Scripture Portion: Proverbs 16-18

நீதிமொழிகள் 16

1மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
2மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
3உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
4கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
5மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
6கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
7ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
8அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
9மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
10ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.
11சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
12அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
13நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
14ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
15ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
16பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
17தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
18அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
19அகங்காரிகளோடே கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
20விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.
21இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.
22புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
23ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
24இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.
25மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
26பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
27பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
29கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
30அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
31நீதியின் வழியில் உண்டாகும் நரை மயிரானது மகிமையான கிரீடம்.
32பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
33சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

நீதிமொழிகள் 17

1சண்டையோடுகூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப் பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம்.
2புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான்.
3வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.
4துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
5ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக் குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.
8பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம் போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
9குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
10மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.
11துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான்.
12தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி.
13நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது.
14சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு.
15துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்.
16ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
17சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
18புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான்.
19வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.
21மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை.
22மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும்.
23துன்மார்க்கன், நீதியின் வழியைப்புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான்.
24ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும்.
25மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.
26நீதிமானை தண்டம் பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல.
27அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.
28பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

நீதிமொழிகள் 18

1பிரிந்து போகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக் கொள்ளுகிறான்.
2மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.
3துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும்.
4மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும்.
5வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல.
6மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும்.
7மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி.
8கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
9தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன்.
10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
11ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும்.
12அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
13காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும்.
14மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்?
15புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.
16ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.
17தன் வழக்கிலே முதல் பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனை பரிசோதிக்கிறான்.
18சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும்.
19அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.
20அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான்.
21மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
22மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.
23தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவுகொடுக்கிறான்.
24சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *