Scripture Portion: Proverb 27-29
நீதிமொழிகள் 27
1நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமை பாராட்டதே; ஒரு நாள் பிறப்பிப்பதை அறியாயே.2உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.3கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.4உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?5மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.6சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.7திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.8தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.9பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.10உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி.11என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து,12விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறார்கள்.13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.14ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.16அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.17இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேதிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.19தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.20பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.21வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.22மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.23உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.24செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?25புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.26ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.27வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும் உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.நீதிமொழிகள் 28
1ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.2தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும்.3ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான்.4வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப் பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.5துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள்.6இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி.7வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.8அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.9வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.10உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள்.11ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான்.12நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்து கொள்ளுகிறார்கள்.13தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.14எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான்.15ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்து திரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான்.16பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான்.17இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம்.18உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான்.19தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான்.20உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.21முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ் செய்வான்.22வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான்.23தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான்.24தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன்.25பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.26தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.27தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும்.28துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.
நீதிமொழிகள் 29
1அடிக்கடி கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.2நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.3ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.4நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.5பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.6துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.7நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.8பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.9ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.10இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.11மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.13தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங்கொடுக்கிறார்.14ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.15பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.16துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.17உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல் செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவு கொடான்.20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.21ஒருவன் தன் அடிமையைச் சிறு பிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.22கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.23மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.24திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.25மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.26ஆளுகை செய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.27நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.
Leave a Reply