Scripture Portion: 2 Samuel 5:11-25, 6:1-23, 1 Chronicles 13-16
2 சாமுவேல் 5 (5:11-25)
11தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள்.12கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது,13அவன் எப்ரோனிலிருந்து வந்த பின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள்.14எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,15இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா,16எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்னும் பேர்களையுடைய குமாரர் பிறந்தார்கள்.17தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப் போனான்.18பெலிஸ்தரோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.19பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையிலே ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார்.20தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான்.21அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள்.22பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.23தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,24முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார்.25கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.2 சாமுவேல் 6
1பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி,2கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்து போய்,3தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும், அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள்.4அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான்.5தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டு போனார்கள்.6அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.7அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.8அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான்.9தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி,10அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான்.11கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்று மாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார்.12தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீது ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டு வந்தான்.13கர்த்தருடைய பெட்டியைச் சுமந்து போகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.14தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழு பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான்.15அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள்.16கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள்.17அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.18தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து,19இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள்.20தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்து போட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள்.21அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப் பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப் பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன்.22இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான்.23அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.1 நாளாகமம் 13
1தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி,2இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்ற சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளிநிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்துக்கு ஆள் அனுப்பி,3நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான்.4இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள்.5அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச் சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி,6கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத் யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப் போனார்கள்.7அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புது ரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள்.8தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழு பலத்தோடும் தேவனுக்கு முன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள்.9அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.10அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன் கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான்.11அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற பேரேஸ் ஊசா என்னும் பேரிட்டு,12அன்றையதினம் தேவனுக்குப் பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி,13பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத் ஏதோமின் வீட்டிலே சேர்த்தான்.14தேவனுடைய பெட்டி ஓபேத் ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்று மாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத் ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.1 நாளாகமம் 14
1தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுரு மரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்.2கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.3எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.4எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்.5இப்கார், எலிசூவா, எல்பெலேத்,6நோகா, நெப்பேக், யப்பியா,7எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.8தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான்.9பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.10பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.11அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார் என்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள்.12அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன.13பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.14அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,15முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.16தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள்.17அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.1 நாளாகமம் 15
1அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.2பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான்.3அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.4ஆரோனின் புத்திரரையும்,5லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும், அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும்,6மெராரியின் புத்திரரில் பிரபுவாகிய அசாயாவையும், அவன் சகோதரராகிய இருநூற்றிருபதுபேரையும்,7கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும்,8எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும்,9எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய எலியேலையும், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும்,10ஊசியேல் புத்திரரில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவன் சகோதரராகிய நூற்றுப்பன்னிரண்டுபேரையும் தாவீது கூடிவரப்பண்ணினான்.11பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து,12அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்.13முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான்.14ஆசாரியரும் லேவியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.15பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்த பிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள்.16தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.17அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும்,18இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள்.19பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள்.20சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள்.21மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள்.22லேவியருக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாயிருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையைப் படிப்பித்தான்.23பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள்.24செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள்.25இப்படித் தாவீதும், இஸ்ரவேலின் மூப்பரும், ஆயிரத்துச் சேர்வைக்காரரும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவரப்போனார்கள்.26கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியருக்கு தேவன் அநுக்கிரகம் பண்ணினபடியால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.27தாவீதும், பெட்டியைச் சுமக்கிற சகல லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளைத் தரித்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான்.28அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும், தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.29கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரமட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்.1 நாளாகமம் 16
1அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.2தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து,3புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான்.4இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான்.5அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும்,6பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள்.7அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது:8 கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள்.9அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.10அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.11 கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.12அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!13அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும் அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூறுங்கள்.14அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும்.15ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும்.16அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள்.17அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி:18உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார்.19அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள்.20அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தை விட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள்.21அவர்களையொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு,22நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார்.23பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.24ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.25 கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.26சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.27மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது.28ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.29 கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.30பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர்.31வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரீகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக.32சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக.33அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.34 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.35எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை இரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள்.36இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக; அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள்.37பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து,38எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான்.39கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்கதகன பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில், கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக,40அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரராகிய ஆசாரியரையும் வைத்து,41இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற சிலரையும்: கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும்,42பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் தொனிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் குமாரரை வாசல் காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.43பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.
Leave a Reply