Scripture Portion: Proverbs 13-15

நீதிமொழிகள் 13

1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.
2மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.
3தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்.
5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.
6நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
7ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.
8மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான்.
9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோகும்.
10அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
12நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
14ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
15நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.
16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
17துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம்.
18புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.
19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
20ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
21பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
22நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
23ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
24பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கெனவே தண்டிக்கிறான்.
25நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.

நீதிமொழிகள் 14

1புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
2நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.
3மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
4எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
5மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
6பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய்வரும்.
7மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.
8தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
10இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
11துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
12மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
13நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
14பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
17முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
18பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
19தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
20தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.
21பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
22தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.
23சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.
24ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.
25மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
26கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
27கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
28ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.
29நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.
30சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.
31தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.
32துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
33புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
34நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
35ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன் மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.

நீதிமொழிகள் 15

1மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
2ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும்.
3 கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
4ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும்.
5மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
6நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு.
7ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல.
8துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
9துன்மார்க்கருடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
10வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
11பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.
15சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.
16சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
17பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.
18கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான்.
19சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
20ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான்.
21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.
22ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
23மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
24கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
25அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
26துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
27பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
28நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
29துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும்.
31ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.
32புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான்.
33 கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *