Scripture Portion: 2 kings 12-13, 2Chronicles 24

2 இராஜாக்கள் 12

1யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பது வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள்.
2ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
3மேடைகளை மாத்திரம் அகற்றவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்.
4யோவாஸ் ஆசாரியரை நோக்கி: பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும், இலக்கத்திற்குட்படுகிறவர்களின் பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும்படி, அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும்,
5ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுது காண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான்.
6ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருஷமட்டும் ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனபடியினால்,
7ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனதென்ன? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான்.
8அப்பொழுது ஆசாரியர்கள் ஜனத்தின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபாராமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள்.
9ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள்.
10பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி,
11எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும்,
12கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள்.
13கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், கீதவாத்தியங்களும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல்,
14கர்த்தருடைய ஆலயத்தைப் பழுது பார்க்கும்படிக்கு வேலை செய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள்.
15வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக்கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள்.
16குற்றப்பிராயச்சித்தப் பணமும் பாவபிராயச்சித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியரைச் சேர்ந்தது.
17அதற்குப் பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின் பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான்.
18அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணிவைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம் பண்ணிவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்து சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப்போனான்.
19யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
20யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்.
21சிமியாதின் குமாரன், யோசகார் சோமேரின் குமாரன் யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 13

1அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
2கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றி நடந்தான்; அவைகளை விட்டு அவன் விலகவில்லை.
3ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார்.
4யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்தார்.
5கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள்.
6ஆகிலும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள் விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரகத்தோப்பும் நிலையாயிருந்தது.
7யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரரையும், பத்து இரதங்களையும், பதினாயிரம் காலாட்களையுமே அல்லாமல், ஜனங்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்துப் போரடிக்கும் இடத்துத் தூளைப்போல ஆக்கிப்போட்டான்.
8யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
9யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம் பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
10யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
11கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளிலெல்லாம் நடந்தான்.
12யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் யுத்தம்பண்ணின வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
13யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
14அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான்.
15எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான்.
16அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து:
17கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது; நீர் ஆப்பெக்கிலே சீரியரைத் தீர முறிய அடிப்பீர் என்றான்.
18பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்று தரம் அடித்து நின்றான்.
19அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசை மாத்திரம் முறிய அடிப்பீர் என்றான்.
20எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.
21அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.
22யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான்.
23ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்கச் சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார்.
24சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இறந்துபோய், அவன் குமாரனாகிய பெனாதாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவான பின்பு,
25யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், ஆசகேலோடே யுத்தம்பண்ணி, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவன் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக்கொண்டான்; மூன்று விசை யோவாஸ் அவனை முறிய அடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.

2 நாளாகமம் 24

1யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.
2ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
3அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
4அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.
5அவன் ஆசாரியரையும் லேவியரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.
6அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கி வருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன?
7அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவு பண்ணிப்போட்டார்களே என்றான்.
8அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து,
9 கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள்.
10அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டு வந்து பெட்டி நிறைய அதிலே போட்டார்கள்.
11வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்கு நாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
12அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி கல்தச்சரையும், தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
13அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள்.
14அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அதினாலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள்.
15யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான்.
16அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மை செய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
17யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான்.
18அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது.
19அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பப்பண்ணக் கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் ஜனங்களைத் திடச்சாட்சியாகக் கடிந்து கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் செவிகொடுக்கவில்லை.
20அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.
21அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
22அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்று போட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.
23மறுவருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள்.
24சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள்.
25அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.
26அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே.
27அவன் குமாரரைப்பற்றியும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *