Scripture Portion: 2 kings 5-8
2 இராஜாக்கள் 5
1சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான்.2சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறுபெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.3அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள்.4அப்பொழுது அவன் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தான்.5அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது போகலாம், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிருபம் தருகிறேன் என்றான்; அப்படியே அவன் தன் கையிலே பத்துத்தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்னையும், பத்து மாற்றுவஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய்,6இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கிவிட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது.7இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கிவிடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்க சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான்.8இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியை தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான்.9அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான்.10அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான்.11அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன்.12நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான்.13அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம்பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள்.14அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான்.15அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.16அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான்.17அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை.18ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான்.19அதற்கு அவன்: சமாதானத்தோடே போ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது,20தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு,21நாகமானைப் பின்தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான்.22அதற்கு அவன்: சுகசெய்திதான்; தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைதேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான்.23அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்றுவஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்துபோக, தன் வேலைக்காரரான இரண்டுபேர்மேல் வைத்தான்.24அவன் மேட்டண்டைக்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள்.25பின்பு அவன் உள்ளேபோய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான்.26அப்பொழுது அவன் இவனைப்பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவர தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?27ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப்போனான்.2 இராஜாக்கள் 6
1தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது.2நாங்கள் யோர்தான்மட்டும்போய் அவ்விடத்தில் ஒவ்வொருவர் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான்.3அவர்களில் ஒருவன்: நீர் தயவுசெய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி,4அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள்.5ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான்.6தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி,7அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்.8அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான்.9ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான்.10அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.11இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.12அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.13அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.14அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.15தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.16அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.17அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.18அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.19அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.20அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, இவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.21இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.22அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக்கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்.23அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.24இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான்.25அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள்.26இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின்மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள்.27அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி,28ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள்.29அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்து விட்டாள் என்றாள்.30அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள்.31அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான்.32எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான்.33அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.2 இராஜாக்கள் 7
1அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டுமரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.2அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான்.3குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?4பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,5சீரியருடைய இராணுவத்திற்குப் போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை.6ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்குவர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி,7இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன் மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள்.8அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்து புசித்துக் குடித்து, அதிலிருந்த வெள்ளியையும், பொன்னையும், வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு போய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து,9பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள்.10அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்த பிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள்.11அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள்.12அப்பொழுது இராஜா இராத்திரியில் எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: சீரியர் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றான்.13அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான்.14அப்படியே இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்து போகும்படி அனுப்பினான்.15அவர்கள் யோர்தான்மட்டும் அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்துபோட்ட வஸ்திரங்களாலும் தட்டுமுட்டுகளாலும் வழியெல்லம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள்.16அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.17ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே, அவன் செத்துப்போனான்.18இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒருசேக்கலுக்கும், ஒருமரக்கால் கோதுமைமா ஒருசேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது.19அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே.20அந்தப் பிரகாரமாகத்தானே அவனுக்கு நடந்தது; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே அவன் செத்துப்போனான்.
2 இராஜாக்கள் 8
1எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாகிலும் சஞ்சரி; கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழு வருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.2அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில்போய், ஏழுவருஷம் சஞ்சரித்தாள்.3ஏழுவருஷம் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தை விட்டுத் திரும்பவந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடும்படி போனாள்.4அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனுஷனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாய்ச் சொல் என்றான்.5செத்துப்போனவனை உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது, இதோ, அவன் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த ஸ்திரீ; எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன்தான் என்றான்.6ராஜா அந்த ஸ்திரீயைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரித்துச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்கு ஒரு பிரதானியை நியமித்து, அவளுக்கு உண்டானது எல்லாவற்றையும், அவள் தேசத்தை விட்டுப்போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கும்படி செய் என்றான்.7சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது,8ராஜா ஆசகேலை நோக்கி: நீ உன் கையிலே ஒரு காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனுஷனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று அவனைக் கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான்.9ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய குமாரன் என்னை உம்மிடத்தில் அனுப்பி, இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான்.10எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லு; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான்.11பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக்கொண்டே அழுதான்.12அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான்.13அப்பொழுது ஆசகேல், இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான்.14இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன், நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி,15மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவன் முகத்தின்மேல் விரித்தான்; அதினால் அவன் செத்துப்போனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாய் ராஜாவானான்.16இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாயிருக்கையில், யோசபாத்தின் குமாரனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ராஜ்யபாரம்பண்ணத் துவக்கினான்.17அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்.18அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.19 கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை.20அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.21அதினாலே யோராம் சகல இரதங்களோடுங்கூடச் சாயீருக்குப் புறப்பட்டுப் போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தபோது, ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.22அப்படியே யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம் பண்ணினார்கள்; அக்காலத்தில்தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.23யோராமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.24யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான்.25இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய பன்னிரண்டாம் வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா ராஜாவானான்.26அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம் பண்ணினான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அத்தாலியாள்.27அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தங்கலந்திருந்தான்.28அவன் ஆகாபின் குமாரனாகிய யோராமோடேகூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணப்போனான்; சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள்.29ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.
Leave a Reply