Scripture Portion: 2 Samuel 19-21

2 சாமுவேல் 19

1இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது.
2ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம் நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய் மாறிற்று.
3யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
4ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான்.
5அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்திலே போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது.
6அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன்.
7இப்போதும் எழுந்திருந்து வெளியே வந்து, உம்முடைய ஊழியக்காரரோடே அன்பாய்ப் பேசும்; நீர் வெளியே வராதிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடே தங்கியிருப்பதில்லை என்று கர்த்தர்மேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயது முதல் இதுவரைக்கும் உமக்கு நேரிட்ட எல்லாத் தீமையைப்பார்க்கிலும், அது உமக்கு அதிக தீமையாயிருக்கும் என்றான்.
8அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
9இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களிலுமுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய சத்துருக்களின் கைக்கு நம்மை நீங்கலாக்கிவிட்டார், அவர்தானே பெலிஸ்தரின் கைக்கு நம்மைத் தப்புவித்தார்; இப்போதோ அப்சலோமுக்குத் தப்ப, தேசத்தைவிட்டு ஓடிப்போனார்.
10நமக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணிவைத்த அப்சலோம் யுத்தத்திலே செத்தான்; இப்போதும் ராஜாவைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக் கொண்டார்கள்.
11இப்படி இஸ்ரவேலர் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவனுக்குக் கேள்வியானபடியினால், தாவீது ராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பரோடே பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்?
12நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள்.
13நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாயிராவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொல்லச்சொன்னான்.
14இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பி வாரும் என்று சொல்லி அனுப்பினார்கள்.
15ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்மட்டும் வந்தபோது, யூதா கோத்திரத்தார் ராஜாவுக்கு எதிர்கொண்டுபோய், ராஜாவை யோர்தானைக் கடக்கப்பண்ண கில்கால் மட்டும் வந்தார்கள்.
16பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயியும் தீவிரித்து, யூதா மனுஷரோடுங்கூடத் தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டுபோனான்.
17அவனோடே பென்யமீன் மனுஷர் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவும், அவனோடேகூட அவனுடைய பதினைந்து குமாரரும், அவனுடைய இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாய்க் கடந்து போனார்கள்.
18அவர்கள் ராஜாவின் வீட்டாரை இக்கரைப்படுத்தவும், அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும், ஒரு படகு இக்கரையிலே வந்தது; அப்பொழுது கேராவின் குமாரனாகிய சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து,
19ராஜாவை நோக்கி: என் ஆண்டவன் என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவாகிய என் ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தமது மனதில் வைக்காமலும் இருப்பாராக.
20உமது அடியானாகிய நான் பாவஞ்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான்.
21அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான்.
22அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் சத்துருக்களாகிறதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி,
23ராஜா சீமேயியைப் பார்த்து: நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான்.
24சவுலின் பேரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம் பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம் பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை.
25அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிர்கொண்டு வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடு கூட வராமல் போனது என்ன என்று கேட்டான்.
26அதற்கு அவன்: ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம் போக்கினான்; உமது அடியானாகிய நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன்.
27அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும்.
28ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு முன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய, மற்றபடி அல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான்,
29அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன் காரியத்தைக் குறித்து அதிகமாய்ப் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான்.
30அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
31கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான் மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்து வந்தான்.
32பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான்.
33ராஜா பர்சிலாவை நோக்கி: நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன் என்றான்.
34பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர. நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்?
35இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்வேண்டியது என்ன?
36அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன?
37நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான்.
38அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான்.
39ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான்.
40ராஜா கடந்து, கில்கால்மட்டும் போனான்; கிம்காம் அவனோடேகூடக் கடந்துவந்தான்; யூதா ஜனம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதி ஜனமும், ராஜாவை இக்கரைப்படுத்தி வந்தபின்பு,
41இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள் சகோதரராகிய யூதா மனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும், யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள்.
42அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கித் தின்றோமோ? எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ? என்றார்கள்.
43இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.

2 சாமுவேல் 20

1அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.
2அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம் மட்டுமுள்ள யூதா மனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள்.
3தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்துப் பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்.
4பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனுஷரை மூன்று நாளைக்குள்ளே என்னிடத்தில் வரவழைத்து, நீயும் கூட வந்து இருக்கவேண்டும் என்றான்.
5அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்த காலத்திலே வராமல் தாமதித்திருந்தான்.
6அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.
7அப்படியே யோவாபின் மனுஷரும், கிரேத்தியரும் பிலேத்தியரும், சகல பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டு, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர எருசலேமிலிருந்து போனார்கள்.
8அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது.
9அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலது கையினால் அவன் தாடியைப் பிடித்து,
10தன் கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாக குத்தினான்; அவன் செத்துப்போனான்; அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள்.
11யோவாபுடைய வாலிபரில் ஒருவன் செத்தவனண்டையிலே நின்று, யோவாபின்மேல் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதின் பட்சத்தில் இருக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போவானாக என்றான்.
12அமாசா நடுவழியிலே இரத்தத்திலே புரண்டு கிடந்தபடியினால், ஜனங்கள் எல்லாரும் தரித்து நிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவனண்டையிலே வருகிறவர்கள் எல்லாரும் தரித்து நிற்பதைக் கண்டு, ஒரு வஸ்திரத்தை அவன்மேல் போட்டான்.
13அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பிற்பாடு, எல்லாரும் கடந்து, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் தொடர, யோவாபுக்குப் பின்சென்றார்கள்.
14அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவாகிய ஆபேல்மட்டாகவும், பேரீமின் கடைசிமட்டாகவும் வந்திருந்தான்; அவ்விடத்தாரும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள்.
15அவர்கள் போய் பெத்மாக்காவாகிய ஆபேலிலே அவனை முற்றிக்கைபோட்டு, பட்டணத்திற்கு எதிராகத் தெற்றுவரைக்கும் கொத்தளம் போட்டார்கள்; யோவாபோடே இருக்கிற ஜனங்கள் எல்லாரும் அலங்கத்தை விழப்பண்ணும்படி அழிக்க எத்தனம்பண்ணினார்கள்.
16அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்டவரச் சொல்லுங்கள் என்றாள்.
17அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது, அந்த ஸ்திரீ: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான்.
18அப்பொழுது அவள்: பூர்வகாலத்து ஜனங்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள்.
19இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள்.
20யோவாப் பிரதியுத்தரமாக: விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாயிருப்பதாக.
21காரியம் அப்படியல்ல; பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்த் தன் கையை ஓங்கினான்; அவனை மாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தை விட்டுப் போவேன் என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து: இதோ, அவன் தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,
22அவள் ஜனங்களிடத்தில் போய் புத்தியாய்ப் பேசினதினால், அவர்கள் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடத்திலே போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; அவரவர் பட்டணத்தை விட்டுக் கலைந்து, தங்கள் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடத்துக்குப் போகும்படி எருசலேமுக்குத் திரும்பினான்.
23யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள்.
24அதோராம் பகுதிகளை வாங்குகிறவனும், அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியும்,
25சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.
26யயீரியனாகிய ஈராவும் தாவீதுக்குப் பிரதானியாயிருந்தான்.

2 சாமுவேல் 21

1தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான். கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார்.
2அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும், யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான்.
3ஆகையால் தாவீது கிபியோனியரைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான்.
4அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான்.
5அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லையிலெங்கும் நிலைக்காதபடிக்கு, அழிந்துபோக எவன் எங்களை நிர்மூலமாக்கி எங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தானோ,
6அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான்.
7ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக் கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
8ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும், மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மேரப் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து,
9அவர்களைக் கிபியோனியர் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களைக் கர்த்தருடைய சமுகத்தில் மலையின்மேல் தூக்கிப்போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழுபேரும் ஒருமிக்க விழுந்தார்கள்; வாற்கோதுமை அறுப்பு துவக்குகிற அறுப்புக்காலத்தின் முந்தின நாட்களிலே அவர்கள் கொன்று போடப்பட்டார்கள்.
10அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள்.
11ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது,
12தாவீது போய், பெலிஸ்தர் கில்போவாவிலே சவுலை வெட்டினபோது, பெத்சானின் வீதியிலே தூக்கிப்போடப்பட்டதும், கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார் அங்கே போய்த் திருட்டளவாய்க் கொண்டுவந்ததுமான சவுலின் எலும்புகளையும், அவன் குமாரனான யோனத்தானின் எலும்புகளையும், அவர்களிடத்திலிருந்து எடுத்து,
13அங்கே இருந்து அவைகளைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து,
14சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்.
15பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடேகூட அவன் சேவகரும் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணினார்கள்; தாவீது விடாய்த்துப்போனான்.
16அப்பொழுது முந்நூறு சேக்கல் நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதுப்பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டும் என்று இருந்தான்.
17செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள்.
18அதற்குப் பின்பு பெலிஸ்தரோடே திரும்பவும் கோபிலே யுத்தம்நடந்தது; ஊசாத்தியனாகிய சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான்.
19பெலிஸ்தரோடு இன்னும் வேறொரு யுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது.
20இன்னும் ஒரு யுத்தம் காத் ஊரிலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் கைகளில் அவ்வாறு விரல்களும் அவன் கால்களில் அவ்வாறு விரல்களும், ஆக இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; இவனும் இராட்சத பிறவியாயிருந்து,
21இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனான சீமேயாவின் குமாரனாகிய யோனத்தான் அவனை வெட்டினான்,
22இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *