Scripture Portion: Psalm 65-67, 69-70

சங்கீதம் 65

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதமாகிய பாட்டு)
1தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.
2ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
3அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமை கொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர்.
4உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.
5பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்.
6வல்லமையை இடைகட்டிக் கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி,
7சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர்.
8கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும், மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர்.
9தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.
10அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.
11வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது.
12வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
13மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.

சங்கீதம் 66

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதமாகிய பாட்டு)
1பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள்.
2அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள்.
3தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.
4பூமியின்மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா)
5தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர்.
6கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம்.
7அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா)
8ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ் சத்தத்தைக் கேட்கப் பண்ணுங்கள்.
9அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார்.
10தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர்.
11எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர்.
12மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்துவிட்டீர்.
13சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்;
14என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன்.
15ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா)
16தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
17அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
18என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
19மெய்யாய்த் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
20என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

சங்கீதம் 67

(நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதப் பாட்டு)
1தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,
2தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா)
3தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
4தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா)
5தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

சங்கீதம் 69

(சோஷனீம் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)
1தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமா மட்டும் பெருகிவருகிறது.
2ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
3நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப் போயிற்று.
4நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்க வேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்க வேண்டியதாயிற்று.
5தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
6சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக.
7உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.
8என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
9உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
10என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.
11இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன்.
12வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம் பண்ணுகிறவர்களின் பாடலானேன்.
13ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
14நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.
15ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக் கொள்ளாமலும் இருப்பதாக.
16கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.
17உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.
18நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.
19தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
20நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
21என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
22அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.
23அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.
24உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.
25அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
26தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.
27அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
28ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப் போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.
29நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
30தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.
31கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப் பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
32சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.
33கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.
34வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிறயாவும் அவரைத் துதிக்கக்கடவது.
35தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
36அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.

சங்கீதம் 70

(நினைப்பூட்டுதலாகப் பாடி இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)
1தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
2என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.
3ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப் போவார்களாக.
4உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
5நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *