Scripture Portion: 2 Samuel 16-18

2 சாமுவேல் 16

1தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது.
2ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும், வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான்.
3அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான்.
4அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான்.
5தாவீது ராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து,
6சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீது ராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான்.
7சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ.
8சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான்.
9அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான்.
10அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான்.
11பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
12ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.
13அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான்.
14ராஜாவும் அவனோடிருந்த சகல ஜனங்களும் விடாய்த்தவர்களாய், தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள்.
15அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள்.
16அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான்.
17அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதே போனது என்ன என்று கேட்டான்.
18அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன்.
19இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படி சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான்.
20அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான்.
21அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான்.
22அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான்.
23அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது; அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.

2 சாமுவேல் 17

1பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும்.
2அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில், நான் அவனிடத்தில் போய், அவனைத் திடுக்கிடப்பண்ணுவேன்; அப்பொழுது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால், நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி,
3ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாய்த் திரும்பப்பண்ணுவேன், இப்படிச் செய்ய நீர் வகைதேடினால், எல்லாரும் திரும்பினபின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான்.
4இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும், இஸ்ரவேலுடைய சகல மூப்பரின் பார்வைக்கும் நலமாய்த் தோன்றினது.
5ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான்.
6ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இந்தப்பிரகாரமாக அகிப்தோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால், நீ சொல் என்றான்.
7அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.
8மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.
9இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள்.
10அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.
11ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபாமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும்.
12அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.
13ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால், இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான்.
14அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.
15பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனை சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.
16இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாய்த் தாவீதுக்கு அறிவிக்கும்படிக்குச் செய்தி அனுப்பி; நீர் இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளிகளிலே தங்கவேண்டாம்; ராஜாவும் அவரோடிருக்கிற சகல ஜனங்களும் விழுங்கப்படாதபடிக்குத் தாமதம் இல்லாமல் அக்கரைப்படவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான்.
17யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, இன்றொகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள்.
18ஒரு பிள்ளையாண்டான் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாய்ப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனுஷன் வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள்.
19வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றுவாயின்மேல் விரித்து, காரியம் வெளிப்படாதபடிக்கு, அதின்மேல் நொய்யைப் பரப்பிவைத்தாள்.
20அப்சலோமின் சேவகர் அந்த ஸ்திரீயினிடத்தில் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ: வாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடிக்காணாதேபோய், எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
21இவர்கள் போனபிற்பாடு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாய் எழுந்து ஆற்றைக் கடந்துபோங்கள்; இன்னபடி அகித்தோப்பேல் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை சொன்னான் என்றார்கள்.
22அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுது விடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை.
23அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள்.
24தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான்.
25அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும், செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான்.
26இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள்.
27தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,
28மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும், பெரும் பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறு பயற்றையும்,
29தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.

2 சாமுவேல் 18

1தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து,
2பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.
3ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவி செய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள்.
4அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள்.
5ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக் குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள்.
6ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது.
7அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.
8யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம்.
9அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறு கழுதை சன்னல் பின்னலான ஒரு பெரிய கர்வாலிமரத்தின் கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலி மரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறு கழுதை அப்பாலே போயிற்று.
10அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலி மரத்திலே தொங்கக் கண்டேன் என்றான்.
11அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைக்கண்டாயே; பின்னை ஏன் அவனை அங்கே வெட்டி, தரையிலே தள்ளிப்போடவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும் கொடுக்கக் கடமையுள்ளவனாயிருப்பேனே என்றான்.
12அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே.
13ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமாட்டாது; ஆதலால், நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.
14ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலி மரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான்.
15அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக்கொன்று போட்டார்கள்.
16அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள்.
17அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
18அப்சலோம் உயிரோடே இருக்கையில்: என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும்.
19சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான்.
20யோவாப் அவனை நோக்கி: இன்னைறயதினம் நீ செய்தியைக் கொண்டு போகக்கூடாது; இன்னொரு நாளிலே நீ செய்தியைக் கொண்டு போகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி,
21யோவாப் கூஷியை நோக்கி: நீ போய், கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான்.
22சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான்.
23அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடி கூஷிக்கு முந்திக்கொண்டான்.
24தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனிவாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு,
25கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாய் வந்தால், அவன் வாயிலே நல்ல செய்தி இருக்கும் என்றான்; அவன் ஓடிகிட்டவரும்போது,
26ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான்.
27மேலும் ஜாமங்காக்கிறவன்; முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் குமாரன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான்.
28அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
29அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய சந்தடியிருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான்.
30அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான்.
31இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாயெழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான்.
32அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறனா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான்.
33அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *