Scripture Portion: Psalm 43-45, 49, 84-85, 87
சங்கீதம் 43
1தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.2என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்?3உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டு போவதாக.4அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன்.5என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.சங்கீதம் 44
(கோராகின் புத்திரரில் இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்)1தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம்.2தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.3அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலது கரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது.4தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.5உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.6என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை.7நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.8தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா)9நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர்.10சத்துருவுக்கு நாங்கள் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள்.11நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர்.12நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.13எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர்.14நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர்.15நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும்,16என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது.17இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை.18நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும்,19எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை.20நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,21தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே.22உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம்.23ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரைபண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்.24ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்?25எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது.26எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.சங்கீதம் 45
(சோஷனீம் என்னும் வாத்தியத்திலே வாசிக்கக் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட நேசப்பாட்டாகிய சங்கீதம்)1என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.2எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார்.3சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு,4சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும்.5உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.6தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.7நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்.8தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.9உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள்.10குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.11அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.12தீரு குமாரத்தி காணிக்கை கொண்டு வருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள்.13ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது.14சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக் கொண்டுவரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக் கொண்டு வரப்படுவார்கள்.15அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள்.16உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர்.17உமது நாமத்தை எல்லாத் தலை முறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.சங்கீதம் 49
(கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்)1ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள்.2பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள்.3என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும்.4என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன்.5என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன?6தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற,7ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி,8எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.9அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒரு போதும் முடியாது.10ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான்.11தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள்.12ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.13இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா)14ஆட்டு மந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி, அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.15ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா)16ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே.17அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.18அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும்,19அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான்.20கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.சங்கீதம் 84
(கித்தீத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்)1சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!2என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களின் மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும், என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.3என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.4உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக் கொண்டிருப்பார்கள். (சேலா)5உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.6அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.7அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.8சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா)9எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப் பாரும்.10ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்து கொள்ளுவேன்.11தேவனாகிய கர்த்தர் சூரியனும், கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும், மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.12சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.சங்கீதம் 85
(கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.)1கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.2உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா)3உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.4எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.5என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?6உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?7கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.8கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.9நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.10கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.11சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.12கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.13நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.சங்கீதம் 87
(கோராகின் புத்திரருக்கு ஒப்புவிக்கப்பட்ட பாட்டாகிய சங்கீதம்)1அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.2 கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப் பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.3தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா)4என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்;5சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர் தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.6 கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா)7எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும், ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.
Leave a Reply