Scripture Portion: Psalm 1-2, 15, 22-24, 47, 68
சங்கீதம் 1
1துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,2கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.3அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.4துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.5ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.6கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.சங்கீதம் 2
1ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?2கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:3அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.4பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.5அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.6நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.7தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்.8என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;9இரும்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.10இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.11பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.12குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.சங்கீதம் 15
(தாவீதின் சங்கீதம்)1கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம் பண்ணுவான்?2உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.3அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.4ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.5தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான், இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.சங்கீதம் 22
(அகிலேத் ஷகார் என்னும் இராகத்தில் பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)1என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?2என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.3இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.4எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.5உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.6நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.7என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி.8கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.9நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடைய பேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.10கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.11என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.12அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டது.13பீறிக் கெர்ச்சிக்கிற சிங்கத்தைப் போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.14தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.15என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக் கொண்டது; என்னை மரணத் தூளிலே போடுகிறீர்.16நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.17என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.18என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.19ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக் கொள்ளும்.20என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.21என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டா மிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.22உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.23கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.24உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.25மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.26சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவு கூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.28ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.29பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்து கொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.30ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.31அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.சங்கீதம் 23
(தாவீதின் சங்கீதம்)1கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்.2அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.3அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.4நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.6என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.சங்கீதம் 24
(தாவீதின் சங்கீதம்)1பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.2அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.3யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்?4கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே.5அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.6இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)7வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதிக் கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.8யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே.9வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதிக் கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்.10யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா (சேலா).சங்கீதம் 47
(கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்)1சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.2உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.3ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.4தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா)5தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.7தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.8தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறார்.9ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.
சங்கீதம் 68
(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் பாட்டாகிய சங்கீதம்)1தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்குமுன்பாக ஓடிப்போவார்கள்.2புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோலத் துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள்.3நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள்.4தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.5தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.6தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள்.7தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில், (சேலா)8பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது.9தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர்.10உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர்.11ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி.12சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள்.13நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள் போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள்.14சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று.15தேவபர்வதம் பாசான் பர்வதம் போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது.16உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார்.17தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.18தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.19எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா)20நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு.21மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.22உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும்,23என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவேன்; அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவேன் என்று ஆண்டவர் சொன்னார்.24தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்.25முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.26இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.27அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.28உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்கள் நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும்.29எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.30நாணலிலுள்ள மிருகக்கூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.31பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.32பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். (சேலா)33ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.34தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.35தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
Leave a Reply