Scripture Portion: Job 35-37

யோபு 35

1பின்னும் எலிகூ மாறுத்தரமாக:
2என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று எண்ணுகிறீரோ?
3நான் பாவியாயிராததினால் எனக்குப் பிரயோஜனமென்ன? பலன் என்ன? என்று சொன்னீர்.
4உமக்கும் உம்மோடே இருக்கிற உம்முடைய சிநேகிதருக்கும் நான் பிரதியுத்தரம் சொல்லுகிறேன்.
5நீர் வானத்தை அண்ணாந்து பார்த்து, உம்மைப்பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும்.
6நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்?
7நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்?
8உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும்.
9அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள்.
10பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,
11என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை.
12அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை.
13தேவன் வீண்வார்த்தைக்குச் செவி­கொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார்.
14அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும்.
15இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது; அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை.
16ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார் என்றான்.

யோபு 36

1பின்னும் எலிகூ:
2நான் பேசிமுடியுமட்டும் சற்றேபொறும்; இன்னும் தேவன் பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.
3நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.
4மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
5இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
6அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
7அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடே கூட சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.
8அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
9அவர், அவர்கள் கிரியையையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
10அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.
11அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
12அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.
13மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
14அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்.
15சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.
16அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
17ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.
18உக்கிரமுண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் வாரிக்கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும் பொருளை மிகுதியாய்க் கொடுத்தாலும் அதற்கு நீர் நீங்கலாகமாட்டீர்.
19உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
20ஜனங்கள் தங்கள் இடத்தைவிட்டு வாரிக்கொள்ளப்படப்போகிற இரவை வாஞ்சிக்காதிரும்.
21அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
22இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?
23அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
24மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியையை நீர் மகிமைப்படுத்த நினையும்.
25எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.
26இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
27அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
28அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.
29மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
30இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை விரிக்கிறார்; சமுத்திரத்தின் ஆழங்களையும் மூடுகிறார்.
31அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.
32அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
33அதினால், அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.

யோபு 37

1இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது.
2அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள்.
3அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார்.
4அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்­தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.
5தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை அவர் செய்கிறார்.
6அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார்.
7தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார்.
8அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும்.
9தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும்.
10தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோகும்.
11அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார்.
12அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார்.
13ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
14யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.
15தேவன் அவைகளைத் திட்டம்பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ?
16மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,
17தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ?
18வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ?
19அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம்.
20நான் பேசத்துணிந்தேன் என்று யாதாமொருவன் அவருக்கு முன்பாகச் சொல்லத்தகுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் விழுங்கப்பட்டுப்போவானே.
21இப்போதும் காற்று வீசி ஆகாய மண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிறசமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்தி வருகிறபோது,
22ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு.
23சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகா நீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார்.
24ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *