Scripture Portion: 2 Samuel 13-15
2 சாமுவேல் 13
1இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள் மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான்.2தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது.3அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி.4அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினாலே இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான்.5அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாக சமைக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான்.6அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.7அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்கு சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச்சொன்னான்.8தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப்போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு,9சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.10அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறை வீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறை வீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டுபோனாள்.11அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான்.12அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம்.13நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்க மாட்டார் என்றாள்.14அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான்.15பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான்.16அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல்,17தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான்.18அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவர்ணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள்.19அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவர்ணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டு போனாள்.20அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப் பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள்.21தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயிருந்தான்.22அப்சலோம் அம்னோனோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை; தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான்.23இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான்.24அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.25ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.26அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான்.27அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான்.28அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.29அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜகுமாரர் எல்லாரும் எழுந்திருந்து, அவரவர் தம் தம் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள்.30அவர்கள் வழியில் இருக்கிறபோதே, அப்சலோம் ராஜகுமாரரையெல்லாம் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீந்திருக்க விடவில்லை என்கிறதாய், தாவீதுக்குச் செய்தி வந்தது.31அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.32அப்பொழுது தாவீதின் தமையனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் வந்து: ராஜகுமாரரான வாலிபரையெல்லாம் கொன்று போட்டார்கள் என்று என் ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன் மாத்திரம் செத்துப்போனான்; அவன் தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் நெஞ்சில் இருந்தது.33இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே செத்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான்.34ஜாமக்காரச் சேவகன் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேகம் ஜனங்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாய் வருகிறதைக் கண்டான்.35அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜகுமாரர் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான்.36அவன் பேசி முடிந்தபோது, ராஜகுமாரர் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா ஊழியக்காரரும் மிகவும் புலம்பி அழுதார்கள்.37அப்சலோமோ அம்மீயூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.38அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான்.39தாவீது ராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.2 சாமுவேல் 14
1ராஜாவின் இருதயம் அப்சலோமின் மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செருயாவின் குமாரன் யோவாப் கண்டு.2அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவு கொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்து போனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப் போலக் காண்பித்து,3ராஜாவினிடத்தில் போய், அவரை நோக்கி: இன்ன இன்ன பிரகாரமாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவள் வாயிலே போட்டான்.4அப்படியே தெக்கோவா ஊராளான அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள்.5ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள், என் புருஷன் செத்துப்போனான்.6உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான்.7வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்று போட்டவனை ஒப்பி; அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடிக்கு, எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள்.8ராஜா அந்த ஸ்திரீயைப் பார்த்து: நீ உன் வீட்டுக்குப் போ, உன் காரியத்தைக் குறித்து உத்தரவு கொடுப்பேன் என்றான்.9பின்னும் அந்தத் தெக்கோவாவூர் ஸ்திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின் மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப் பழி என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள்.10அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான்.11பின்னும் அவள்: இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்பு செய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.12அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தை சொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.13அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர், துரத்துண்ட தம்முடையவனை ராஜா திரும்ப அழைக்காததினாலே, ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல் இருக்கிறார்.14நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மை விட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார்.15இப்பொழுதும் நான் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையைப் பேசவந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாக்கினதினால், நான் ராஜாவோடே பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை.16என்னையும் என் குமாரனையும் ஏகமாய் தேவனுடைய சுதந்தரத்திற்குப் புறம்பாக்கி, அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்கலாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார்.17ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப் போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றாள்.18அப்பொழுது ராஜா அந்த ஸ்திரீக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னிடத்தில் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ, ராஜாவாகிய என் ஆண்டவர் சொல்வாராக என்றாள்.19அப்பொழுது ராஜா: இதிலெல்லாம் யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு ஸ்திரீ பிரதியுத்தரமாக, ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னதற்கெல்லாம் வலது பக்கத்திலாவது இடது பக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் கூடாது என்று ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப் தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலே போட்டான்.20நான் இந்தக் காரியத்தை உபமானமாய்ப் பேசுகிறதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாயிருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப் போல் இருக்கிறது என்றாள்.21அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.22அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி, ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.23பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டு வந்தான்.24ராஜா: அவன் என் முகத்தைப் பார்க்கவேண்டியதில்லை; தன் வீட்டுக்குத் திரும்பிப் போகட்டும் என்றான்; அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான்.25இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இல்லை; உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது.26அவன் தன் தலைமயிர் தனக்குப் பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவன் தலைமயிர் ராஜாவுடைய நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும்.27அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்தார்கள்; இவள் ரூபவதியான பெண்ணாயிருந்தாள்.28அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான்.29ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவினிடத்தில் அனுப்பும்படி அழைப்பித்தான்; அவனோ அவனிடத்திற்கு வரமாட்டேன் என்றான்; இரண்டாம்விசையும் அவன் அழைத்தனுப்பினான்; அவன் வரமாட்டேன் என்றான்.30அப்பொழுது அவன் தன் வேலைக்காரரைப் பார்த்து: இதோ என் நிலத்திற்கு அருகே யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதைத் தீக்கொளுத்திப் போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர் அந்த நிலத்தை தீக்கொளுத்திப் போட்டார்கள்.31அப்பொழுது யோவாப் எழுந்திருந்து, அப்சலோமிடத்தில் வீட்டிற்குள் போய், என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர் தீக்கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான்.32அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.33யோவாப் ராஜாவினிடத்தில் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமை அழைப்பித்தான்; அவன் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.2 சாமுவேல் 15
1இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான்.2மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால்,3அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான்.4பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான்.5எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான்.6இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.7நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும்.8கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியா தேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனை பண்ணினேன் என்றான்.9அதற்கு ராஜா, சமாதானத்தோடே போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான்.10அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.11எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள்.12அப்சலோம் பலிகளைச் செலுத்தும் போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள்.13அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப் பற்றிப்போகிறது என்றான்.14அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான்.15ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள்.16அப்படியே ராஜாவும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள்; வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பின்வைத்தான்.17ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள்.18அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும், பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக நடந்தார்கள்.19அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனே கூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நிய தேசத்தான்; நீ உன் இடத்திற்குத் திரும்பிப் போகலாம்.20நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா நான் போகக்கூடிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துக்கொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான்.21ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.22அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.23சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.24சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடேகூட இருந்து சுமக்கிற சகல லேவியரும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; ஜனங்கள் எல்லாரும் நகரத்திலிருந்து கடந்து தீருமட்டும், அபியத்தார் திரும்பிப்போயிருந்தான்.25ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார்.26அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.27பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும்.28எனக்கு அறிவிக்கிறதற்கு உங்களிடத்திலிருந்து செய்தி வருமட்டும், நான் வனாந்தரத்தின் வெளிகளிலே தரித்திருப்பேன் என்றான்.29அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.30தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.31அப்சலோமோடே கட்டுப்பாடு பண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான்.32தாவீது மலையின் உச்சிமட்டும் வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது, இதோ, அற்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான்.33தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடேகூட நடந்துவந்தால் எனக்குப் பாரமாயிருப்பாய்.34நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன் நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்,35உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ, என்னென்ன கேள்விப்படுகிறாயோ, அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய்.36அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள் வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான்.37அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமுக்கு வந்தான்.
Leave a Reply