகிய யோனத்தானின் பேரிலும், புலம்பல் பாடினான்.
18(வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது) அவன் பாடின புலம்பலாவது:
19இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்து போனார்கள்.
20பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும், அதைக் காத் பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள்.
21கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன் தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவன்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே.
22கொலையுண்டவர்களின் இரத்தத்தைக் குடியாமலும், பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை.
23உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைப் பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப் பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள்.
24இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
25போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே. யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டுபோனாயே.
26என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது.
27பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்து போயிற்றே, என்று பாடினான்.

2 சாமுவேல் 2

1பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார்.
2அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும் கூட அவ்விடத்திற்குப் போனான்.
3அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும், அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள்.
4அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது,
5தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம்பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
6கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன்.
7இப்பொழுதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான்.
8சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய்,
9அவனைக் கீலேயாத்தின் மேலும், அஷூரியர் மேலும், யெஸ்ரயேலின் மேலும், எப்பிராயீமின் மேலும், பென்யமீனின் மேலும், இஸ்ரவேலனைத்தின் மேலும் ராஜாவாக்கினான்.
10சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார் மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள்.
11தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம்.
12நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு, மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப்போனான்.
13அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய், கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு, குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும், குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள்.
14அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து, நமக்கு முன்பாகச் சிலம்பம்பண்ணட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான்.
15அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும், எழுந்து ஒரு பக்கமாய்ப் போய்,
16ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத்அசூரிம் என்னப்பட்டது.
17அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள்.
18அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான்.
19அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும், அவனை விட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான்.
20அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான்.
21அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான்.
22பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான்.
23ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது; அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள்.
24யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தர வழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள்.
25அப்பொழுது அப்னேரைப் பின்சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள்.
26அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்க வேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்தமட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான்.
27அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல், அப்போதே திரும்பி விடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
28யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலைத் தொடராமலும், யுத்தம்பண்ணாமலும் நின்றுவிட்டார்கள்.
29அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவநடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள்.
30யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் சேவகரில் பத்தொன்பதுபேரும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள்.
31தாவீதின் சேவகரோ பென்யமீனரிலும், அப்னேரின் மனுஷரிலும், முந்நூற்றறுபதுபேரை மடங்கடித்தார்கள்.
32அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பன் கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; யோவாபும் அவன் மனுஷரும் இராமுழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிலே சேர்ந்தார்கள்.

2 சாமுவேல் 3

1சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவர பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவர பலவீனப்பட்டுப்போனார்கள்.
2எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன்.
3நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் குமாரன்; மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன்.
4நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தால் பெற்ற செப்பத்தியா என்பவன்.
5ஆறாம் குமாரன் தாவீதின் மனைவியாகிய எக்லாளிடத்தில் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள்.
6சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் யுத்தம் நடந்து வருகிறபோது, அப்னேர் சவுலின் குடும்பத்திலே பலத்தவனானான்.
7சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான்.
8அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல், இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும், சிநேகிதருக்கும், தயவு செய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம் பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா?
9நான் ராஜ்யபாரத்தைச் சவுலின் குடும்பத்தை விட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படிக்கு,
10கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே, நான் அவனுக்குச் செய்யாமற்போனால், தேவன் அப்னேருக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.
11அப்பொழுது அவன் அப்னேருக்குப் பயப்பட்டதினால், அப்புறம் ஒரு மறுமொழியும் அவனுக்குச் சொல்லாதிருந்தான்.
12அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கைபண்ணும்; இதோ, இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச் சொன்னான்.
13அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன்; ஆனாலும் ஒரே காரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவெனில், நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்து வரவேண்டும்; அதற்குமுன் நீ என் முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,
14அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.
15அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயிசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்து வர ஆட்களை அனுப்பினான்.
16அவள் புருஷன் பகூரீம் மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டு வந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப் போய்விட்டான்.
17அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடே பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு நீங்கள் அநேகநாளாய்த் தேடினீர்களே.
18இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என் தாசனாகிய தாவீதின் கையினால், என் ஜனமாகிய இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கும், அவர்களுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி இரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
19இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும், சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான்.
20அப்னேரும், அவனோடேகூட இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான்.
21பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டுவருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடேபோனான்.
22தாவீதின் சேவகரும் யோவாபும் அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு, தண்டிலிருந்து கொண்டு வந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதினிடத்தில் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போய்விட்டான்.
23யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் வந்தபோது, நேரின் குமாரனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய்ப்போக அனுப்பிவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள்.
24அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன?
25நேரின் குமாரனாகிய அப்னேரை அறிவீரே; அவன் உம்மை மோசம் போக்கவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதையெல்லாம் ஆராயவும் வந்தான் என்று சொன்னான்.
26யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும் போய் அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்.
27அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாகப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக் கொன்றுபோட்டான்.
28தாவீது அதைக் கேட்டபோது: நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என் ராஜ்யத்தின் மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை.
29அது யோவாபுடைய தலையின் மேலும், அவன் தகப்பன் குடும்பத்தின் மேலும் சுமந்திருப்பதாக; யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பம் குறைச்சலுள்ளவனும், ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை என்றான்.
30அப்னேர் கிபியோனில் நடந்த யுத்தத்திலே தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்றதினிமித்தம் யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் அவனைச் சங்காரம்பண்ணினார்கள்.
31தாவீது யோவாபையும், அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீது ராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான்.
32அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்பண்ணுகையில், ராஜா அப்னேரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு அழுதான்; சகல ஜனங்களும் அழுதார்கள்.
33ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ?
34உன் கைகள் கட்டப்படவும் இல்லை; உன் கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள்.
35பொழுது இன்னும் இருக்கையில், ஜனங்கள் எல்லாரும் வந்து: அப்பம் புசியும் என்று தாவீதுக்குச் சொன்னபோது, தாவீது: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும் வேறெதையாகிலும் ருசி பார்த்தால், தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
36ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது.
37நேரின் குமாரனாகிய அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவினால் உண்டானதல்லவென்று அந்நாளிலே சகல ஜனங்களும், இஸ்ரவேலர் அனைவரும் அறிந்துகொண்டார்கள்.
38ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா?
39நான் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டவனாயிருந்தபோதிலும், நான் இன்னும் பலவீனன்; செருயாவின் குமாரராகிய இந்த மனுஷர் என் பலத்துக்கு மிஞ்சினவர்களாயிருக்கிறார்கள், அந்தப் பொல்லாப்பைச் செய்தவனுக்குக் கர்த்தர் அவன் பொல்லாப்புக்குத்தக்கதாய்ச் சரிக்கட்டுவாராக என்றான்.

2 சாமுவேல் 4

1அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுப்போயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள்.
2சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவரான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது.
3பேரோத்தியர் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்நாள் வரைக்கும் அங்கே சஞ்சரிக்கிறார்கள்.
4சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்: அவனுக்கு மேவிபோசேத் என்று பேர்.
5பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெய்யில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து,
6கோதுமை வாங்க வருகிறவர்கள்போல, நடுவீடுமட்டும் வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போட்டார்கள்; பின்பு ரேகாபும் அவன் சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள்.
7அவன் தன் பள்ளி அறையிலே தன் கட்டிலின்மேல் படுத்திருக்கும்போது இவர்கள் உள்ளே போய், அவனைக் குத்திக்கொன்று போட்டு, அவன் தலையை வெட்டிப்போட்டார்கள்; பின்பு அவன் தலையை எடுத்துக்கொண்டு, இராமுழுதும் அந்தரவெளி வழியாய் நடந்து,
8எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் இஸ்போசேத்தின் தலையைக்கொண்டுவந்து, ராஜாவை நோக்கி: இதோ, உம்முடைய பிராணனை வாங்கத்தேடின உம்முடைய சத்துருவாயிருந்த சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் தலை; இன்றையதினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழிவாங்கினார் என்றார்கள்.
9ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் குமாரராகிய ரேகாபுக்கும், அவன் சகோதரன் பானாவுக்கும் பிரதியுத்தரமாக: என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள்.
10இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி, சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே.
11தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலை செய்த பொல்லாத மனுஷருக்கு எவ்வளவு அதிகமாய் ஆக்கினை செய்யவேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப்பழியை உங்கள் கைகளில் வாங்கி, உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாதிருப்பேனோ என்று சொல்லி,
12அவர்களைக் கொன்று போடவும், அவர்கள் கைகளையும் கால்களையும் தறித்து, எப்ரோனிலிருக்கிற குளத்தண்டையிலே தூக்கிப்போடவும் தன் சேவகருக்குக் கட்டளையிட்டான். இஸ்போசேத்தின் தலையை எடுத்து, எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *