Scripture Portion: 2 Samuel 24, 1 Chronicles21-22, Psalm 30

2 சாமுவேல் 24

1 கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.
2அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.
3அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.
4ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,
5யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி,
6அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய்,
7பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய்,
8இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபது நாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.
9யோவாப் ஜனத்தை இலக்கம் பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டு லட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம்பேர் இருந்தார்கள்.
10இவ்விதமாய் ஜனங்களை எண்ணினபின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.
11தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:
12நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
13அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்று மாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்று நாள் கொள்ளை நோய் உண்டாக வேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோக வேண்டும் என்பதை நீர் யோசித்துப் பாரும் என்று சொன்னான்.
14அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
15அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமேதொடங்கி குறித்தகாலம் வரைக்கும் கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபா மட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப் போனார்கள்.
16தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.
17ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம் பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.
18அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
19காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.
20அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி,
21ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.
22அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்று சொல்லி,
23அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்த பின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான்.
24ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறைவெள்ளிக்குக் கொண்டான்.
25அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்கதகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின் மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

1 நாளாகமம் 21

1சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.
2அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்.
3அப்பொழுது யோவாப்: கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான்.
4யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து,
5ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொரு லட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள்.
6ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான்.
7இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார்.
8தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.
9அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி,
10நீ தாவீதினிடத்தில் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
11அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி:
12மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான்.
13அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
14ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளை நோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள்.
15எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான்.
16தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள்.
17தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப்பு நடப்பித்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.
18அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான்.
19அப்படியே தாவீது கர்த்தரின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படியே போனான்.
20ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நாலு குமாரரும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளித்துக்கொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான்.
21தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது, ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து, அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான்.
22அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.
23ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் அதை வாங்கிக் கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்க தகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், போஜனபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான்.
24அதற்குத் தாவீது ராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதை பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி,
25தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து,
26அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல்,
27தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்.
28எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத் தாவீது அக்காலத்திலே கண்டு அங்கேதானே பலியிட்டான்.
29மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது.
30தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக்கூடாதிருந்தது.

1 நாளாகமம் 22

1அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.
2பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நிய ஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான்.
3தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும்,
4எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும், தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள்.
5தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்க வேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம் பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்து வைத்தான்.
6அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து,
7சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன்.
8ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப்பண்ணினாய்; நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய்.
9இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன் பேர் சாலொமோன் என்னப்படும்; அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன்.
10அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.
11இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.
12கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.
13கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.
14இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்து லட்சம் தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.
15வேலை செய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும், கல்தச்சரும், எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள்.
16பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.
17தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது:
18உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய ஜனத்திற்கு முன்பாகவும், தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது.
19இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.

சங்கீதம் 30

(கிரகப் பிரதிஷ்டையின் பாட்டாகிய தாவீதின் சங்கீதம்)
1 கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன்.
2என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர்.
3 கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர்.
4 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.
5அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.
6நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என் வாழ்விலே சொன்னேன்.
7 கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்.
8நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
9 கர்த்தாவே, நீர் எனக்குச் செவி கொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி;
10 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன்.
11என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர்.
12என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *