Scripture Portion: Psalm 32,51,86,122

சங்கீதம் 32

(மஸ்கீல் என்னும் தாவீதின் போதக சங்கீதம்)
1எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.
2எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
3நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
4இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)
5நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா)
6இதற்காகச் சகாயங்கிடைக்குங்காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.
7நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக் காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா)
8நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
9வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.
10துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.
11நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.

சங்கீதம் 51

(பத்சேபாளிடத்தில் தாவீது பாவத்திற்குட்பட்ட பின்பு நாத்தான் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவன் பாவத்தை உணர்த்தினபோது பாடி, இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)
1தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
2என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும்.
3என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
4தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன்.
5இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
6இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
7நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
8நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும்.
9என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
10தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.
11உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
12உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
13அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
14தேவனே, என்னை இரட்சிக்குந்தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடும்.
15ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
16பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
17தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
18சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.
19அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

சங்கீதம் 86

(தாவீதின் விண்ணப்பம்)
1கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.
2என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
3ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
4உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
5ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
6கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.
7நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
8ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.
9ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
10தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
11கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
12என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
13நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
14தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.
15ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.
17கர்த்தாவே, நீர் எனக்குத் துணை செய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.

சங்கீதம் 122

(தாவீது பாடின ஆரோகண சங்கீதம்)
1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.
2எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.
3எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.
4அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.
5அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
6எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.
7உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.
8என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.
9எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *