Scripture Portion: Proverbs 19-21
நீதிமொழிகள் 19
1மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.2ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.3மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.4செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.5பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.6பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.7தரித்திரனை அவனுடைய சகோதரர் எல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.8ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.9பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.10மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.11மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.12ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.13மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.14வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.15சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.17ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.18நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.19கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.20உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.21மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.22நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி.23கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.24சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.25பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.26தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.27என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.28பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.29பரியாசக்காரருக்கு தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.நீதிமொழிகள் 20
1திராட்சரசம் பரியாசஞ்செய்யும்; மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.2ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.3வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான்.4சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது.5மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.6மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?7நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.8நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான்.9என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்?10வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.11பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும்.12கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார்.13தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய்.14கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான்.15பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம்.16அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடுவாங்கிக்கொள்.17வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக் கற்களால் நிரப்பப்படும்.18ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.19தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.20தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்.21ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது.22தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார்.23வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.24கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி?25பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும்.26ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரை சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான்.27மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும்.28தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.29வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை.30காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.
நீதிமொழிகள் 21
1ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.2மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.3பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம்.4மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே.5ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்.6பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும்.7துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள்.8குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன்.9சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம்.10துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது.11பரியாசக்காரனை தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான்.12நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார்.13ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.14அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும்.15நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.16விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்.17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.18நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.19சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம்.20வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.21நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.22பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.23தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான்.24அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பேர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான்.25சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும்.26அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான்.27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.28பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.29துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.30 கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.
Leave a Reply