Scripture Portion: Psalm 50,53,60,75

சங்கீதம் 50

(ஆசாபின் சங்கீதம்)
1வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசை தொடங்கி அது அஸ்தமிக்குந் திசை வரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.
2பூரண வடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார்.
3நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும்.
4அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார்.
5பலியினாலே என்னோடே உடன்படிக்கைபண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார்.
6வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா)
7என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன்.
8உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது.
9உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக் கொள்வதில்லை.
10சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
11மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.
12நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே.
13நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ?
14நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
15ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.
16தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.
17சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
18நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு.
19உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய்; உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது.
20நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.
21இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன்.
22தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
23ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்குத் தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

சங்கீதம் 53

(மகலாத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கப்படும்படி தாவீதினால் பாடப்பட்டு இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்)
1தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
2தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.
3அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
4அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுது கொள்ளுகிறதில்லை.
5உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.
6சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதம் 60

(தாவீது மெசொபொத்தாமியா தேசத்துச் சீரியரோடும், சோபா தேசத்துச் சீரியரோடும் யுத்தம் பண்ணினபோது, யோவாப் திரும்பி உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பன்னீராயிரம்பேரை வெட்டினபோது, அவன் சாட்சியை விளக்குவிக்கும் ஆறு நரம்புக் கின்னரத்திலே போதிப்பதற்காகப் பாடினதும் இராகத்தலைவனுக்கு ஒப்புவித்ததுமான மிக்தாம் என்னும் சங்கீதம்)
1தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள் மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
2பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.
3உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
4சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா)
5உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.
6தேவன் தமது பரிசுத்தத்தைக் கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்து கொள்ளுவேன்.
7கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப் பிரமாணிகன்.
8மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.
9அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழி காட்டுகிறவர் யார்?
10எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ?
11இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
12தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

சங்கீதம் 75

(அல்தஷ்கேத் என்னும் வாத்தியத்தில் வாசிக்கும்படி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதமாகிய பாட்டு)
1உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது.
2நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன்.
3பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா)
4வீம்புக்காரரை நோக்கி, வீம்பு பேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன்.
5உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள்.
6கிழக்கிலும், மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.
7தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.
8கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள்.
9நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
10துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *