Scripture Portion: 1 kings 1-2, Psalm 37,71,94
1 இராஜாக்கள் 1
1தாவீது ராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை.2அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ராஜசமுகத்தில் நின்று, அவருக்குப் பணிவிடை செய்யவும், ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவோம் என்று சொல்லி,3இஸ்ரவேலின் எல்லையிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.4அந்தப் பெண் வெகு அழகாயிருந்தாள்; அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடை செய்தாள்; ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை.5ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்; நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரை வீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான்.6அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்து கொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள்.7அவன் செருயாவின் குமாரனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனைபண்ணிவந்தான்; அவர்கள் அவனிடத்திலிருந்து அவனுக்கு உதவி செய்து வந்தார்கள்.8ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை.9அதோனியா இன்ரோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரரெல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான்.10தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், பெனாயாவையும், பராக்கிரமசாலிகளையும், தன் சகோதரனாகிய சாலொமோனையும் அழைக்கவில்லை.11அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா?12இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன்.13நீ தாவீது ராஜாவினிடத்தில் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள்.14நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான்.15அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயது சென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தாள்.16பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான்.17அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக் கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே.18இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை.19அவன் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை.20ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பிறகு அவருடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவன் இன்னான் என்று தங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரவேலர் அனைவரின் கண்களும் உம்மை நோக்கிக் கொண்டிருக்கிறது.21அறிவியாமற்போனால் ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய பிதாக்களோடே படுத்துக்கொண்டபின்பு, நானும் என் குமாரனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாய் எண்ணப்படுவோம் என்றாள்.22அவள் ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான்.23தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான்.24நாத்தான்: ராஜாவாகிய என் ஆண்டவனே, அதோனியா எனக்குப்பின் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் சொன்னதுண்டோ?25அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும், ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் இராணுவத்தலைவரையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாகப் புசித்துக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள்.26ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை.27ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில், இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான்.28அப்பொழுது தாவீது ராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள்.29அப்பொழுது ராஜா: உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை,30என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான்.31அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என் ஆண்டவனாகிய தாவீது ராஜா என்றைக்கும் வாழ்க என்றாள்.32பின்பு தாவீது ராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்.33அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள்.34அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள்.35அதின் பின்பு அவன் நகர்வலம் வந்து, என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாயிருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான்.36அப்பொழுது யோய்தாவின் குமாரன் பெனாயா ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என் ஆண்டவனுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக.37கர்த்தர் ராஜாவாகிய என் ஆண்டவனோடே எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீது ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சிங்காசனத்தைப்பார்க்கிலும் அவருடைய சிங்காசனத்தைப் பெரிதாக்குவாராக என்றான்.38அப்படியே ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், யோய்தாவின் குமாரன் பெனாயாவும், கிரேத்தியரும் பிலேத்தியரும் போய், சாலொமோனைத் தாவீது ராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டு போனார்கள்.39ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.40பிற்பாடு ஜனங்களெல்லாரும் அவன் பிறகாலே போனார்கள்; ஜனங்கள் நாகசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரத்தக்கதாக மகா பூரிப்பாய்ச் சந்தோஷித்தார்கள்.41அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் போஜனம்பண்ணி முடித்தபோது, அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காளசத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான்.42அவன் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டு வருகிறவன் என்றான்.43யோனத்தான் அதோனியாவுக்குப் பிரதியுத்தரமாக: ஏது, தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவன் சாலொமோனை ராஜாவாக்கினாரே.44ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரன் பெனாயாவையும், கிரேத்தியரையும் பிலேத்தியரையும் அவனோடே அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறு கழுதையின்மேல் ஏற்றினார்கள்.45ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்; நகரமெல்லாம் முழங்கத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடே புறப்பட்டுப்போனார்கள்; நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான்.46அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறான்.47ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப்பார்க்கிலும் பிரபலப்படுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப்பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார்.48பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என் சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான்.49அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லாரும் அதிர்ந்து எழுந்திருந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள்.50அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துகொண்டான்.51இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்று போடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது.52அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்துகொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான்.53அவனைப் பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன் வீட்டிற்குப் போ என்றான்.1 இராஜாக்கள் 2
1தாவீது மரணமடையும் காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது:2நான் பூலோகத்தார் யாவரும் போகிறவழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு.3நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக் குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும்,4மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக.5செருயாவின் குமாரனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும், ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்த காரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள கச்சையிலும் தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே.6ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து, அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு.7கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள்.8மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன்.9ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான்.10பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்.11தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான்.12சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது.13ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த்தான் வருகிறேன் என்றான்.14பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள்.15அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது.16இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள்.17அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம்பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான்.18அதற்குப் பத்சேபாள்; நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள்.19பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டு வந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான்.20அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்க வேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான்.21அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்கு விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்றாள்.22ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செரூயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.23பின்பு சாலொமோன் ராஜா: அதோனியா இந்த வார்த்தையைத் தன் பிராணனுக்குச் சேதமாகச் சொல்லாதிருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று கர்த்தர்மேல் ஆணையிட்டு,24இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று என்னைத் திடப்படுத்தினவரும், என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,25ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்பினான்; இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்.26ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீ கூட அநுபவித்தபடியினாலும், இன்றைய தினம் நான் உன்னைக் கொலை செய்யமாட்டேன் என்றான்.27அப்படியே கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான்.28நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான்.29யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தண்டையில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவன்மேல் விழு என்றான்.30பெனாயா கர்த்தரின் கூடாரத்திற்குப் போய், அவனைப் பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவினிடத்தில் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு மறுஉத்தரவு கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான்.31அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்பண்ணி, இவ்விதமாய் யோவாப் முகாந்தரமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என் பிதாவின் வீட்டைவிட்டும் விலக்கிப்போடு.32அவன் தன்னைப்பார்க்கிலும் நீதியும் நற்குணமுமுள்ள இரண்டு பேராகிய நேரின் குமாரன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன்மேலும், ஏதேரின் குமாரன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவன்மேலும் விழுந்து, என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பப்பண்ணுவாராக.33இப்படியே அவர்களுடைய இரத்தப் பழி என்றும் யோவாபுடைய தலையின்மேலும், அவன் சந்ததியாரின் தலையின்மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவர் சந்ததியாருக்கும் அவர் வீட்டாருக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும்கடவது என்றான்.34அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான்.35அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான்.36பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக்கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு.37நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாகவே சாவாய்; அப்பொழுது உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்றான்.38சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாள் எருசலேமிலே குடியிருந்தான்.39மூன்று வருஷம் சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர் இரண்டுபேர் மாக்காவின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்துக்கு ஓடிப்போனார்கள்; உன் வேலைக்காரர் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள்.40அப்பொழுது சீமேயி எழுந்து, தன் கழுதையின்மேல் சேணம் வைத்து, தன் வேலைக்காரரைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடத்துக்குப் புறப்பட்டுப் போனான்; இப்படிச் சீமேயி போய், தன் வேலைக்காரரைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான்.41சீமேயி எருசலேமிலிருந்து காத் ஊருக்குப் போய், திரும்பி வந்தான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது,42ராஜா சீமேயியை அழைப்பித்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிற நாளிலே சாகவேசாவாய் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து, உனக்குத் திடச்சாட்சியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா?43நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன? என்று சொல்லி,44பின்னும் ராஜா சீமேயியைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனதுக்குத் தெரிந்திருக்கிறதுமான எல்லாப் பொல்லாப்பையும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் கர்த்தர் உன் பொல்லாப்பை உன் தலையின்மேல் திரும்பப்பண்ணுவார்.45ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி,46ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளை கொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.சங்கீதம் 37
(தாவீதின் சங்கீதம்)1பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே.2அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.3கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள்.4கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.5உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.6உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப்பட்டப் பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார்.7கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன் மேலும் எரிச்சலாகாதே.8கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.9பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்ளுவார்கள்.10இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை.11சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.12துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான்.13ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார்.14சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.15ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும்.16அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப் பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது.17துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார்.18உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.19அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப் போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள்.20துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள்.21துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.22அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள்.23நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார்.24அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.25நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை.26அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.27தீமையை விட்டு விலகி, நன்மை செய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய்.28கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.29நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.30நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும்.31அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.32துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.33கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை.34நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டு போவதை நீ காண்பாய்.35கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன். அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான்.36ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை.37நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.38அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.39நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம்.40கர்த்தர் அவர்களுக்கு உதவி செய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.சங்கீதம் 71
1கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.2உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.3நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.4என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.5கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.6நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.7அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.8என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.9முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.10என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:11தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.12தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.13என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.14நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.15என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.16கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மை பாராட்டுவேன்.17தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்து வந்தேன்.18இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.19தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?20அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.21என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.22என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும், உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.23நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.24எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.சங்கீதம் 94
1நீதியைச் சரிகட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.2பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்.3 கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?4எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமை பாராட்டுவார்கள்?5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.6விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:7 கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.8ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?9காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?10ஜாதிகளைத் தண்டிக்கிறவர் கடிந்து கொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?11மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார்.12 கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி,13சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான்.14 கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.15நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.16துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?17 கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும்.18என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.19என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.20தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?21அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.22கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.23அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார்.
Leave a Reply